வந்துவிட்டது ஜீ தமிழின் ச ரி க ம ப சீசன் 2! | Zee Tamil Saregamapa season 2

வெளியிடப்பட்ட நேரம்: 19:29 (22/05/2019)

கடைசி தொடர்பு:19:47 (22/05/2019)

வந்துவிட்டது ஜீ தமிழின் ச ரி க ம ப சீசன் 2!

`திறமைப் படைத்த எவரும் சாதிக்க முடியும்', இதுவே ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 'ச ரி க ம ப' பாடல் போட்டியின் தாரக மந்திரம்! 63 வயது மூதாட்டி, தமிழ் தெரியாத ஒரு பஞ்சாப் சிங் மற்றும் 3 இளைஞர்கள் என இப்படித்தான் இருந்தது, சென்ற சரிகமப சீசனின் இறுதி போட்டியாளர் பட்டியல். கறுப்பு, வெள்ளை, நெட்டை, குட்டை, ஏழை, பணக்காரர், ஊனம், சாதி, மதம்... போன்ற பிரிவினைகளை எல்லாம் தாண்டி, போட்டியாளர்களின் இசைத் திறமையை வெளிக்கொண்டுவரும் ச ரி க ம ப-வின் சீனியர்ஸ் சீசன் 2 இப்போது ஆரம்பித்துவிட்டது!

டி.வி. பாடல் போட்டிகளில் இருந்து மாறுபட்டு, வித்தியாசமான நடைமுறைகளைக் கொண்டுவந்து கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சி ச ரி க ம ப. இந்நிகழ்ச்சியைக் கூடுதல் சுவாரஸ்யமாக்கும் கலையை கற்றுவைத்திருப்பவர் நிகழ்ச்சியின் 'கலகல' தொகுப்பாளினி அர்ச்சனா. இதுவரை ஜாம்பவ பாடகர்களான ஸ்ரீநிவாஸ், சுஜாதா, விஜய் பிரகாஷ், கார்த்திக் உள்ளிட்டோரை நடுவர்களாக களமிறக்கியுள்ளது ச ரி க ம ப. நடுவர்கள், பார்வையாளர்கள் & போட்டியாளர்களை, நிகழ்ச்சியின் கடைசிவரை உற்சாகமாக வைக்க பொழுதுபோக்கிற்காக பல விஷயங்களை செய்து மக்கள் மனதைக் கவரத் தவறுவதில்லை ச ரி க ம ப. தமிழ் மொழி தெரியாமல் சொந்த ஊரைவிட்டு வந்தவர்கள், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், எங்கோ ஒரு மூலையில் வீட்டுவேலை செய்து வந்தவர் எனத் திறமை எங்கிருந்தாலும் அவர்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறது இந்த மேடை!

சென்ற சீசன்...

ச ரி க ம ப சீனியர்ஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் கடந்த ஏப்ரல் மாதம் முடிவுற்றது. அதில் 'கோல்டன் கேர்ள்' வர்ஷா வெற்றிபெற்று ரூபாய் நாற்பது லட்சம் மதிப்புள்ள வீட்டைப் பரிசாகப் பெற்றார். சமூகவலைதளங்களில் ட்ரெண்ட்டான, 63 வயது `ராக் ஸ்டார்' ரமணி அம்மாள் முதல் ரன்னர்-அப் ஆக வெற்றிபெற்றார். ``வீட்டு வேலை செய்துவந்த எனது வாழ்வையே மாற்றியது சரிகமப நிகழ்ச்சிதான்", என மெச்சுகிறார் ரமணி அம்மாள். மொழி தெரியாமல் பைனல் போட்டி வரைக்கும் வந்த பஞ்சாபைச் சேர்ந்த 18 வயது ஜஸ்கரன் சிங்கிற்கு `சீசனின் சிறந்த பொழுதுபோக்காளர்' விருது வழங்கி கவுரவித்தது ச ரி க ம ப மேடை.

புதுப்பொலிவுடன் சீசன் 2 ஆரம்பம்!

இம்முறை ஜீ தமிழ் வழங்கும் ச ரி க ம ப சீனியர்ஸ் சீசன் 2 நிகழ்ச்சி மிகப்பெரிய பிரமாண்ட மேடையில் நம்மைச் சந்திக்க இருக்கிறது. நிகழ்ச்சியைத் தொகுப்பாளினி அர்ச்சனா தொகுத்து வழங்க பாடகர்கள் ஸ்ரீநிவாஸ், சுஜாதா மற்றும் விஜய் பிரகாஷ் முக்கிய நடுவர்களாக அமர... நூறு பேர் கொண்ட நடுவர் குழுவுக்கு முன் திறமைமிக்க குரல்கள் பல வெளிவர உள்ளன. இம்மேடையில் ஏறி பாடவிருக்கும் அத்தனை போட்டியாளர்களும் திறமையை வெளிப்படுத்தி தங்கள் கனவுகளை நனவாக்க போராடவுள்ளனர். அதேநேரம் இந்நிகழ்ச்சியில் வெற்றிபெற்றால் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வின் இசையில் பாட வாய்ப்பு கிடைக்கும் என்பது போட்டியாளர்களுக்கு கிடைத்த மிகப்பெரும் வாய்ப்பாகும். இதனால் இப்போட்டியின் ஆரம்பமே அதகளமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. வாரத்தின் இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு உங்கள் அபிமான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ச ரி க ம ப சீனியர்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியைக் கண்டு மகிழலாம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க