ஏ.சி-யிலிருந்து வெளிவரும் நீரைப் பயன்படுத்தலாமா, கூடாதா? | Is safe to use water from the air conditioner

வெளியிடப்பட்ட நேரம்: 09:37 (27/05/2019)

கடைசி தொடர்பு:09:37 (27/05/2019)

ஏ.சி-யிலிருந்து வெளிவரும் நீரைப் பயன்படுத்தலாமா, கூடாதா?

ஏ.சி-யிலிருந்து வெளிவரும் நீர் பெரும்பாலும் வீணாகவே போகிறது. அதை வேறு ஏதாவது உபயோகத்துக்குப் பயன்படுத்தலாமா, அதனால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா?

ஏ.சி-யிலிருந்து வெளிவரும் நீரைப் பயன்படுத்தலாமா, கூடாதா?

கோடைக்காலத்தில் வழக்கமாகிப்போன தண்ணீர் பற்றாக்குறையால் பைப்பில் ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூடப் பார்க்க முடிவதில்லை. கிச்சன், பாத்ரூம் என எல்லா இடத்திலும் பைப்பில் காற்றுதான் வருகிறது. ஆனால், வீட்டில் ஒரே ஒரு இடத்தில் பைப்பில் மட்டும் காற்றுக்குப் பதிலாகத் தண்ணீரைப் பார்க்க முடிகிறதென்றால் அது ஏ.சி-யிலிருந்து வரும் பைப்பாகத்தான் இருக்கும். அதில் இருந்து சொட்டு சொட்டாகத் தண்ணீர் வெளியாகும் விஷயம் ஏசியைப் பயன்படுத்துபவர்களுக்குத் தெரியும். ஒரு நாளைக்கு லிட்டர் கணக்கில் சேரும், அதை எடுத்து தரையிலோ, செடிகளுக்கோ ஊற்றிவிடுவார்கள். ஆனால், செடிகளுக்கு அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தினால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா, வேறு உபயோகத்துக்குப் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.

ஏசியில் இருந்து நீர் வெளிவரக் காரணம் என்ன ?

ஏ சி

ஏசியிலிருந்து தண்ணீர் வெளியேறக் காரணம் காற்றிலிருக்கும் ஈரப்பதம்தான். காற்றைக் குளிர்விக்கும்போது அறையின் காற்றில் இருக்கும் ஈரப்பதம் நீர்த்துளிகளாக மாற்றப்படுகிறது. அதுவே கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால் ஏ.சி-யின் செயல்பாட்டால் காற்றிலிருக்கும் ஈரப்பதம் நீராக மாறுகிறது. எனவே, ஒரு ஏசியிலிருந்து நீர் வெளியேறுவது வழக்கமான ஒன்றுதான். சொல்லப்போனால் அதுவே ஏ.சி சரியாகத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளம். திடீரென நீரின் அளவு அதிகரிப்பது, ஒரு சொட்டு நீர்கூட வெளிவராமல் இருப்பது அல்லது நீரின் அளவு குறைவது போன்றவைதான் ஏசியில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள். ஏ.சி-யில் ஏதாவது அடைப்பு இருந்தால் தண்ணீர் வெளியேற முடியாமல் உள்ளேயே தங்கிவிடும். சாதாரணமாக ஒரு ஏ.சி-யிலிருந்து ஒரு நாளைக்கு ஏழு லிட்டர் வரை தண்ணீர் கிடைக்கிறது. இதைச் சிலர் மட்டுமே சேகரிக்கிறார்கள், பெரும்பாலும் ஏசியிலிருந்து கிடைக்கும் நீர் வீணாகவே போகிறது. அதே நேரம் சேமித்து வைத்தால் அரை பக்கெட் அளவுக்குக் கிடைக்கும் இந்தத் தண்ணீர் பாதுகாப்பானதுதானா என்று கேட்டால், ஆமாம் என்பதுதான் பதில். அதுவும் அதன் பயன்பாட்டைப் பொறுத்தது. ஏ.சி-யிலிருந்து வருவதால் அதில் எந்த நச்சுப் பொருள்களாவது இருக்கும் எனப் பலர் அச்சப்படலாம். ஆனால், பெரும்பாலும் அதில் அப்படி எதுவுமே காணப்படுவதில்லை.

 ஏ.சி-யிலிருந்து கிடைக்கும் தண்ணீரை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் ?

மாடித்தோட்டம்

நகரப்பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகமாக இருக்கும் நிலையில் தேவைப்பட்டால் இதுபோன்று கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்தலாம். நகரங்களில் அதிகமானோர் மாடித்தோட்டம் மூலமாகக் காய்கறிகளை விளைவித்து வருகிறார்கள். நீரைச் செடிகள் இருக்கும் இடத்துக்குக் குழாயின் மூலமாக நேரடியாகக் கொண்டுபோய்விடலாம். அதன் மூலமாக மண்ணின் ஈரப்பதம் குறையாமல் இருக்கும். பக்கெட்டில் பிடித்துவைத்தும் ஊற்றலாம். மேலும் பல இடங்களில் அழகுக்காகவும் சில செடிகள் வளர்க்கப்படுகின்றன. அவை எந்தச் செடியாக இருந்தாலும் இந்த நீரைப் பயன்படுத்தலாம். புல்தரைகள், செயற்கை நீரூற்றுகள் ஆகியவற்றுக்கும் இதைப் பயன்படுத்தலாம். அதனால் எந்தப் பாதிப்பும் இருக்காது. வீட்டில் உள்ள ஃபர்னிச்சர் போன்ற பொருள்களைத் துடைக்கப் பயன்படுத்தலாம். மேலும் சுவர்களைத் துடைக்க, தரையைக் கழுவுவதற்கும் இதைப் பயன்படுத்தலாம். வார நாள்களில் கார், பைக் போன்ற வாகனங்களைக் கழுவுவதற்குத் தண்ணீர் தேவைப்படலாம். அது போன்ற சமயங்களில் ஏசி தண்ணீரைச் சேமித்து வைத்திருந்தால் உதவும்.

நல்ல தண்ணீர்தான்... இருந்தாலும் கவனம் தேவை!

ஏ.சியிலிருந்து வெளிவரும் தண்ணீர்

இந்தத் தண்ணீரில் எந்தவித நச்சுப் பொருள்களும் கிடையாது என்பதால் எல்லா தேவைகளுக்கும் பயன்படுத்தலாம் என்று அர்த்தம் இல்லை. நல்ல தண்ணீர்தான் என்றாலும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக இதை அருந்தக் கூடாது. இந்த நீர் சுத்தமானதுதான் என்றாலும்கூட ஏசியில் பூஞ்சைகள், பாக்டீரியா ஆகியவை இருக்கலாம். அவை இந்த நீரிலும் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் இதை அருந்தக் கூடாது. செல்லப்பிராணிகளைக் குளிப்பாட்டவும் இந்த நீரைப் பயன்படுத்தக் கூடாது. pH மதிப்பு கவனத்தில் கொள்ளப்படும் விஷயங்களில் இந்த நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதைத் தவிர்த்து இதைப் பயன்படுத்துவதில் எந்தச் சிக்கலும் இல்லை. 


டிரெண்டிங் @ விகடன்