'கடைசி வரைக்கும் விட்றாதடா...!' நீர்க்கோலியிடம் தப்பிக்கத் தவளை நடத்திய இறுதிப்போராட்டம்! | Checkered keelback hunting tree frog for its dinner

வெளியிடப்பட்ட நேரம்: 16:59 (26/05/2019)

கடைசி தொடர்பு:20:08 (26/05/2019)

'கடைசி வரைக்கும் விட்றாதடா...!' நீர்க்கோலியிடம் தப்பிக்கத் தவளை நடத்திய இறுதிப்போராட்டம்!

நம்மைச் சுற்றி இப்படியான நஞ்சற்ற, எந்தவித ஆபத்துமே இல்லாத பலவகைப் பாம்புகள் வாழ்கின்றன. அவை நாம் வாழும் பகுதியின் சூழலியல் சமநிலையில் பெரும் பங்கு வகிக்கின்றன.

'கடைசி வரைக்கும் விட்றாதடா...!' நீர்க்கோலியிடம் தப்பிக்கத் தவளை நடத்திய இறுதிப்போராட்டம்!

து ஓர் ஓடைக்கரை. இரவு நேரத்தில் உணவு தேடக்கூடிய இரவாடிப் பறவைகளைப் பார்ப்பதற்காக அந்த இருவரும் சென்றிருந்தனர். சூரியன் மறைந்து அதிக நேரம் ஆகவில்லை. அப்போதுதான் இருட்டிக் கொண்டிருந்தது. அம்பையிலுள்ள அகத்தியர்பட்டி என்ற கிராமத்திலிருந்த ஓடையோரக் காட்டில் அவர்கள் சுற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அந்த ஓசை அவர்களுக்குக் கேட்டது. அந்த இருவரில் ஒருவர் பாம்புகளுடன் அதிகமான நேரத்தைச் செலவிடுபவர். அந்த இளைஞருக்குப் புரிந்துவிட்டது. இங்குதான் எங்கேயோ அருகில் ஒரு பாம்பு தன் விருந்தை ருசித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் சென்றுகொண்டிருந்தது ஓடைக்கரை ஓரமாக. அங்கு அதிகமாகக் காணப்படும் ஒரு வகை பாம்புதான் கண்டங்கண்டை நீர்க்கோலி. அதைத்தான் பார்க்கப் போகிறோமோ என்ற எதிர்பார்ப்போடு தேடத் தொடங்கினார்கள்.

பாம்பு தவளையை வேட்டையாடுகையில் தவளை வெளியிடும் அந்தக் கடைசி மரண ஓலம் மிகச் சிறிதாகக் கேட்கும். இருட்டத் தொடங்கிய நேரம். இல்லை, கிட்டத்தட்ட இருட்டிவிட்டதென்றே சொல்லலாம். சுற்றியும் ஆள் அரவமின்றி நிசப்தமாகக் காட்சியளித்த ஓடையோரத்தில் அந்தச் சத்தம் அவர்களுக்குத் தெளிவாகக் கேட்டது.  

தங்கள் தலையில் கட்டியிருந்த டார்ச் வெளிச்சத்தில் தேடிக்கொண்டிருந்த சமயம் தாங்கள் அடுத்த காலடியை வைக்கப்போகும் இடத்தில் எதையோ மிதிக்கப்போவதாக உணர்ந்து பின்வாங்கினார்கள். அவர்களின் உள்ளுணர்வு பொய்யுரைக்கவில்லை. அங்குதான் அவர்கள் எதிர்பார்த்த விருந்து நடந்துகொண்டிருந்தது. அவர்களின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. கண்டங்கண்டை நீர்க்கோலி (Checkered Keelback) என்ற ஒருவகை தண்ணீர் பாம்பு, ஒரு மரத்தவளையை வேட்டையாடிக் கொண்டிருந்தது. அந்தத் தவளையும் தான் இன்றைய உணவாகிவிடக் கூடாதென்று இயன்றவரை போராடிக் கொண்டிருந்தது. இந்தப் போராட்டத்தின் முடிவில் தவளை தப்பித்ததா இல்லையா என்பதைப் பார்ப்பதற்குமுன் இந்தப் பாம்பு பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்வோம். 

கண்டங்கண்டை நீர்க்கோலி

Photo Courtesy: Thomas Brown

கண்டங்கண்டை நீர்க்கோலி, அதிகபட்சம் 175 சென்டிமீட்டர் வரை வளரக்கூடியது. முக்கோண வடிவமைப்பில் அதன் தலை இருக்கும். அனைத்து வகையான நிலப்பகுதிகளிலும் நீர்நிலைகளுக்கு அருகில் இதைப் பார்க்கலாம். தவளை, எலி, மீன் போன்றவற்றை ருசித்துச் சாப்பிடும். பழுப்பு நிறச் செதில்களில் மஞ்சள் மற்றும் பச்சை கலந்த நிறங்களில் இருக்கும். சமமான இடைவெளியில் நேர்த்தியாகத் தீட்டப்பட்டதுபோல் இதன் செதில்கள் காணப்படும். இதன் குட்டிகளின் உடலில் ஆலிவ் பச்சை நிறத்தோடு கருப்பு நிற திட்டுகள் ஆங்காங்கே இருக்கும். 

கண்டங்கண்டை நீர்க்கோலி பகல், இரவு என்று இரண்டு வேளைகளிலும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியது. இதற்குக் குறிப்பிட்ட உணவுதேடும் நேரமென்று எதுவுமே கிடையாது. பெரும்பாலும் அதிகாலை வேளையிலும் மாலை அந்திசாயும் நேரத்திலும் இதைப் பார்க்கலாம். ஆபத்து வருவதாக இருந்தால் அதிவேகமாகச் செயல்படும். சில சமயங்களில் சிறிய உயரத்துக்கு உடலை எக்கிக் குதிக்கவும் இதனால் முடியும். எப்போதும் எச்சரிக்கையோடு இருக்கும். இது மிகவும் மூர்க்கமானதாக இருந்தாலும், நஞ்சற்ற பாம்பு என்பதால் இதனால் யாருக்கும் எந்தவிதத் தீங்கும் ஆபத்தும் இல்லை. குளிர்காலத் தொடக்கத்திலிருந்து கோடைக்கால முடிவு வரையிலுமே இதன் இனப்பெருக்கக் காலம்தான். பெண் பாம்பு அதிகபட்சம் 90 முட்டைகள் வரை இடும். மே மாதத் தொடக்கத்திலிருந்து பருவ மழைக்காலத்தின் மத்திவரை இதன் குட்டிகளைப் பார்க்கலாம். 

தவளைகள், தேரைகள், மீன்கள் ஆகியவற்றை விரும்பிச் சாப்பிடும். சில சமயங்களில் எலிகள், மற்ற பாம்புகளின் குட்டிகள், தூக்கியெறியப்பட்ட மாமிசத் துண்டுகள் ஆகியவற்றையும் உணவாகக் கொள்ளும். இதன் பாம்புக் குட்டிகள் தவளையின் தலைப்பிரட்டைகளைச் சாப்பிட்டு வளரும். நீர்நிலைகளை ஒட்டிய சாலைகள் அதிகம் வருவதால், இவை அதிகமாகச் சாலை விபத்துகளில் இறக்கின்றன. இதன் உடலில் பல்வேறு நிறங்கள் இருப்பதாலும், நில அமைப்புக்குத் தகுந்தவாறு தகவமைத்துக் கொள்ள இதன் நிறங்கள் ஒவ்வோர் இடத்திலும் மாறுபடுவதாலும் இதை இனம் காண்பது மனிதர்கள் மத்தியில் சிரமமாகின்றது. பார்ப்பதற்கு நச்சுப் பாம்பைப் போலவே இருப்பதால் பயம் காரணமாக இது பலராலும் அடித்துக் கொல்லப்படுகிறது. இதன் மூர்க்க குணம், நாகமாக இருக்குமோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது. 

பாம்புகள்

Photo Courtesy: Dr.Raju Kasambe

2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான ஓர் ஆய்வறிக்கை இந்தப் பாம்பு பாறைகள், மரங்களில் ஏறுவதாகப் பதிவு செய்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையின் வடக்குப் பகுதியில் இருள மரத்தில் (Ironwood tree) இது ஏறுவதைப் பதிவு செய்துள்ளார்கள். அந்த மரத்தில் ஏறி, மலபார் பறக்கும் தவளையை (Malabar Gliding Frog) என்ற தவளையை வேட்டையாடியதாகவும் அங்கிருந்த அதன் முட்டைகளையும் சாப்பிட்டதாகவும் ஆய்வாளர்கள் விவரித்துள்ளார்கள். இது இந்தப் பாம்பின் பழக்கவழக்கங்களில் இதுவரை பதிவுசெய்யப்படாத புதுமையான விஷயம். நீரில் வேகமாக நீந்துவதும், நிலத்தில் வேகமாகச் செயல்படுவதும் மட்டுமே அதுவரை இதன் முக்கியத் திறன்களாகக் குறிப்பிடப்பட்டன. தற்போது அதனால், மரமேறவும் முடியும் என்பதும் தெரியவந்துள்ளது. 

இவை நீர்நிலைகளில் மிகச் சாதாரணமாகக் காணப்படுகின்றன. நன்னீர் குளங்கள், ஏரிகளில் முன்னர் சிறுவர்கள் பிடித்து விளையாடும் அளவுக்கு இதன் பரவல் வெகுசாதாரணமாக இருந்தது. அகத்தியர்பட்டியின் ஓடைக்கரையில் தவளையை வேட்டையாடிக் கொண்டிருந்த கண்டங்கண்டை நீர்க்கோலியும் அப்படிப்பட்ட ஒன்றுதான். ஆனால், அன்று அந்தத் தவளைக்கு அது ஆபத்தற்றதாகத் தெரியவில்லை. தவளை தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எவ்வளவுதான் போராடினாலும் பாம்பின் கொக்கி போன்ற பற்களிடமிருந்து தப்பிக்க முடியவில்லை. கண்டங்கண்டை நீர்க்கோலி தவளையை விழுங்க அதன் தலைப்பக்கம் வந்தது. மரத்தவளையும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வயிற்றைப் பந்துபோல் ஊதிப் பெரிதாக்கி நீர்க்கோலி அதை விழுங்கச் சிரமப்பட வைத்தது. இருப்பினும் அது விடவில்லை. வயிற்றில் துளையிட்டு காற்றடைத்த வயிற்றை உடைத்துவிட்டுத் தன் விருந்தை ருசிக்கத் தொடங்கியது. 

வேட்டை

Photo Courtesy: Praveenp

மதுரையில் பாம்புகள் மீட்பு அமைப்பான ஊர்வனம் அமைப்பின் உறுப்பினரும், அந்தக் கண்டங்கண்டை நீர்க்கோலி தவளையை வேட்டையாடிக் கொண்டிருந்ததைப் பதிவு செய்தவர்களில் ஒருவருமான சாம்சம் கிருபாகரனிடம் பேசியபோது, "இந்தப் பாம்பு இரவு பகல் இரண்டு நேரங்களில் வெளியே வரும். நீர்நிலைகளை ஒட்டி அதிகமாக வாழும். இது மிக அதிகமாக விரும்பிச் சாப்பிடுவது மீன்களைத்தான். நீரில் இதன் வேட்டைத்திறன் அபாரமானது. அதன் பற்களும் கொக்கியைப்போல் இருப்பதால் இரையைப் பிடிப்பது எளிது. மற்ற பாம்புகளைப் போல் அல்லாமல், இதற்கு அதிகப் பற்கள் இருக்கும். அதனால், இரையை அடிக்கடி கடித்துக் கடித்து பாதி உயிரை வேட்டையின்போதே எடுத்துவிடும். அதற்குப் பிறகுதான் விழுங்கும். இது நம்மையே கடித்தாலும் விடுவிப்பதற்காக அதன் தலையைப் பிடித்து இழுக்கக்கூடாது. அப்படிச் செய்தால் அது கடியை இன்னும் ஆழப்படுத்துமே தவிர விடுவிக்காது. கண்டங்கண்டை நீர்க்கோலி கடித்தால் எதுவுமே செய்யாமல் கையைச் சமநிலையில் கீழே வைத்துக்கொள்ள வேண்டும். அது தானாகப் பற்களை விடுவித்துக்கொண்டு சென்றுவிடும். இது நஞ்சற்ற பாம்பு என்பதால் இதன் கடியோ இதன் மூர்க்கமோ எதுவுமே யாருக்கும் தீங்கு விளைவிக்காது" என்று கூறினார். 

நம்மைச் சுற்றி இப்படியாக நஞ்சற்ற எந்தவித ஆபத்துமே இல்லாத பல்வகைப் பாம்புகள் வாழ்கின்றன. அவை நாம் வாழும் பகுதியின் சூழலியல் சமநிலையில் பெரும் பங்கு வகிக்கின்றன. அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வதும் அவற்றைப் பாதுகாப்பதும்கூடச் சூழலியல் பாதுகாப்பில் முக்கியமான ஒன்று என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்