Published:Updated:

பள்ளிக்கூடம் ஜாக்கிரதை!

பள்ளிக்கூடம் ஜாக்கிரதை!
பள்ளிக்கூடம் ஜாக்கிரதை!

பள்ளிக்கூடம் ஜாக்கிரதை!

அரசு எத்தனை சட்டங்கள் போட்டாலும் தனியார் பள்ளிக் கூடங்களின் அட்டகாசங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிகக் கட்டணம் வாங்குவது, சமச்சீர்க் கல்வித் திட்டம் வந்தும் இன்னும் தேவை யில்லாத மெட்ரிக் பாடங்களை நடத்துவது, ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்புப் பாடங்களை நடத்துவது, மருத் துவம், பொறியியல் கல்விக்கே அரசு நுழைவுத் தேர்வை ரத்து செய்தும், இவர்கள் மட்டும் எல்.கே.ஜி. குழந்தைகளுக்கு நுழைவுத் தேர்வுவைப்பது என்று தங்களது வழக்கமான கல்விச் 'சேவை’யைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது மக்களிடமிருந்து கூடுதல் பணம் பறிப்பதற்காக, புதுப் புது திட்டங்களையும் அமல்படுத்திவருகிறார்கள். அப்படி மதுரை தனியார் பள்ளிகளின் சில 'அடடே’ பிளான்களைப் பார்ப்போம். 

மதுரையில் ஒரு பிரபலமான பள்ளி உள்ளது. எல்.கே.ஜி-க்கே வருடத்திற்கு 50,000 பீஸ் வாங்குகிறவர்கள், திடீரென்று, தங்கள் பள்ளியில் 'ஃப்ரீ எஜுகேஷன் ஸ்கீம்’ ஆரம்பித்திருப்பதாக விளம்பரம் செய்தார்கள். இது போதாதா, பள்ளிக்குப் படையெடுத்தார்கள் பாவப்பட்ட பெற்றோர்கள். வந்தவர்களை ஒரு ஹாலில் அமரவைத்து, ஐஸ்க்ரீம் குரலில் இரண்டு பெண்களைப் பேசவிட்டார்கள். ''பெற்றோர்களின் கஷ்டத்தைக் குறைக்கும் விதமாக, எங்கள் நிர்வாகம் இந்த ஃப்ரீ எஜுகேஷன் ஸ்கீமைத் துவக்கியுள்ளது. இதில் உங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பது ரொம்ப சுலபம். ஐந்து லட்ச ரூபாயை, எங்கள் பள்ளியில் டெபாசிட் செய்தால் போதும், ஐந்து வருடத்திற்கு எந்தக் கட்டணமும் கட்ட வேண்டியதில்லை. ஐந்து வருடம் முடிந்து உங்கள் பணம் திருப்பித் தரப்படும். பத்து லட்சம் டெபாசிட் செய்தால், பத்து வருஷத்துக்கு ஃபீஸ் கட்ட வேண்டியதில்லை'' என்று, அந்தப் பெண்கள் பேசப்பேச, வந்திருந்த பெற்றோர்களுக்கு மயக்கம் வராத குறை. இதென்ன, ஸ்கூலா, ஃபைனான்ஸ் கம்பெனியா என்ற கேள்வியை அவர்களிடம் கேட்க முடியாமல், ஸ்கூலைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் பறந்து வந்தார்கள்.

பள்ளிக்கூடம் ஜாக்கிரதை!

தேசமே கொண்டாடும் தலைவரின் பெயரில் ஒரு பள்ளி மதுரையில் பிர பலம். அதனால், இங்கு

பள்ளிக்கூடம் ஜாக்கிரதை!

பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் கியூவில் நிற்பார்கள். மாண்டிசோரி சிலபஸ் என்று சொல்லி, மெட்ரிக் பாடத்தைத்தான் நடத்துவார்கள். அட்மிஷனுக்கு வரும் பெற்றோர்களுக்கு இவர்கள் தரும் தண்டனைதான் இங்கு தனிச் சிறப்பே. பெற்றோர்கள் இங்கு உட்காரவே கூடாது. வெயிலிலேயே நிற்க வேண்டும்.  இதில் சிறப்பாக கால் வலிக்கக் காத்திருக்கும் பெற்றோரை பிரின்சிபால் மனதுவைத்தால்,  அழைப்பார். பெற்றோரின் வேலை, மாத வருமானம் பற்றி விசாரிப்பார். பிறகு பேங்க் பாஸ் புக்கை செக் பண்ணுவார்கள். அது திருப்தி யானால், அட்மிஷனுக்கான ஆரம்ப கட்ட வேலைகள் துவங் கும். ஆனால், அப்போதும் பெற்றோர்களை உட்காரச் சொல்ல மாட்டார் கள்.

ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஒரு வித்தியாசமான நடைமுறை. இந்தப் பள்ளியின் முதல்வர் அட்மிஷன் போட்ட பிள்ளைகளின் பெற்றோரை அழைத்து, ஒரு கடிதம் எழுதி வாங்கிக்கொள்வார். 'என் பிள்ளை படிப்பில் சுமார்தான், அவன் சரியான மதிப்பெண் எடுக்கவில்லையென்றால், நீங்கள் அவனுக்கு எந்தத் தண்டனையும் வழங்கச் சம்மதிக்கிறேன். டி.சி-யைக் கொடுத்தாலும் மகிழ்ச்சியாக வாங்கிக்கொள்வேன். நீங்கள்தான் எங்கள் கடவுள்’ என்கிற ரீதியில்

பள்ளிக்கூடம் ஜாக்கிரதை!

எழுதி, கையெழுத்து வாங்கி வைத்துக்கொள்வார். ''இதெல்லாம் எதுக்கு சார்?'' என்று பெற்றோர்கள் கேட்டால், ''அப்பதான் உங்க பிள்ளை மேல உங்களுக்கு அக்கறையிருக்கும்'' என்பார். இது மட்டுமல்ல, எங்கு யூனிஃபார்ம் வாங்க வேண்டும், எங்கு ஷூ வாங்க வேண்டும் என்று, கடைகளின் விசிட்டிங் கார்டுகளை, அடையாள நம்பர் போட்டு பெற்றோர்களிடம் கொடுப்பார். கடையை மாற்றினால் கண்டுபிடித்துவிடுவார். அப்புறம் என்ன, மறுபடியும் மேற்படிக் கடிதம் எழுத வேண்டும்.

இன்னொரு புரியாத புதிர், ஒரு குழந்தை யு.கே.ஜி. படிக்கும்போது, ஸ்கூல் பஸ்ஸுக்காக ஆண்டுக்கு 10,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதே குழந்தை அடுத்த வருடம் ஒன்றாம் வகுப்பில் சேரும்போது அந்தக் கட்டணம் 14,000 ஆகிவிடுகிறது. அதே வீடு, அதே ஸ்கூல், அதே தூரம். என்ன, குழந்தைக்கு ஒரு வயது அதிகரிக்கிறது. இதற்கு எதற்குக் கூடுதலாக 4,000?

இதைவிடக் கொடுமை, ஸ்கூல் அட்மிஷனை முன்னிட்டு, சில கார்ப்பரேட் ஃபைனான்ஸ் நிறுவனங்கள், வட்டி குறைவாக நகைக் கடன் வழங்குவதாக, பள்ளி வளாகத்திலேயே விளம்பரம் செய்கிறார்கள். இதையும் பள்ளி நிர்வாகமே துவங்கிவிட்டால், கல்விச் 'சேவை’ முழுமை அடையும்!

- செ.சல்மான்    

டைம்பாஸ்

அடுத்த கட்டுரைக்கு