எறும்புத்தின்னி, கடல்குதிரை, தொகே பல்லி... இவற்றையெல்லாம் ஏன் கடத்துகிறார்கள்? | Increased Wildlife trafficking and UN's new initiative to control it

வெளியிடப்பட்ட நேரம்: 16:09 (24/05/2019)

கடைசி தொடர்பு:16:09 (24/05/2019)

எறும்புத்தின்னி, கடல்குதிரை, தொகே பல்லி... இவற்றையெல்லாம் ஏன் கடத்துகிறார்கள்?

இந்தியாவிலிருந்து கடத்தப்படும் உயிரினங்களைப் பற்றிய செய்திகளை நாம் அதிகம் கேட்டிருப்போம். ஆனால், அதைவிட வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் கடத்தல் மூலமாகக் கொண்டுவரப்படும் உயிரினங்களும் உயிரினங்களுடைய உறுப்புகளும் அதிகம். எதனால் இது தொடர்ந்து நடைபெறுகிறது? எப்படி இந்தக் கடத்தல்காரர்கள் உருவாகிறார்கள்?

எறும்புத்தின்னி, கடல்குதிரை, தொகே பல்லி... இவற்றையெல்லாம் ஏன் கடத்துகிறார்கள்?

டம்: சென்னை விமான நிலையம். மார்ச் மாதம். மலேசியா மற்றும் சிங்கப்பூருக்குச் செல்லும் பயணிகள் சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, பதினெட்டு கிலோ மயில் இறகுகள் கிடைத்தன. அவை சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் கடத்தப்படவிருந்தன. சுங்கத் துறை மயில் இறகுகளைப் பறிமுதல் செய்து, விலங்குக் கடத்தல் செய்தவர்களை கைதுசெய்தது.

அதற்கு முந்தைய மாதத்தில் ஒரு நாள். அதே சென்னை விமான நிலையம். பாங்காக்கிலிருந்து வந்திருந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பயணியுடைய கூடையிலிருந்து கீச்சொலிகள் கேட்டுக்கொண்டேயிருந்தன. சத்தம் வந்த பையைச் சோதனையிட்டுப் பார்த்தபோது, கூடைக்குள் சிறுத்தைக் குட்டியொன்று அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதுவும் சட்டவிரோதமாகக் கடத்திக்கொண்டுவரப்பட்டதுதான். 

சென்னையின் சுங்க அதிகாரிகள் இதுபோல் பல உயிரினங்களைக் கடத்தல் கும்பல்களிடமிருந்து மீட்டுள்ளனர். நட்சத்திர ஆமைகள், கடல் அட்டை, எறும்புத் தின்னியுடைய செதில்கள் என்று பலவற்றைப் பல ஆண்டுகளாக அவர்கள் மீட்டுக் கொண்டேயிருக்கின்றனர். இருந்தாலும் இவற்றைக் கடத்துபவர்களின் எண்ணிக்கையும் கடத்தப்படும் உயிரினங்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே போகின்றது. இந்தியாவிலிருந்து கடத்தப்படும் உயிரினங்களைப் பற்றிய செய்திகளை நாம் அதிகம் கேட்டிருப்போம். ஆனால், அதைவிட வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் கடத்தல் மூலமாகக் கொண்டுவரப்படும் உயிரினங்களும் உயிரினங்களுடைய உறுப்புகளும் அதிகம். எதனால் இது தொடர்ந்து நடைபெறுகிறது? எப்படி இந்தக் கடத்தல்காரர்கள் உருவாகிறார்கள்?

எறும்புத்தின்னி

சட்டவிரோதமாக நடந்துகொண்டிருக்கும் சர்வதேச விலங்குக் கடத்தல் உலகளவில் பல்வேறு உயிரினங்களை அழிவின் விளிம்புக்குக் கொண்டு சென்றவண்ணம் இருக்கின்றது. இந்தியாவில் இந்தக் கடத்தல் கும்பல்களின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் அரியவகை உயிரினங்களின் கடத்தலில் இவர்களின் ஈடுபாடு அஞ்சத்தக்க வகையில் வளர்ந்துள்ளது. செல்லப்பிராணிகள், மருத்துவக் குணங்கள், கௌரவம் என்று பல காரணங்களைப் பரப்பிவிட்டு இந்தக் கடத்தலில் லாபம் பார்க்கிறார்கள். விலங்குக் கடத்தலுக்கு மிக முக்கியமான சந்தையாக இருப்பவை சீனாவும் தென்கிழக்கு ஆசிய நாடுகளும்தான். அவை மட்டுமன்றி வளைகுடா நாடுகள், ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற பகுதிகளுக்கு உயிரினங்கள் உயிருடனோ அல்லது சில உறுப்புகளோ கடத்தப்படுகின்றன. இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், இலங்கை, மியான்மார் போன்ற நாடுகள்தான் இந்தக் கடத்தலுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முக்கியமான போக்குவரத்து வழிகளாக இருந்துவருகின்றன. அதாவது இந்தியாவிற்குக் கடத்திக் கொண்டுவருவதைப் போலவே இந்தியாவிலிருந்தும் இந்தியா வழியாகவும் அதிகமான உயிரினங்கள் கடத்தப்படுகின்றன. 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், 65 நட்சத்திர ஆமைகள் பாங்காக் செல்ல இருந்த ஒருவரிடமிருந்து மீட்கப்பட்டன. அக்டோபர் மாதம், 2,300 சிவப்புக் காதுடைய ஸ்லைடர் வகையைச் சேர்ந்த நீர்வாழ் ஆமைகள் பாங்காக்கிலிருந்து வந்த ஒரு பயணியிடமிருந்து மீட்கப்பட்டன. மீண்டும் டிசம்பர் மாதம் அதே வகையைச் சேர்ந்த 4,800 ஆமைகள் பாங்காக்கிலிருந்து வந்த இரண்டு பயணிகளிடமிருந்து மீட்கப்பட்டன. கடந்த ஜனவரி மாதம், சிங்கப்பூர் செல்ல இருந்த ஒரு பயணியிடமிருந்து சுறா மீனின் துடுப்புகளைப் பறிமுதல் செய்தனர். அதேபோல் மார்ச் மாதம் 25-ம் தேதி, ஆப்பிரிக்க பிட் வைப்பர் என்ற விரியன் வகையைச் சேர்ந்த பாம்பு, இரண்டு காண்டாமிருக இகுவானா, மூன்று பாறை இகுவானா, இருபத்திரண்டு எகிப்திய நிலத்து ஆமைகள், நான்கு நீல நாக்கு அரணைகள், மூன்று பச்சை மரத் தவளைகள் ஆகியவை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. இங்கிருந்து தெற்காசியப் பகுதிகளுக்கும் தெற்காசியப் பகுதிகளிலிருந்து இங்கும் என்று விலங்குக் கடத்தல் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கிறது. 

விலங்குக் கடத்தல்

சத்தமிட்டு, கடத்தியவரை மாட்டிவிட்ட சிறுத்தைக் குட்டி

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு எதையெல்லாம் கடத்த வேண்டுமென்று ஒரு பட்டியலே இவர்களிடம் உள்ளது. அதில் இருப்பவை பெரும்பாலும் பாதுகாக்கப்பட வேண்டியவை. ஆனால் அழியும் நிலையிலிருக்கும் உயிரினங்களே. அந்தப் பட்டியலின்படி ஒவ்வொரு விலங்குக்கும் பறவைக்கும் ஒவ்வொரு விலை. புலி, சிறுத்தை போன்ற பெரும் பூனைகளின் தோல், எலும்புகள், பற்கள்தான் இதில் அதிக விலைக்குப் போகின்றன. காண்டாமிருகக் கொம்புகள், தந்தங்கள், கடல் ஆமைகள், நிலத்து ஆமைகள், கடல் குதிரை, சில பாம்புகளின் நஞ்சு, கீரியுடைய தோல், பாம்புத் தோல், தொகே என்ற பல்லி வகை (Tokay Gecko), கடல் அட்டை, சிரு (Chiru) என்கிற மறிமான் வகை, கரடிக் குட்டிகள், மூலிகைத் தாவரங்கள், செம்மரம், கூண்டில் வளர்க்கக்கூடிய பறவைகளான கிளி, மைனா, சில்லை போன்ற புள்ளினங்கள் என்று ஒரு நீண்ட பட்டியலையே அவர்கள் வைத்துள்ளார்கள். அந்தப் பட்டியலைப் பார்த்தால் இவையெல்லாம் இந்தியாவில் இருக்கின்றனவா என்றுகூட நீங்கள் நினைக்கலாம். சிரு என்கிற மறிமான் வகையின் தற்போதைய எண்ணிக்கையே இருபத்தைந்துதான். இந்த அளவுக்கு அவற்றின் எண்ணிக்கை குறைந்ததற்கு விலங்குக் கடத்தல்தான் மிக முக்கிய காரணம். 

இந்தப் பட்டியலில் எளிதாகவும் அதிகமாகவும் கடத்தப்படுவது எறும்புத்தின்னி செதில்கள், கடல் குதிரை, ஆமை போன்றவையே. இவற்றைப் பெரிதாக இடத்தை அடைக்காமல் எளிதில் மறைத்துக்கொண்டுசெல்ல முடியும். பைகளை மொத்தமாகப் பிரித்துச் சோதனையிட்டால் ஒழிய இவை தெரியவருவது சிரமம். 2009-ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டுவரை மொத்தமாக 5,772 எறும்புத்தின்னிகள் கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. கடல் குதிரைகள் பெரும்பாலும் மருத்துவக் குணங்களைக் காரணம் காட்டி விற்கப்படுகின்றன. அதற்காகவே அவை அதிகமாகக் கடத்தப்படுகின்றன. இந்த மூன்றிலுமே உலகளவில் அதிக டிமாண்டு இருப்பது நட்சத்திர ஆமைகளுக்குத்தான். அதைச் செல்லப்பிராணியாக வளர்ப்பதில் உலகளவில் ஆர்வமுள்ள ஆட்களிடம் பேராசையைத் தூண்டிவிட்டு லாபம் பார்க்கிறார்கள். 

எறும்புத்தின்னி, கடல் குதிரை, நட்சத்திர ஆமைகளின் பட்டியலில் சமீபகாலமாக தொகே என்ற பல்லியும் சேர்ந்துள்ளது. இவை அதிகமாக வடகிழக்கு இந்தியாவில் அதிகம் மீட்கப்படுகின்றன. இது எய்ட்ஸ் நோய்க்கு மருந்தாகின்றது என்ற வதந்தியைக் கிளப்பிவிட்டுக் கடத்தல் கும்பல்கள் இதை விற்பனை செய்கிறார்கள். கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான தொகே பல்லிகளைப் பறிமுதல் செய்து காட்டில் விட்டுள்ளது சுங்கத் துறை. போதுமான புரிதல் இல்லாதது, அநாமதேயமான மின்னணு வணிகம், பேராசை, போதிய பாதுகாப்பு இல்லாமை ஆகியவையே இந்த மாதிரியான விலங்குக் கடத்தல்களுக்கு அதிகமாக வழிவகுக்கின்றன. இந்த விஷயங்கள் அதிகமாக இருக்கும் இந்தியா இந்தக் கடத்தல் கும்பல்களுக்கு முக்கியமான பகுதியாக இருக்கின்றது. 

இகுவானா

இங்கு வலிமையான சட்டங்கள் இருக்கின்றன. இருந்தாலும் இதுபோன்ற ஆபத்தான குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. இங்கு வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். அதுதான் அதற்குக் காரணம் என்கிறது ஐக்கிய நாடுகள் அமைப்பு. வேலையில்லாத் திண்டாட்டம் வறுமையை உற்பத்தி செய்கின்றது. அந்த வறுமை துணிந்து குற்றச் செயல்களில் ஈடுபடத் தூண்டுகிறது. அந்தத் தூண்டுதலை வழங்கக் கடத்தல் கும்பல்கள் கழுகுக் கண்களோடு அலைந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி சர்வதேசச் சந்தையில் கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். 

இந்தியா. பூமியின் மொத்த பரப்பளவில் 2.4 சதவிகிதம்தான். ஆனால், பூமியின் மொத்த காட்டுயிர் வளங்களில் 8 சதவிகிதம் இங்குதான் உள்ளது. 45,000 வகையான தாவரங்களும் 91,000 வகையான விலங்குகளும் அதில் அடக்கம். இங்கு 662 வனப்பகுதிகள் பட்டியல் ரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. 

அதிகமாகிவரும் விலங்குக் கடத்தல் குற்றங்களைத் தடுக்க இந்திய வனவிலங்குக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.நா-வின் சுற்றுச்சூழல் துறையோடு இணைந்து ஓர் முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. விமான நிலையத்தில் நகர்ந்து கொண்டேயிருக்கக் கூடிய கண்காட்சி ஒன்றைத் தொடங்கப் போகிறார்கள் விலங்குக் கடத்தலால் ஏற்படும் சூழலியல் சீரழிவுகளைப் பற்றிய கண்காட்சியை தொடர்ச்சியாகச் செய்வதன் மூலம் மக்கள் மத்தியில் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். அதோடு இதன்மூலம் விலங்குக் கடத்தலுக்கு எதிராக மக்களுடைய ஆதரவையும் பெறுவதே இந்தக் கண்காட்சியின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது. 

``சர்வதேச அளவில் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் இந்தக் கடத்தல் கும்பல் ஏற்படுத்தும் டிமாண்டுதான் இந்தக் குற்றங்கள் அதிகமாவதற்குக் காரணம். ஒருங்கிணைக்கப்பட்ட இந்தக் குற்றவியல் நடவடிக்கைகளைக் களைய மக்களின் ஆதரவும் வேண்டும். அதற்காகத் தன்னார்வ அமைப்புகள், அரசாங்கம், பொதுமக்கள் என்று அனைவருடைய ஒத்துழைப்பும் இதில் தேவைப்படுகிறது" என்கிறார் இந்திய வனவிலங்குக் கடத்தல் தடுப்புப் பிரிவின் துணை இயக்குநர் திலோத்தமா வர்மா. 

கடத்தப்படும் தவளைகள்

செல்லப் பிராணிகளாக எதை வாங்குகிறோம் என்பதைத் தெரிந்துகொண்டு அதைப் பற்றிய தகவல்களை அறிந்துகொண்டு பிறகு வாங்குங்கள். ஒருவேளை நீங்கள் வாங்கும் பறவை சட்டப்படி பாதுகாக்கப்பட்டதாக இருக்கலாம். அதை நீங்கள் வாங்கியது சட்டவிரோதமாகக்கூட இருக்கலாம். 

விமான நிலையங்களில் நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்று மட்டும்தான். உங்கள் அருகில் ஏதாவது விலங்கு அல்லது பறவையின் குரல் கேட்டாலோ சந்தேகப்படும் விதத்தில் எதையாவது நீங்கள் பார்த்தாலோ அப்படியே கடந்து சென்றுவிடாதீர்கள். அங்கிருக்கும் சுங்கத் துறை அதிகாரிகளிடம் தெரியப்படுத்துங்கள். யார் கண்டது, உங்கள் அருகிலேயே ஒரு புலிக்குட்டி கூடைக்குள் தூங்கிக்கொண்டிருக்கலாம். ஒருவேளை அது உங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால் அல்லது தெரியவந்தால் தாமதிக்காமல் தெரியப்படுத்துங்கள்.


டிரெண்டிங் @ விகடன்