உலக நாடுகளை ஏமாற்றிய சீனா... ஓசோன் படலத்தைச் சிதைக்கும் வாயுவை வெளியிட்டது கண்டுபிடிப்பு | China illegally using ozone Destroying Gases

வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (24/05/2019)

கடைசி தொடர்பு:17:05 (24/05/2019)

உலக நாடுகளை ஏமாற்றிய சீனா... ஓசோன் படலத்தைச் சிதைக்கும் வாயுவை வெளியிட்டது கண்டுபிடிப்பு

ஓசோன்

வளிமண்டலத்தில் சமீப காலமாக அதிகரித்து வந்த ஓசோன் படலத்தைச் சிதைக்கும் வாயுவின் வெளியீட்டுக்கு யார் காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. பூமியைச் சூரியனிலிருந்து வெளியாகும் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் ஓசோன் படலம் அமைந்திருக்கிறது. கடந்த நூற்றாண்டில் அதன் அடர்த்தி வெகுவாகக் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. அதற்கு சில வாயுக்கள்தான் காரணமாக இருந்தன. குறிப்பாக 1928-ம் ஆண்டில் கண்டறியப்பட்ட CFC-11 (trichlorofluoromethane) என்ற வாயு 1980-களின் இறுதிவரை குளிர்பதன சாதனங்கள் மற்றும் நுரை அடங்கிய பொருள்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் 1987-ல் மாண்ட்ரியல் ஒப்பந்தம் மூலமாக இதை உலக நாடுகள் உருவாக்கவும், பயன்படுத்த முழுவதுமாகத் தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வளிமண்டலத்தில் அதன் அளவு குறைந்தது. ஆனால், கடந்த வருடம் அதன் அளவு திடீரென அதிகரித்ததாகத் தகவல் வெளியானது. கிழக்கு ஆசியப் பகுதியிலிருந்து இது வெளிப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டாலும் எந்த இடம் என்பதை உறுதி செய்ய முடியவில்லை. தற்போது அந்தப் பகுதி சீனா என்பதைக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

 சீனா

சீனாவின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் தொழிற்சாலைகள்தான் அதற்குக் காரணம் என்று நேச்சர் அறிவியல் இதழில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டுக்குப் பிறகு மட்டும் இந்தப் பகுதியில் இருந்து ஒவ்வொரு வருடமும் 7000 டன்களுக்கு மேல் CFC-11 வாயு வளிமண்டலத்தில் கலந்திருக்கிறது. விலை குறைவு என்பதால் வீட்டில் இன்சுலேஷன் செய்வதற்கும், குளிர்பதன சாதனங்களில் பயன்படுத்தப்படும் நுரைப் பொருள்களை உருவாக்கவும் CFC-11 வாயுவை அந்தத் தொழிற்சாலைகள் பயன்படுத்தியிருக்கின்றன. இதன் மூலமாக மாண்ட்ரியல் ஒப்பந்தத்தை மீறியிருக்கும் சீனா, உலக நாடுகளையும் ஏமாற்றியிருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.