12,000 செயற்கைக்கோள்கள், உலகம் முழுக்க இன்டர்நெட்... எலான் மஸ்க்கின் பிரமாண்டத் திட்டம்! | 12,000 satellites, Internet for the whole world...Elon Musk's Action plan!

வெளியிடப்பட்ட நேரம்: 18:14 (27/05/2019)

கடைசி தொடர்பு:18:14 (27/05/2019)

12,000 செயற்கைக்கோள்கள், உலகம் முழுக்க இன்டர்நெட்... எலான் மஸ்க்கின் பிரமாண்டத் திட்டம்!

விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் செயற்கைக்கோள்கள் மூலமாக உலகம் முழுக்க அதிவேக இணையச் சேவையை வழங்குவதுதான் எலான் மஸ்க்கின் திட்டம்.

12,000 செயற்கைக்கோள்கள், உலகம் முழுக்க இன்டர்நெட்... எலான் மஸ்க்கின் பிரமாண்டத் திட்டம்!

5G தொழில்நுட்பம் இப்போது சில நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்து விட்டது, இன்னும் சில வருடங்களில் இந்தியா உட்பட பல நாடுகளிலும் வந்துவிடும் என எதிர்பார்க்கலாம். தொடக்கத்தில் இருந்த சாதாரண மொபைல் தொடங்கி இப்போதைய 5G ஸ்மார்ட்போன் வரை, மொபைல் நெட்வொர்க் என்பது டவர்கள் மூலமாகத்தான் அளிக்கப்பட்டுவருகிறது. இவற்றிற்கு உதவ மட்டுமே செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த முறையில் ஒரு சிக்கல் இருக்கிறது. டவர்களால் குறைந்த சுற்றளவுக்கு மட்டுமே சேவையை வழங்க முடியும். நகர்ப்புறத்தை விட்டுத் தள்ளி கொஞ்சம் தூரம் சென்றால் சில இடங்களில் பேசுவதற்குக் கூட சிக்னல் கிடைக்காது. 3G, 4G-யையெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

``எல்லா இடங்களிலும் இன்டெர்நெட் வேண்டும் என்றால் அதிகமான டவர்கள் தேவைப்படும். அதற்கான செலவும், அதிகமாகும், அடர்த்தியான காடுகள் போன்ற இடங்களில் இது சாத்தியமில்லாத ஒன்றாகவும் இருக்கும். ஆனால் என்னுடைய திட்டம் மட்டும் நிறைவேறிவிட்டால் இணையச் சேவையைப் பற்றிக் கவலைப்படத் தேவையிருக்காது" என்கிறார் எலான் மஸ்க். அவரது திட்டம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் உலகம் முழுக்க எங்கும் இணையம், எதிலும் இணையம் என்பது இன்னும் எளிது. 

12,000 செயற்கைக்கோள்கள்..உலகம் முழுக்க இன்டெர்நெட் 

எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் லான்ச்

விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் செயற்கைக்கோள்கள் மூலமாக உலகம் முழுக்க அதிவேக இணையச் சேவையை வழங்குவதுதான் எலான் மஸ்க்கின் திட்டம். ஸ்டார்லிங்க் (Starlink) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தில் சுமார் 12,000 சிறிய அளவு செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படவுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமையன்று 60 செயற்கைக்கோள்களை ஃபால்கன் 9 ராக்கெட் மூலமாக விண்ணிற்கு அனுப்பிவைத்திருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். 

இந்தச் சிறிய செயற்கைக்கோள்கள் அனைத்துமே 220 கிலோ எடை கொண்டவை. மொத்தமுள்ள 12,000 செயற்கைக்கோள்கள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 8000 செயற்கைக்கோள்கள் பூமியிலிருந்து 500 கிலோ மீட்டர் உயரத்திலும். அடுத்த 4000 செயற்கைக்கோள்கள் 1200 கிலோ மீட்டர் உயரத்திலும் நிலைநிறுத்தப்படவுள்ளன. இவை ஒன்றையொன்று லேசர் ஒளிக்கற்றையின் மூலமாகத் தொடர்புகொள்ளும். அதன் மூலமாக ஸ்டார்லிங்க் விண்வெளியில் ஒரு முழுமையான ஒரு கட்டமைப்பை உருவாக்கும். இவை அதிவேக இணையச் சேவையைப் பெறுவதற்கான சிக்னல்களை பூமிக்கு அனுப்பும். இவை இயங்குவதற்குத் தேவையான ஆற்றலைப் பெறும் வகையில் ஒரு சோலார் பேனல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்சம் ஐந்து வருடம் செயல்படும் இவை, அதற்குப் பின்னர் பூமியில் விழச்செய்யப்படும். இதன் மூலமாக விண்வெளிக் குப்பைகள் அதிகரிப்பதையும் தவிர்க்க முடியும்.

தரையிலிருந்து ஸ்டார்லிங்க் செயற்கைகோல்கள்

ஸ்டார்லிங்க் திட்டம் புதிய முயற்சி அல்ல. ஏற்கெனவே அமேசான், ஒன்வெப் போன்ற சில நிறுவனங்களும் இன்டெர்நெட் செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிறுவும் முயற்சியில் இருக்கின்றன. தற்போது இரிடியம் கம்யூனிகேஷன் என்ற நிறுவனத்தின் செயற்கைக்கோளும் விண்வெளி இணையச் சேவையை அளித்து வருகிறது. ஆனால் அதன் வேகம் மிக மிகக் குறைவு. ஆனால் தன்னுடைய ஸ்டார்லிங் 10 Gbps வேகத்தில் இணையச் சேவையை வழங்கும் என்கிறார் எலான். மேலும் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதிலும் அவருடைய போட்டி நிறுவனங்களைவிட வேகமாக இருக்கிறார். அதற்குக் காரணம் அவரிடம் இருக்கும் கட்டமைப்புதான். 2015-ல் தொடங்கிய இந்தத் திட்டத்தின் முதற்கட்டபணிகள் வேகமாக நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து கடந்த வருடம் பரிசோதனை முயற்சியாக இரண்டு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களும், தற்போது 60 செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்துக்கு சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகலாம். வரும் 2020-ம் ஆண்டு முதல், ஸ்டார்லிங்க் சேவை பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலமாக கான்கிரீட் கட்டடங்கள் அடங்கிய நகரமோ, அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகளோ உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் இதன் மூலமாக இணைய இணைப்பைப் பெறமுடியும். 


டிரெண்டிங் @ விகடன்