4 ஆண்டுகளில் 25% குறைந்த கல்விக்கடன் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை! | Education loans in India fell 25% in last 4 years

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (27/05/2019)

கடைசி தொடர்பு:15:06 (27/05/2019)

4 ஆண்டுகளில் 25% குறைந்த கல்விக்கடன் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை!

கல்விக்கடன்

பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள், அடுத்து என்ன படிக்கலாம் என்று யோசிப்பவர்களைவிட, கல்லூரி மேற்படிப்பு படிப்பதற்கு வங்கிகள் நமக்கு கல்விக்கடன் தருவார்களா என்று யோசிப்பவர்கள்தான் அதிகம். ஏனெனில், ஏற்கெனவே கொடுக்கப்பட்ட கடன்களில் பெருவாரியான கடன்கள் வாராக் கடன்களாகியிருக்கின்றன. இதனால், புதிதாகக் கடன் கேட்டு வருபவர்களுக்கு கடன் கிடைப்பதில் சிக்கல் உருவாகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், கல்விக்கடன் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 25 சதவிகிதமாகக் குறைந்திருப்பதற்கு முக்கியக் காரணமும் இதுதான்.

கடந்த 2016-ம் ஆண்டு, வங்கிகளிலிருந்து 3.34 லட்சம் மாணவர்கள் கல்வி பயில்வதற்காக கடன் பெற்றிருக்கிறார்கள். அது, நடப்பு ஆண்டில் மார்ச் 31-ம் தேதி அளவில், 2.50 லட்சமாகக் குறைந்து காணப்படுகிறது.  அதேநேரத்தில், கொடுக்கப்பட்டிருக்கும் கடன் தொகை 34 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. அதாவது, கடந்த 2016-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 16,800 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி 22,550 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. ஏனெனில், ஒரு மாணவருக்கு வழங்கப்படும் கடன் தொகையின் அளவு 5.3 லட்சம் ரூபாயிலிருந்து, 9 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கிறது.  

அதேபோல, செயல்பாட்டில் இருக்கும் கல்விக்கடன் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை கடந்த  நான்கு ஆண்டுகளில் 34 லட்சத்திலிருந்து, 27.8 லட்சமாகக் குறைந்து காணப்படுகிறது. வாரா கல்விக்கடன் விகிதமும் இரு மடங்கு அதிகரித்து, 12.5 சதவிகிதமாக இருக்கிறது. குறிப்பாக, கடந்த 2018-ம் ஆண்டில் கார்ப்பரேஷன் வங்கி வழங்கிய 1,640 கோடி கல்விக்கடன் தொகையில் 177 கோடி ரூபாய் வாராக் கடனாகியிருக்கிறது. கடன் வாங்கிய 50,144 மாணவர்களில் 8,777 மாணவர்கள் கல்விக்கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறார்கள்.  

கல்விக்கடன் வழங்குவதில், பெரும்பாலான தனியார் வங்கிகள் கல்வி நிறுவனங்களுடன் நேரடியாகவோ அல்லது ஏஜென்ட்டுகள் மூலமாகவோ டை-அப் வைத்துக்கொண்டு, அவர்களுடைய கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்விக்கடன் வாய்ப்புகளை ஏற்படுத்திவருகிறார்கள். இதனால், ஏழை மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைப்பதில் சிக்கல் உருவாகிறது என வங்கி வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.