`இது தரமான சம்பவத்துக்குக் கிடைத்த சர்வதேச விருது' - இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த கேரளா! | kerala organic farmers union get award from china

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (22/05/2019)

கடைசி தொடர்பு:14:50 (22/05/2019)

`இது தரமான சம்பவத்துக்குக் கிடைத்த சர்வதேச விருது' - இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த கேரளா!

வ்வோர் ஆண்டும் சீன நகராட்சியான சிகாங் (Xichong), இயற்கை வேளாண் கூட்டமைப்பின் சர்வதேச சங்கமான IFOAM உடன் இணைந்து இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு கெளரவப் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கேரளா இயற்கை விவசாயிகள் சங்கம் (Kerala jaiva karshaka samithi) அந்த கெளரவப் பதக்கத்தைப் பெற இருக்கிறது.

25 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கேரளச் சங்கத்திற்கு, இப்போது சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது இந்தியாவிற்கே கிடைத்த பெருமை என்றே சொல்லலாம். இயற்கை வேளாண் உற்பத்தியில் பல புதுமைகளைப் புகுத்தி விவசாயிகளை தற்சார்பு நிலையை அடைய வைப்பதே இந்தச் சங்கத்தின் முக்கிய நோக்கம். இந்தப் பதக்கத்தை வரும் மே 30-ம் தேதி தென் கொரியாவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் சங்கத்தின் நிர்வாகிகள் பெற்றுக்கொள்ள இருக்கிறார்கள். பதக்கத்துடன் 5,000 அமெரிக்க டாலரும் (இந்திய மதிப்பில் 3.5 லட்சம்) பரிசுத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது.

கேரளா இயற்கை விவசாயம்

இந்தச் சங்கம் அப்படி என்ன தரமான சம்பவம் செய்திருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். கிட்டத்தட்ட 15,000 சிறு, குறு மற்றும் பெரு விவசாயிகளைக் கொண்ட இந்தச் சங்கம் நிதிக்காக யாரையும் அணுகுவதில்லை. 2 சென்ட் முதல் பல ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் இந்தச் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இணைந்து தங்களால் முடிந்த சிறு தொகையை மட்டுமே சங்கத்தின் செயல்பாடுகளுக்காகக் கொடுக்கின்றனர். சிறு துளி பெரு வெள்ளமாக மாறி சங்கத்தை கடந்த 25 வருடங்களாகச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

இயற்கை விவசாயம் தவிர, மரபு விதைகளையும் பாதுகாத்து அதைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு நாட்டு ரக நெற்பயிர்களை விதைக்க ஊக்கப்படுத்துகின்றனர். காய்கறி பயிர்களில் வெண்டை, கத்திரிக்காய், பீன்ஸ் உள்ளிட்ட மரபு விதைகளையும் பயிர் செய்துள்ளனர். மரபு விதைகளைப் பெருக்கும் நோக்கில் அதை விற்பனையும் செய்கின்றனர். இளைஞர்கள் பலரும் இயற்கை விவசாயம் பக்கம் திரும்பி உள்ளனர். ஆனால் அவர்களுக்கு எங்கிருந்து தொடங்குவது எனத் தெரிவதில்லை. அவர்களுக்கென 20 நாள் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) பயிற்சி வகுப்புகளும் எடுக்கின்றனர். 20 நாளும் 20 வித்தியாசமான நிலங்களுக்கு அழைத்துச் சென்று செய்முறை விளக்கம் தருகின்றனர்.

கேரளா இயற்கை விவசாயம்

இங்குப் பாடம் எடுப்பவர்கள் ஆசிரியர்கள் மட்டுமல்ல, இந்தக் குழுவைச் சேர்ந்த இயற்கை விவசாயிகளும்தான். அதனால் விவசாயிகள் தன் சொந்த அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வர். வயலில் இறங்கி வேலை செய்ய மட்டுமன்றி இயற்கை விவசாயத்தின் வரலாறு முதல் நவீன இயற்கை விவசாய முறைகள் வரை அனைத்தும் கற்பிக்கப்படுகிறது. நச்சுத்தன்மை உள்ள வேதிப்பொருள்கள் நாம் உண்ணும் உணவில் மட்டும் இல்லை. நம்மைச் சுற்றியுள்ள பல வீட்டு உபயோக பொருள்களிலும் நச்சு பொருள்கள் உள்ளன.

அதைக் கண்டறிவது எப்படி மற்றும் நச்சுத்தன்மையற்ற வீடுகளைப் பராமரிக்கும் வழிமுறைகளைக் குழந்தைகள் மற்றும் பெண்களிடம் எடுத்துக் கூறுகின்றனர். இதைத் தவிர ஒவ்வோர் ஆண்டும் இயற்கை வேளாண் திருவிழா நடத்துகின்றனர். அதில் பல்வேறு மாநில விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துவர். அதில் பல மாநில விவசாயிகளுக்கும் விருது கொடுக்கப்படுகிறது. இவர்களின் கோரிக்கைக்கு ஏற்றவாறு அரசாங்கமும் இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

கேரளாவை சிக்கிம் மாநிலத்தைப் போல 100 சதவிகித இயற்கை விவசாய மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் தொடர்ந்து 25 ஆண்டுகளாக இந்தச் சங்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இத்தகைய செயல்பாடுகளுக்காகத்தான் இப்போது விருது கொடுக்கப்படுகிறது.