விவசாயிகளாக மாறிய 80 பள்ளி மாணவர்கள்... வியப்பூட்டும் 2 கிராமங்கள்! | 80 school students turn farmers in these villages

வெளியிடப்பட்ட நேரம்: 20:54 (24/05/2019)

கடைசி தொடர்பு:21:40 (24/05/2019)

விவசாயிகளாக மாறிய 80 பள்ளி மாணவர்கள்... வியப்பூட்டும் 2 கிராமங்கள்!

இந்த மாணவர்களைப் பார்த்து கிராம விவசாயிகளும் இயற்கை விவசாயத்துக்கு மாற ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த மாவட்டம் முழுவதும் இயற்கைக்கு மாறும் காலம் நீண்ட தொலைவில் இல்லை.

விவசாயிகளாக மாறிய 80 பள்ளி மாணவர்கள்... வியப்பூட்டும் 2 கிராமங்கள்!

ள்ளி முடியும் நேரத்தில் மணி ஒலித்தவுடன் குழந்தைகள் அனைவரும் வீடுகளுக்கோ, விளையாட்டு பயிற்சிக்கோ செல்வது வழக்கம். ஆனால், மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் உள்ள தக்கலே மற்றும் கோலிவன் கிராமங்களில் பள்ளி மணி அடித்தவுடன் மாணவர்கள் கூட்டமாக வெளிவருகிறார்கள். ஆனால், அவர்களில் அனைவரும் வீட்டுக்குச் செல்வதில்லை. அவர்களில் ஒரு கூட்டம் சமுதாய நலப் பணி கூடத்துக்குச் செல்கிறது. அங்கே அமைக்கப்பட்டுள்ள பண்ணையில் விவசாயிகளாக மாறி தங்களது வேலையைத் தொடங்கிவிடுகிறார்கள் அந்தக் குழந்தைகள். 6 வயதுக் குழந்தை, விளையாடுவதைவிட, வீட்டுக்குச் சென்று தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் அமர்வதைவிட, விவசாயம் செய்ய ஆர்வம் காட்டுவது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம், ஆனால், இதுதான் உண்மை. 

விவசாயி மாணவர்கள்

அந்த மாணவர்களின் மாலைப்பொழுது இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது. மாலை தங்கள் விவசாய வேலைகளை முடித்துவிட்டுத்தான் வீடு திரும்புகின்றனர். இவர்கள் இயற்கை வழி விவசாய முறையைப் பின்பற்றுகின்றனர். அந்தக் கிராமங்களில் 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் ஆர்வமுடன் இயற்கை விவசாயத்தைச் செய்து வருகின்றனர். அதிகமாகத் தக்காளி, கத்திரி, சாமந்தி, செம்பருத்தி, வெங்காயம் உள்ளிட்ட பயிர்களைப் பயிரிட்டு பராமரிக்கின்றனர். இதன்மூலமாக விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் இயற்கை வழியில் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் மாணவர்கள் உணர்கிறார்கள். 

கோலாப்பூர் மாவட்டம், ஹட்கனங்கேல் (Hatkanangale) தாலுகாவில் உள்ள சமுதாய மையம்தான் அவர்களுடைய பொழுதுபோக்கும் இடம். அவர்களுடைய பொழுதுபோக்குதான் நாம் மேற்கூறிய விவசாயம். அந்த மையத்தில் உள்ள சிறிய நிலப்பரப்பில் ஆரம்பித்த அவர்களுடைய விவசாயம் இப்போது பல மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் திசை திருப்பியுள்ளது. தற்போது பெரிய அளவில் அங்கு நடைபெறும் இயற்கை விவசாயத்தில் அதைத் தொடங்கிவைத்த இந்த இரண்டு கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களின் வேலைகளும் அடக்கம். 

விவசாயம் - விவசாயி

கோலாப்பூர் மாவட்டத்திலிருக்கும் இந்தக் கிராம மக்களில் பெரும்பாலானோர், வெவ்வேறு இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து இங்கு குடியேறியவர்கள். இந்த இடப்பெயர்வு காரணமாக கோலாப்பூர் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் வளர ஆரம்பித்தது. இதனால் மக்கள் தங்களுடைய விவசாய நிலங்களை இழக்க ஆரம்பித்தனர். தாங்கள் செய்து வந்த விவசாயத்தைக் கைவிட்டு நிலத்தை விற்றுத் தினக்கூலிகளாக வேலைக்குச் சென்றனர். பெரும்பாலான விவசாய நிலங்கள் விற்பனையானதால் விளைபொருள்களின் உற்பத்தி குறைய நேர்ந்தது. இதனால் கிராமப் பொருளாதாரம் குறைந்தது. ஆரம்பத்தில் அந்த மக்களுக்கு இது பெரிதாகத் தோன்றவில்லை. நாளடைவில் ஊதியமும் குறைய ஆரம்பித்தபோதுதான், அவர்கள் விவசாய நிலங்களின் பயனை உணரத் தொடங்கினார்கள். இந்த நிலையில்தான் இன்சைட் வாக் (Insight Walk) எனும் அமைப்பு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் விதமாக இயற்கை விவசாயத்தைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தனர்.  

குழந்தைகளைப் பொறுத்தவரை புதியதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதாக இருந்தால் அவர்களிடம் இயல்பாகவே ஆர்வம் தொற்றிக்கொள்ளும். அந்த ஆர்வத்தை இந்த அமைப்பு பயன்படுத்திக்கொண்டது. அந்தக் கிராமத்துக் குழந்தைகளும் ஆரம்பத்திலிருந்தே ஆர்வமாக இருந்தனர். இப்போது சமுதாயக்கூடம் விவசாயத்தைக் கற்கும் ஒரு வழிமுறையைச் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அது சொல்லிக் கொடுக்கும் உத்திகளைக் கேட்டு, மாணவர்கள் ஆர்வமுடன் புதிய வழிகளில் விவசாய முறைகளைக் கையாண்டு வருகிறார்கள். இதுதவிர, அவர்கள் அனைவரும், வேதியியல் பூச்சிக்கொல்லி உரங்களைப் பயன்படுத்துவது தவறு என்றும் விவசாயம் இயற்கையாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். இந்தக் குழந்தைகளின் நினைப்புதான் இயற்கை விவசாயத்துக்கான முதல் வெற்றி. அந்த வெற்றி மொத்த கிராமத்தையும் அவர்கள் பக்கம் ஈர்த்தது. இந்த முயற்சியின் அடுத்த வெற்றி. 

முன்னர் உபயோகித்த ரசாயன உரங்களால் நிலங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. அதனால் விவசாயம் செய்ய முடியாமல் சரியான வருமானம் கிடைக்காமல் மக்கள் தவித்துவந்தனர். இதனால் சிலர் விவசாயத்தைக் கைவிட்ட கதைகளும் உண்டு. ஆனால், இயற்கையின் பக்கம் திரும்பிய பின்னர், நிரந்தரமாகப் பாரம்பர்ய விவசாயத்தைப் பின்பற்ற ஆர்வமாக இருக்கிறார்கள். இதன்மூலம் நல்ல மகசூல் எடுக்க முடிந்ததே அதற்குக் காரணம். இயற்கை விவசாயம் செய்தால் விளைச்சல் நன்றாக இருக்கும் எனவும் விவசாயிகள் நினைக்கின்றனர். 

விவசாயம் - விவசாயி

பள்ளி முடிந்தவுடன் வேலையை ஆரம்பிக்கும் மாணவர்களுக்கு யாரும் வேலையைச் செய்யச் சொல்ல வேண்டியதில்லை. விதைப்பதற்கு வயலைத் தயார் செய்வது, விதைப்பது, களை எடுப்பது, தண்ணீர் பாய்ச்சுவது, அறுவடை செய்வது என அனைத்து வேலைகளையும் மாணவர்கள்தாம் கவனித்துக்கொள்கிறார்கள். தங்களுக்குள்ளாகவே வேலையைப் பிரித்துக்கொண்டு ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகின்றனர். யார் எதைச் செய்ய வேண்டுமென்று அவர்களே முடிவு செய்துகொள்கிறார்கள். இப்போது மாணவர்களின் மனதில் உருவாக்கப்பட்டிருக்கும் இயற்கை விவசாய உத்திகளும் வழிமுறைகளும் எந்தக் காலமும் இவர்களுக்கு மறவாது. ஆரம்பத்தில் மாணவர்கள் விவசாயத்தில் ஈடுபடும்போது, பெற்றோர் அதிகமாகக் கண்டுகொள்ளவில்லை. மாணவர்களின் தாத்தாக்களும் பாட்டிகளும் மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக இருந்தனர். மாணவர்களுக்கு நம்பிக்கை பிறந்த பின்னர், சமுதாய மையத்தில் காலியாக உள்ள இடங்களில் தனியாக விவசாயம் செய்ய ஆரம்பிக்கின்றனர். 

மாணவர்களின் வீடுகளிலிருந்து கிடைக்கும் கழிவுகளைச் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதில் விளைந்த காய்கறிகளை மாணவர்கள் தங்கள் பள்ளியின் மதிய உணவுக்குக் கொடுத்தனர். இப்போது இது சாத்தியம் என்றாலும், இந்தத் திட்டம் ஆரம்பிக்கும்போது மிகுந்த சவாலாக இருந்திருக்கிறது. பூச்சித் தாக்குதல் காரணமாகப் பல பயிர்கள் இறந்துவிட்டன. அப்போதெல்லாம் மாணவர்களின் பெற்றோர்கள் ரசாயன உரங்களைத் தெளிக்கச் சொல்வர். ஆனால், மாணவர்கள் மன உறுதியுடன், பெரும் இழப்புகளைச் சந்தித்து, கடைசிவரை இயற்கை விவசாயத்தைச் செய்து வருகின்றனர். இதுதவிர, ஒரு சமூகத்தின் மனநிலையையே அவர்கள் மாற்றியமைத்துள்ளார்கள். அது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால், அந்த மக்களின் ரசாயன மனநிலையை மாற்ற மாணவர்கள் பல குழுக்களாகப் பிரிந்து ஓவியங்கள், நாடகங்கள் எனப் பல வழிகளிலும் மக்களைத் திருப்பினர். பள்ளி கோடை விடுமுறை நாள்களிலும் மாணவர்கள் தங்கள் பயிர்களைப் பத்திரமாகப் பாதுகாத்துக் கொண்டனர். 

மாணவர்கள் - விவசாயி

இந்த மாணவர்களைப் பார்த்து கிராம விவசாயிகளும் இயற்கை விவசாயத்துக்கு மாற ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த மாவட்டம் முழுவதும் இயற்கைக்கு மாறும் காலம் நீண்ட தொலைவில் இல்லை. இவ்வளவு மாற்றத்துக்கும் இரண்டு கிராமங்களைச் சேர்ந்த 80 மாணவர்கள்தான் முக்கியமான காரணம். ஆம், மாணவர்களால் முடியாதது எதுவுமே இல்லை.


டிரெண்டிங் @ விகடன்