மலேசியாவின் கடைசி ஆண் சுமத்ர காண்டாமிருகம் மரணம்! | Last Male Sumatran rhinoceros of Malaysia dies

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (28/05/2019)

கடைசி தொடர்பு:17:00 (28/05/2019)

மலேசியாவின் கடைசி ஆண் சுமத்ர காண்டாமிருகம் மரணம்!

மலேசியாவில் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டுவந்த கடைசி ஆண் சுமத்ர காண்டாமிருகம் மடிந்ததாக அந்நாட்டு வனத்துறை அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர். 'தம்' எனப் பெயரிப்பட்டிருந்த இந்த 30 வயது ஆண் 2008-ல் பிடிக்கப்பட்டு போர்னியோ தீவுகளில் இவ்வளவு நாள் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டது. இந்த சுமத்ர காண்டாமிருக இனம் மலேசியா வனங்களில் மொத்தமாக அழிந்துவிட்டதாக 2015-ல் அறிவிக்கப்பட்டது.

சுமத்ர காண்டாமிருகம் தம்

P.C: WWF_Malaysia 

இந்த இறப்பின்மூலம் மலேசியாவில் 'இமான்' என்ற பெண் சுமத்ர காண்டாமிருகம் மட்டும்தான் இப்போது மீதமிருக்கிறது. துணை இல்லாததால் இதுதான் மலேசியாவின் கடைசி சுமத்ர காண்டாமிருகம். இன்றைய தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றில் வாழ்ந்து வந்த இவை இப்போது எண்ணிக்கையில் 30-80 மட்டுமே இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த இனத்தின் அழிவுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது இதன் வாழ்விடங்களின் அழிவுதான். இப்போது மீதமிருக்கும் சில காண்டாமிருகங்களும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் இவை தவிக்கின்றன. முன்பு மனித வேட்டைகளும் பெருமளவில் இவற்றின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கின்றன. கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் இந்த சொற்ப எண்ணிக்கையும் சில வருடங்களில் மறையக்கூடும்.

2011-ம் ஆண்டு தொடங்கி செயற்கை கருத்தரிப்பு மூலம் இனத்தைப் பெருக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் மலேசியாவுக்கு இந்த இறப்பு மிகப்பெரிய பின்னடைவு. இருப்பினும் 'தம்'மின் மரபணுக்கள் வருங்கால முயற்சிகளுக்காகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க