ஹோம் ஸ்வீட் ஹோம்: வித்தியாசமான இன்டீரியர் ஐடியாக்கள்! | Home Sweet Home: interesting interior design ideas

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (26/05/2019)

கடைசி தொடர்பு:08:12 (27/05/2019)

ஹோம் ஸ்வீட் ஹோம்: வித்தியாசமான இன்டீரியர் ஐடியாக்கள்!

பெரும்பாலானவர்கள், இன்று வீட்டைக் கட்டி முடித்துவிட்டு, அதை அழகுபடுத்தத் தனியாக மெனக்கெடுகிறார்கள். கட்டடத்தை எழுப்பும்போதே, வீட்டை அழகுபடுத்தும் விஷயத்தையும் ஒருசேரச் செய்துமுடிக்க வேண்டும் என்பதே இன்டீரியர் டிசைனர்களின் அறிவுரை. 

ஹோம் ஸ்வீட் ஹோம்: வித்தியாசமான இன்டீரியர் ஐடியாக்கள்!

கோட்டை கட்டுகிறோமோ இல்லையோ... குட்டியாக ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்பதே நம்மில் பெரும்பாலானோரின் பெருங்கனவு. காலையில் படுக்கையிலிருந்து எழும்போது ஆசுவாசப்படுத்தும் வீட்டை, கல்லும் மண்ணும் சேர்த்து வெறுமனே கட்டாமல், ரசனையுடன் அழகியல் சேர்த்துக் கட்டினால், அதில் வாழக் கிடைக்கும் சுகமே தனிதான். 

வீடுகளைச் சதுரம் சதுரமாக, நீள் சதுரமாகக் கட்டும் காலமெல்லாம் காணாமல்போய்விட்டது. சாய்வான சுவர்கள், வட்டவடிவிலான அறைகள், நீள்வட்ட வடிவில் வரவேற்பு அறை என, கட்டுமானத்தில் புரட்சி நிகழ்ந்துகொண்டிருக்கும் காலம் இது. 'வீடென்றால்  இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று பார்ப்பவர்கள் வியந்து சொல்வது மாதிரியான வீடுகளையே இன்று மக்கள் விரும்புகின்றனர்.

வீட்டுக் கட்டுமானத்திலும் உள் அலங்காரத்திலும் ஆங்கிலேயர்களின் பாணி இன்று அதிகம் கலந்திருக்கிறது. அவர்கள் கட்டடங்களை எழுப்பும் விதமே வித்தியாசமாகவும் ஆச்சர்யமூட்டுவதாகவும் இருக்கிறது என்பதால், அவர்கள் நிர்மாணித்த முறைகளே இன்று பெரும்பாலும் பின்பற்றப்படுகின்றன. மேலும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வீட்டுக் கட்டுமானங்களையும் அலங்கார ஐடியாக்களையும் அப்டேட் செய்துகொண்டு, அதை இங்கு நடைமுறைப்படுத்தும்போது வியக்கும்படியான ரிசல்ட் கிடைக்கிறது.

பெரும்பாலானவர்கள், இன்று வீட்டைக் கட்டி முடித்துவிட்டு, அதை அழகுபடுத்தத் தனியாக மெனக்கெடுகிறார்கள். கட்டடத்தை எழுப்பும்போதே, வீட்டை அழகுபடுத்தும் விஷயத்தையும் ஒருசேர செய்துமுடிக்க வேண்டும் என்பதே இன்டீரியர் டிசைனர்களின் அறிவுரை. 

வண்ணங்கள், எண்ணங்கள்!

இன்டீரியர்

எண்ணங்களை உருவாக்குவதில், வண்ணங்கள் ஆட்சி செய்வதாகச் சொல்வார்கள். அதனால்தான் வீட்டு அலங்காரத்தில் முதன்மையானதாக பெயின்ட் அடிப்பதை டிசைனர்கள் குறிப்பிடுகின்றனர். மோனோகுரோம், டை கலரிங் மற்றும் மல்ட்டி கலரிங் ஆகியவைதான் இன்று பெயின்ட் அடிப்பதில் நடைமுறைப்படுத்தப்படும் மூன்று முறைகள். கறுப்பு மற்றும் வெள்ளை நிற பெயின்ட்களால் வீட்டை அழகுபடுத்தும் மோனோகுரோம் முறையைப்போல மற்ற இரு முறைகளிலும் வெவ்வேறு வண்ணங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வயதுக்கு ஏற்ப அறைகளின் வண்ணங்களைத் தேர்வுசெய்து அடிக்கும்போது, எப்போதும் மனமும் குணமும் ஆரோக்கியமானதாக இருக்கும். சாதாரணமாக இல்லாமல், கூடுதல் அழகைப் பெறுவதற்கு இன்று டெக்ஸ்டர்டு, பேட்டர்ன் என பெயின்ட்களிலும் பல வகைகள் இருப்பது எக்ஸ்ட்ரா வசதி. அதுமட்டுமல்லாமல், வால்பேப்பர்களாலும் வீட்டை சீஸனுக்கு சீஸன் வித்தியாசப்படுத்திக் காட்ட முடியும். 

பளிச் ஃபர்னிச்சர்கள்

பெயின்ட் மட்டுமே அடித்து முடித்திருக்கும் சமயங்களில் வீட்டைப் பார்த்தால்கூட, அதன் அழகு தெரியாமல்போகலாம். ஆனால், அதற்கு ஏற்ற மாதிரியான ஃபர்னிச்சர்களைத் தேர்வுசெய்து வீட்டுக்குள் வைக்கும்போதுதான் அதன் அழகு மொத்தமும் வெளிப்படும். அந்த வகையில், வீட்டை அழகுபடுத்துவதில் ஃபர்னிச்சர்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. மரத்தாலான ஃபர்னிச்சர்களைவிட, ஸ்டீல் மற்றும் கண்ணாடியால் தயாரிக்கப்படும் டிரெண்டியான ஃபர்னிச்சர்களே அதிகம் விரும்பப்படுகின்றன. மேலும், மல்ட்டி கலர் பெயின்ட்டிங் முறையைத் தேர்வுசெய்யும்போது, பிளைனான ஃபர்னிச்சர்களைத் தேர்வுசெய்யாமல், மல்ட்டி கலர் ஃபர்னிச்சர்களை வைக்கும்போது ரிச் லுக் கிடைக்கும். 

சுவாரஸ்யமாக்கும் சுவர் அலங்காரம் 

இன்டீரியர்

ஒருவர் வீட்டுக்கு வரும்போது, சில நேரத்துக்குப் பிறகு பேசுவதற்கு அவரிடம் விஷயங்கள் இல்லாமல்போகலாம். ஆனால், வீட்டின் சுவர் முழுவதும் ஃபிரேம்கள், புகைப்படங்கள், வரலாற்று விஷயங்கள், ஓவியங்கள் நிறைந்திருந்தால்... சற்று யோசித்துப்பாருங்கள். வாய் ஓயாமல் பேசுவதற்கு விஷயங்கள் நம் மூலமாக, நம் வீட்டின் சுவர் மூலமாக அவருக்குக் கிடைத்துவிடுமல்லவா. வீட்டின் உள் அலங்காரத்தில் சுவர் அலங்காரம் முக்கியத்துவம் பெறுவதற்கான மிக முக்கியக் காரணம் இதுதான். சுவரில் அடிக்கும் நிறங்களுக்கு ஏற்ற மாதிரி ஃபிரேமின் வடிவமும் அதன் வண்ணமும் இருப்பது அதிமுக்கியம். மேலும், புத்தகத்தை வைக்கும் ஷெல்ப், கேண்டில் ஸ்டாண்டு என எல்லாமும் சுவரை அழகுபடுத்துவதற்கான முக்கிய ஐடியாக்கள். 

ரிச் லுக் ஃபுளோரிங்

விருந்தினர்கள் வீட்டுக்குள் நுழைந்து வைக்கும் முதல் காலடியிலேயே, வீட்டின் தன்மையை உணர்த்துவது ஃபுளோரிங்தான். வெறுமனே மொசைக் கற்களால் செய்யப்பட்டு வந்த ஃபுளோரிங், சில வருடங்களுக்கு முன்புதான் டைல்ஸ் என்கிற புதிய விஷயத்தால் வித்தியாசமடைந்தது. ஆனால், இன்று தங்களின் புகைப்படங்களைக்கூட வீட்டின் தரையில் பதித்துக்கொள்ளக்கூடிய எப்போக்ஸி ஃபுளோரிங் (3டி ஃபுளோரிங்) முறை பிரபலமடைந்துவருகிறது. வரவேற்பறைகள், குளியலறைகள், படுக்கை அறைகள் என அதற்கு ஏற்றப் படங்களையோ, டிசைன்களையோ தேர்வுசெய்து 3டி ஃபுளோரிங் செய்யப்பட்டுவருகிறது. மேலும், மரத்தால் செய்யப்படும் ஃபுளோரிங் ஆடம்பரமாக அழகை உண்டாக்குகிறது. அதேபோல, ஃபுளோரல் புளோரிங், கார்ப்பெட் புளோரிங், மேட் ஃபினிஷிங் ஃபுளோரிங் என ஃபுளோரிங் முறைகளின் பட்டியல் ஏராளம். 

பரவசம் தரும் பசுமை

இன்டீரியர்

காடெங்கும் பசுமை என்பதைப்போல, வீடெங்கும் பசுமை என்பதுதான் வீட்டு உள் அலங்காரத்தின் புதிய டிரெண்ட். வரவேற்பறைகள், படுக்கை அறைகள் என வீட்டின் மிக முக்கியமான அறைகளில் வைக்கும் அலங்காரச் செடிகளால், வீடு முழுவதும் பரவசம் படர்ந்திருக்கும் என்பது டிசைனர்களின் கருத்து. இந்த ஐடியா தரும் புத்துணர்ச்சி, மற்ற வீட்டின் உள் அலங்காரத்தின் ஐடியாக்களை ஒப்பிடும்போது நிறைவாகக் கிடைக்கும் என்கிறார்கள் அவர்கள். கோபத்துடன் வீட்டுக்குள் நுழைபவர்களைக்கூட அலங்காரச் செடிகளும், வரவேற்பறையின் மையத்தில் அமைக்கும் செயற்கை நீரூற்றும் சாந்தப்படுத்திவிடும். 

ஆக, வாழ்க்கைக்குத் தரும் அதே முக்கியத்துவத்தை, யார் ஒருவர் கட்டும் வீட்டுக்கும் தருகிறார்களோ, சந்தோஷமும் நிம்மதியும் அவரின் வாழ்நாள் வரை நிலைத்திருப்பது நிச்சயம்!


டிரெண்டிங் @ விகடன்