தனியார்ப் பேருந்துகளுக்குச் சவால் விடும் SETC சொகுசு பேருந்துகள் - களமிறங்கும் லீரா! | New luxury SETC bus models testing in Tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 18:54 (22/05/2019)

கடைசி தொடர்பு:19:31 (22/05/2019)

தனியார்ப் பேருந்துகளுக்குச் சவால் விடும் SETC சொகுசு பேருந்துகள் - களமிறங்கும் லீரா!

தனியார்ப் பேருந்துகளுக்குச் சவால் விடும் SETC சொகுசு பேருந்துகள் - களமிறங்கும் லீரா!

அரசு போக்குவரத்துக் கழகம் என்றாலே பராமரிப்பற்ற பேருந்துகள், கிழிந்த மற்றும் இடவசதியற்ற இருக்கைகள், தாமதமான பயணமென்று பல எதிர்மறையான கருத்துகள் இருந்துவந்த நிலையில் டிக்கெட் விலையேற்றம் மேலும் ஒரு பெரிய அடியைத் தந்தது. விலைக்கேற்ற அதிநவீன சொகுசான வசதிகள், குறித்த நேரத்தில் சென்றடைவது, குறைவான விலை எனத் தனியார் ஆம்னி பேருந்துகள் பக்கம் பயணிகள் அதிகம் செல்ல தொடங்கிவிட்டனர். இதனால், அரசுப் பேருந்துகளின் பயன்பாட்டை அதிகரிக்க அதிநவீன வசதிகள் கொண்ட புதிய பேருந்துகளை வாங்கும் திட்டத்தை 2018-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது MG Automotives எனும் பஸ் கோச் நிறுவனம் தயாரிக்கும் சொகுசுப் பேருந்துகளை SETC தமிழகத்தில் டெஸ்ட் செய்து வருகிறது.

SETC

கடந்த ஆண்டு இறுதியில், தனியார்ப் பேருந்துகளுக்கு கோச் தயாரிக்கும் நிறுவனங்களான SM கண்ணப்பா'ஸ், பிரகாஷ், ஏரோ, சக்தி போன்ற கோச்களிடம் ஒப்பந்தம் போடப்பட்டு AIS 052 பாடி டிசைனில் அல்ட்ரா டீலக்ஸ், ஏசி மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் உருவாக்கப்பட்டு பல்வேறு வழித்தடங்களில் சிவப்பு, நீல நிற பஸ்களாக இயங்கத் தொடங்கிவிட்டார்கள். இந்த ஆண்டு, கர்நாடகாவைச் சார்ந்த MG Automotives எனும் நிறுவனத்தோடு புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்காக (SETC) அதிநவீன `லீரா' எனும் புதிய குளிர்சாதன படுக்கை மற்றும் இருக்கை வசதிகள் கொண்ட சொகுசுப் பேருந்துகள் வரவுள்ளன.

Leera Model SETC BUS

லீரா எனும் மாடல் BS IV அசோக் லேலாண்ட் சேஸியில் தயாராகிறது. இந்தப் பேருந்துகள் பெரிய முன்புறக் கண்ணாடி, தானியங்கி கதவுகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், டேஷ் போர்டு கேமரா, ABS பிரேக்ஸ் எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன. உட்புறத்தில் நல்ல இடவசதி கொண்ட டிரைவர் கேபின், GPS, மைக் போன்ற வசதிகள் இதில் இருக்கிறது. 15 படுக்கைகளும் 30 இருக்கைகளும், டிரைவர் கேபின் உட்பட முழுமையான ஏசி கேபின் கொண்ட இந்தப் பேருந்துகளில் தற்போது இருப்பதை விட இருமடங்கு இடவசதி, மொபைல் சார்ஜிங் பாய்ன்ட், ரீடிங் லைட்ஸ் எனத் தனியார்ப் பேருந்துகளுக்கு நிகராக இருக்கும். பாதுகாப்பு சிறப்பம்சங்களாக CCTV கேமரா, அவசரக்கால அழைப்பு, எமர்ஜன்சி டோர், மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

லீரா மாடல் பஸ்

இந்தப் பேருந்தின் உட்புறம் எளிதில் தீ பற்ற முடியாத பாகங்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த மாடல் வால்வோ, ஸ்கானியா போன்ற பேருந்துகளுக்கு நிகரான தரத்திலும் சொகுசிலும் இருக்கும். சோதனை ஓட்டம் முடிந்த இந்த பஸ்கள் ரெஜிஸ்டிரேஷனுக்காகக் காத்திருக்கும் நிலையில், இரண்டு சொகுசுப் பேருந்துகளை சென்னை-பெங்களூர் வழித்தடத்தில் இயக்கியபின் மற்ற வழித்தடங்களுக்கு இந்தப் பேருந்துகளை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே கேரளா மாற்று கர்நாடக அரசு போக்குவரத்துக்குக் கழகங்கள் வால்வோ, ஸ்கானியா போன்ற அதிநவீனப் பேருந்துகளை கொண்டுள்ள நிலையில் தற்போது இந்தப் புதிய பேருந்துகள் அதற்கு ஈடாக அமையும் என்று அரசு சார்பில் கூறப்படுகிறது. 

BUS REAR

MG ஆட்டோமோட்டிவ்ஸ் நிறுவனம் அசோக் லேலாண்ட், பாரத் பென்ஸ், ஸ்கானியா, MAN நிறுவனங்களின் சேசிகளுக்கு ட்ரீம்ஸ், கிளைடர்Z, மாமோத், லீரா போன்ற பிரத்யேக மாடல்களில் சொகுசான பேருந்துகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. பாரத் பென்ஸ், அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்களின் பஸ்கள் MG கோச் பில்டர்களால் உருவாக்கப்படுகின்றன. SETC'யில் வரப்போகும் லீரா பேருந்துகள் தற்போது KPN மற்றும் KMS ஆகிய தனியார் நிறுவனங்களிடம் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.


டிரெண்டிங் @ விகடன்