`பதுங்குவது பாய்வதற்காக மட்டுமல்ல; இதற்காகவும்தான்!' புலிகளின் சர்வைவல் கதை | A survival story of Tigers

வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (28/05/2019)

கடைசி தொடர்பு:17:35 (30/05/2019)

`பதுங்குவது பாய்வதற்காக மட்டுமல்ல; இதற்காகவும்தான்!' புலிகளின் சர்வைவல் கதை

பசி மூன்று வகைப்படும் ஒன்று நேரத்திற்கு உண்பது, இரண்டு பசிக்கும் போது உண்பது, மூன்றாவது கிடைக்கும் போது உண்பது. உலகின் எல்லா உயிரினங்களுக்கும் இந்த மூன்றும்தான்  பொதுவான விதி. இதில் மூன்றாவது விதியான `கிடைக்கும் போது’ உண்ணுகிற உயிரினங்களின் பசி உக்கிரமானது, மனிதன் உட்பட.

`பதுங்குவது பாய்வதற்காக மட்டுமல்ல; இதற்காகவும்தான்!' புலிகளின் சர்வைவல் கதை

லகின் பல குற்றப்பத்திரிகைகளைப், பசிதான் எழுதவைக்கிறது. பல கோர முகங்களுக்கும், கண்ணீர்த் துளிகளுக்கும் பசியே ஆரம்ப காரணமாக இருக்கிறது. பசி மூன்று வகைப்படும் ஒன்று நேரத்திற்கு உண்பது, இரண்டு பசிக்கும்போது உண்பது, மூன்றாவது கிடைக்கும்போது உண்பது. உலகின் எல்லா உயிரினங்களுக்கும் இந்த மூன்றும்தான் பொதுவான விதி. இதில் மூன்றாவது விதியான ‘கிடைக்கும்போது’ உண்ணுகிற உயிரினங்களின் பசி உக்கிரமானது, மனிதன் உட்பட. சர்வைவல் விஷத்தை அடிப்படையாகக்  கொண்ட உலகின் பல வரலாறுகளை இந்த மூன்றாவது விதிதான் மாற்றி எழுதியிருக்கிறது.

சர்வைவல் ஸ்டோரி  புலி

புலி என்கிற பெயருக்கு இயற்கையாகவே ஒரு மரியாதை இருக்கிறது, புலியின் பெயரை பலர் அடைமொழியாக வைத்திருப்பார்கள். ஆனால் புலிக்கு அடைமொழி கிடையாது. புலியைப் பார்த்தால் ஒன்று பயம் வர வேண்டும், அல்லது ஓடி ஒழிந்தாக வேண்டும், மனிதனாக இருந்தாலும் விலங்குகளாக இருந்தாலும் இது ஒன்றுதான் வழி. காட்டில் புலி அளவிற்கு பலமான விலங்கினம் இல்லை. எவ்வளவு பலமானவனாக இருந்தாலும் இயற்கை அவனுக்கும் பல பலவீனங்களை வகுத்துத்தான் வைத்திருக்கிறது. புலிக்கும் பலவீனங்கள் இல்லாமல் இல்லை. புலி பலவீனங்களை வெளியே காட்டாமல் பலத்தை மட்டுமே வெளிக்காட்டுவதால்தான் இன்றளவும் கம்பீரமாகவே இருக்கிறது. புலியின் படைப்பிலும் பல பிரச்னைகள் இருக்கின்றன. மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய புலியால் தொடர்ந்து ஒரு கிலோமீட்டர் கூட ஓட முடியாது என்பது மிகப்பெரிய பலவீனம். புலி பதுங்குவது பாய்வதற்கு என்று சொல்லுவார்கள். உண்மையில் புலி பதுங்குவது அதனுடைய இயல்பான குணங்களில் ஒன்று. ஏனெனில் அவற்றால் இரையைத் துரத்திக்கொண்டு வெகுதூரம் ஓட முடியாது. இரை பக்கத்தில் வரும்வரை பதுங்கியாக வேண்டும். பதுங்கிப் பாய்ந்தால் மட்டுமே சர்வைவல் ஆக முடியும். பாய்கிற எல்லா முயற்சிகளிலும் புலி வெற்றியடைந்து விடாது. பத்தில் ஒன்றில் மட்டுமே புலி வேட்டையை வெற்றிகரமாக முடிக்கிறது. பத்து முயற்சியில் ஒரு முறைதான் அவை இரையை வேட்டையாடுகின்றன. தொடர்ந்து ஓட முடியாதது, பத்தில் ஒருமுறை தான் வெற்றியுடன் வேட்டையாட முடிவது என புலி, சிறுத்தைகளுக்கு சில ஒற்றுமைகளும் உண்டு 

பெண் புலி இணை சேர்க்கைக்குத் தயாராகும் காலத்தில் இரு ஆண் புலிகளுக்கு இடையே மிகப்பெரிய சண்டை ஏற்படும். பெண் புலியுடன் யார் இணை சேர்வது என்கிற போட்டியில் இரண்டு ஆண் புலிகளும் மிகப்பெரிய சண்டையில் ஈடுபடுகின்றன. இதில் எப்போதாவது உயிரிழப்புகளும் நிகழும். கருவுற்ற 16 வாரங்களில் புலி குட்டிகளை ஈனும். ஒரு பிரசவத்தில் மூன்றிலிருந்து நான்கு குட்டிகள் வரை பெண் புலி ஈனும். பிறக்கிற ஒவ்வொரு புலி குட்டிக்கும் ஆரம்பக் காலங்கள் மிகச் சவாலானவை. புலிகளை விட புலிக் குட்டிகளின் சர்வைவல் காலம் எப்போதும் கடுமையானதாகவே இருக்கிறது. பிறக்கிற குட்டிகளுக்கு கண்கள் தெரிவதில்லை. முதல் இரண்டு மாதங்களுக்கு அவை பாதுகாப்பாக புதர்களிலோ பாறைகளின் இடுக்கிலோ தாய்ப் புலியால் பாதுகாப்பாக வளர்க்கப்படுகின்றன. நான்கு குட்டிகளில் பலம் பொருந்திய ஆண் புலிக் குட்டிகள் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டுகின்றன. குறிப்பாக சர்வைவல் விஷயத்தில் பிறக்கிற குட்டிகளில் இரண்டு குட்டிகளே தப்பிப் பிழைக்கின்றன.

சர்வைவல் தாய் புலி குட்டிகளுடன்

குட்டிகள் இல்லாமல் இருந்தால், பெண் புலி அடுத்த சில மாதங்களில் மீண்டும் இனப்பெருக்கத்திற்குத் தயாராகும் என்பதால் மற்ற ஆண் புலிகள் குட்டிகளைக் கொன்றுவிடுகிற சம்பவங்களும் நிகழ்கின்றன. குட்டிகள் வளர்ந்த 18 முதல் 24 மாதங்களில் தாய் புலியால் வேட்டையாடக் கற்றுக்கொள்கின்றன. இரண்டு வருடங்களுக்குப் பிறகு குட்டிகள் தாயை விட்டு பிரிந்து சென்று விடுகின்றன. பெண் புலிகள் தாய்க்கு அருகிலேயே தன்னுடைய எல்லையை அமைத்துக் கொள்கின்றன. ஆண் புலிகள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து விடுகின்றன. தாயிடமிருந்து பிரிந்த ஆண் புலி தனக்கென ஒரு சிறிய ராஜ்ஜியத்தை முதலில் அமைத்துக் கொள்கிறது. வலிமையையும் திடமும் வரும்வரை அது பொறுமையாகவே இருக்கும். இன்னோர் ஆண் புலியுடன் சண்டையிடும் அளவிற்கு வலிமை வந்ததும், மற்ற ஆண் புலியின் எல்லைக்குள் சென்று சண்டையிட்டு தன்னுடைய எல்லையை அதிகரித்துக் கொள்கிறது. தாயிடமிருந்து பிரிந்து சென்ற பெண் புலி மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குள் பருவமடைகின்றன. ஆண் புலிகள் நான்கிலிருந்து ஐந்து வருடங்களுக்குள் பருவமடைகின்றன.

ஒவ்வொரு புலியும் தனக்கென ஓர் எல்லையைத் தீர்மானித்து வைத்திருக்கின்றன. அதன் எல்லைக்குள் வேறு புலிகளை அவை அனுமதிப்பதில்லை. ஒரு பெண் புலியானது அதன் இருப்பிடமாக 20 சதுர கிலோமீட்டர்கள் பரப்புள்ள இடத்தைக் கொண்டிருக்கும். ஆண் புலிகளின் இருப்பிடம் 60–100 சதுர கி.மீ என்கிற அளவில் இருக்கும். பெண் புலிகள் மற்ற பெண் புலிகளை தங்களுடைய எல்லைக்குள் அனுமதித்துவிடும். ஆனால், ஆண் புலிகள் தன்னுடைய எல்லைக்குள் மற்ற புலிகளை அனுமதிப்பதில்லை. அப்படியே தன்னுடைய எல்லைக்குள் மற்ற ஆண் புலிகள் வந்தாலும் அதனிடம் சரணடைந்து விட வேண்டும். சரணடைந்த புலியானது எந்த விதத்திலும் ஆண் புலிக்குத் தொந்தரவை ஏற்படுத்தக் கூடாது, முரண்டு பிடித்தாலோ, வேறு பிரச்னைகளை தொடங்கினாலோ ஜோலியை முடித்து விடும். மீறினால் தண்டிக்கப்படுவார்கள் என்கிற விதியைத்தான் புலிகளும் கடைப்பிடிக்கின்றன.

 

தாக்குதலுக்குப் பெயர் போனவை புலிகள். புலிகள் அதன் எடையை விட ஆறு மடங்கு அதிக எடையுள்ள காட்டெருமை மற்றும் நீர் எருமைகளை உணவாக்கிக் 'கொல்கின்றன'. புலியின் உருவமும் அதன் வலிமையையும் மற்ற எல்லா உயிரினங்களுக்கும் பயத்தை உருவாக்குபவை. மனிதர்களின் கைரேகை போலப் புலியின் உடலிலுள்ள கோடுகள் ஒவ்வொரு புலிக்கும் வேறுபட்டு இருக்கும். ஒரு புலிக்கு இருக்கிற கோடு இன்னொரு புலிக்கு இருக்காது. அவற்றின் கோடுகள்தான் மற்ற புலிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. புலிகள் தங்களுடைய வாழ்விடத்தையும் எல்லைகளையும் இழந்திருக்கின்றன. அதன் காரணத்தால் அவற்றின் எண்ணிக்கையும் அவை இழந்திருக்கின்றன. 

புலிகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவிற்குக் குறைந்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. புலியின் தோலுக்காகவும், உடல் உறுப்புகளுக்காகவும் உலகம் முழுவதும் இவை கொல்லப்படுகின்றன. புலிக்கு பயந்து வாழ்கிற உயிரினங்களைவிட மனிதனுக்கு பயந்து வாழ்கிற புலிகளின் நிலை கவலைக்குரியது. புலியை அடையாளமாகக் கொண்ட பல சாம்ராஜ்ஜியங்கள் இருக்கின்றன, பல நாடுகள் இருக்கின்றன, பல மனிதர்கள் கூட இருக்கிறார்கள், ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவிற்குப் புலிகள்தான் இப்போது இல்லை. 


டிரெண்டிங் @ விகடன்