'எவரெஸ்ட்டில் ஏற்பட்ட டிராஃபிக் ஜாம்' - ஏழு பேர் பலியான சோகம் | Traffic jam in Mt Everest, four dead

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (25/05/2019)

கடைசி தொடர்பு:14:50 (25/05/2019)

'எவரெஸ்ட்டில் ஏற்பட்ட டிராஃபிக் ஜாம்' - ஏழு பேர் பலியான சோகம்

பெருநகரங்களில் பெரும் தலைவலியாக இருப்பது போக்குவரத்து நெரிசல்தான். அதே அளவு நெரிசல் எவரெஸ்ட் உச்சிக்குச் செல்லும் வழியில் இருந்தால் எப்படி இருக்கும்? அதுதான் இப்போது நிகழ்ந்துள்ளது. உலகின் உயரமான மலைஉச்சியை அடைய வரிசையில் நிற்கின்றனர் மக்கள். இதை நிர்மல் பூர்ஜா என்பவர் படமெடுத்து பதிவிட அந்தப் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது. 8,848 மீட்டர் உயரத்தில் இருக்கும் எவரெஸ்ட்டை அடைவதற்கு முன்பு இருக்கும் கடைசி நிறுத்தமாக இருக்கும் ஹிலாரி ஸ்டேப்புக்கும் (8,790 மீட்டர்) எவரெஸ்ட்டை உச்சிக்கும் இடையே மட்டும் 350-க்கும் மேற்பட்ட மக்கள் இருந்திருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

எவரெஸ்ட் நெரிசல்

இங்கு ஏற இந்த சீஸன் மொத்தம் 381 பேருக்கு நேபால் அரசு அனுமதி தந்திருக்கிறது. இதிலிருந்து 11,000 டாலர்கள் வருமானம் ஈட்டியுள்ளது அந்நாட்டு அரசு. மோசமான வானிலையின் காரணமாக இம்முறை ஏறும் நாள்கள் குறைந்திருக்கிறது. இதனால் அனைவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் ஏற வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இதுவரை ஏழு பேர் இறந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இந்தியர்களும் உண்டு. 12 மணிநேரத்துக்கும் மேல் நெரிசலில் சிக்கியதால் மூச்சுத் திணறலில் ஒருவர் பலியானார். இதில் பலரும் திரும்பி கீழே வரும்போது பலியாகியிருக்கின்றனர்.

இமயமலை
 

1953-ல் எட்மண்ட் ஹிலாரியும் டென்சிங் நார்கேவும் எவரெஸ்ட் உச்சியைத் தொட்டதிலிருந்த இந்த நேபாலின் முக்கிய வணிகமாக இது மாறியது. சாகச விரும்பிகள் பலரும் இங்கு வரத்தொடங்கினர். அனுபவம் இல்லாதவர்களை வழிநடத்த உள்ளூர் வழிகாட்டிகளும் அங்கு உண்டு. இதனால் எப்படியும் 700 பேர் முக்கிய சீஸனில் அங்கு இருப்பர். இந்த சீஸன் ஏப்ரல் கடைசியிலிருந்து மே முடிவுவரை இருக்குமாம். எப்போதும் இது போன்ற உயிர்ப்பலிகள் நடப்பது வழக்கம்தான். கடைசியாக 2015-ல் நிலநடுக்கம் ஒன்றால் ஏற்பட்ட பனிச்சரிவில் 18 பேர் பலியானனர். இதை ஏற்றுக்கொண்டே பலரும் மலை ஏறுகின்றனர். இதில் மகிழ்ச்சி தரும் செய்தியாக இரு விதவைகள் உச்சியை அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கள் கணவர்கள் சாதிக்க நினைத்ததை இவர்கள் சாதித்துள்ளனர். "விதவைகளுக்கும், தனியாக வாழும் பெண்களும் ஒரு விஷயத்தை உணர்த்த வேண்டும் என்றே எவரெஸ்ட் உச்சியை அடைய முடிவெடுத்தோம். நாம் யாருக்கும் கீழானவர்கள் இல்லை. நம்மால் எதையும் சாதிக்க முடியும்" என்றார் அதில் ஒருவரான நிமா டோமா.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க