"சென்னை வறட்சி, மழையின் பிழையல்ல... மனிதனின் பிழை!" - பேராசிரியர் ஜனகராஜன் | Chennai drought is manmade one says Professor Janagarajan

வெளியிடப்பட்ட நேரம்: 09:04 (29/05/2019)

கடைசி தொடர்பு:09:49 (29/05/2019)

"சென்னை வறட்சி, மழையின் பிழையல்ல... மனிதனின் பிழை!" - பேராசிரியர் ஜனகராஜன்

"1985-லிருந்து இன்று வரை 20,000 கோடிக்கும் மேல் அரசு செலவழித்திருக்கிறது. உலக வங்கி உட்படப் பல வங்கிகளில் இருந்து கடன் வாங்கி செலவு செய்திருக்கிறார்கள். இவ்வளவு செலவு செய்தும் நீர் நிலைகளில் தண்ணீர் நிற்காமல் போவதன் காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. ஆவணங்களில் நீர்நிலைகள் தூர்வாரப்பட்ட விவரங்கள் இருக்கிறதே தவிர, நிஜத்தில் தூர்வாரியிருக்கிறார்களா என்பது தெரியவில்லை."

ப்போது சென்னைக்குள் எவ்வளவு பணம் செலவழித்தாலும் தண்ணீர் கிடைப்பது அரிதான விஷயமாகிவிட்டது. தண்ணீர் பிரச்னை வரும்போது மட்டும்தான் நாம் தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து பார்க்கிறோம். இதை ஒரு பிரச்னையாகப் பார்க்காமல் தண்ணீரின் அவசியத்தை உணரக் கிடைத்த ஒரு வாய்ப்பாகவும் பார்க்கலாம். இப்போதைய தண்ணீர் பிரச்னை காலத்துக்கும் தண்ணீரை வீணாக்கக் கூடாது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தும். இந்த வறட்சிக்குத் தற்காலிகமாகத் தீர்வு காண்பதுடன், நிலையான தீர்வும் காணப்பட வேண்டியது அவசியமாகிறது. தண்ணீர் பிரச்னையைப் போக்க அரசாங்கம் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக அலசுகிறார், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரான ஜனகராஜன்.

சென்னை வறட்சி

"இப்போதுள்ள தண்ணீர் பிரச்னையை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

ஜனகராஜன்இவ்வளவு பெரிய தண்ணீர் பற்றாக்குறை சென்னைக்கு வர வாய்ப்பே இல்லை. சென்னை ஒரு உபரி நீரோடும் நகரம். சென்னையைச் சுற்றிலும் மழை அளவு பிரமாதமாகத்தான் இருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சராசரி மழையளவு பொழிந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த ஆண்டு வறட்சி என்று சொல்லும் சூழலிலும் 800 மி.மீ மழை பெய்திருக்கிறது. இந்த மழை தண்ணீர் எங்கே போகிறது? இந்தக் கேள்வியைக் கேட்கக் காரணம், ஜெய்ப்பூர் நகரத்தில் 550 மி.மீ, பெங்களூர் நகரத்தில் 860 மி.மீ மழை பொழிவு இருக்கிறது. சென்னையில் இருக்கும் மழை பொழிவை வைத்து வறட்சி என்று எப்படி சொல்ல முடியும்? இப்படி பெய்யும் மழையை நாம் கணக்கில் எடுத்துக்கொள்வது கிடையாது. 426 ச.கி.மீ கொண்ட நகரத்துக்குள் 1,350 மி.மீ மழையளவு இருந்தால், அது 17 டி.எம்.சி தண்ணீர் அளவாகும். சென்னைக்குத் தேவை ஒரு மாதத்துக்கு 1 டி.எம்.சி தண்ணீர்தான். வருடத்துக்கு 12 டி.எம்.சி தேவை, ஆனால் நமக்குக் கிடைப்பது 17 டி.எம்.சி சென்னைக்கு பெய்யும் மழையை நாம் சேகரிப்பது கிடையாது. பெய்தவுடன் சாக்கடையுடன் கலந்து கடலுக்கு சென்றுவிடுகிறது. அதைச் சேமிப்பதற்கான யோசனையும் நம்மிடம் இல்லை. "

"17 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும் என்றால் வறட்சி ஏற்பட்டது எப்படி?"

"17 டி.எம்.சி தண்ணீருக்கே ஆச்சர்யப்படாதீர்கள். இன்னொரு கணக்கும் இருக்கிறது. சென்னையில் பெய்யும் மழையால் நமக்கு வெள்ளம் வருவதில்லை. காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெய்யும் மழையால்தான் வெள்ளம் வருகிறது. இந்த மூன்று மாவட்டங்கள் வரை சென்னை பெருநகரமாக விரிவடையப்போகிறது. இது மொத்தமாக 8,800 ச.கி.மீ. இதில் 1,350 மி.மீ மழையளவு இருந்தால் 330 டி.எம்.சி. அந்தத் தண்ணீரை சேமிக்க நாம் என்ன வழிவகை செய்திருக்கிறோம்? அவ்வளவு தண்ணீர் பெய்யும்போது வெள்ளம் எனச் சொல்லிவிடுவோம். இந்தத் தண்ணீரைச் சேமிப்பதற்கு அந்த மூன்று மாவட்டங்களிலும் 4,100 நீர்நிலைகள் இருக்கின்றன. அவற்றில் 200 டி.எம்.சி அளவு சேர்த்து, மீத நீரைக் கடலில் கலக்க விடலாம். கடலில் நீர் கலப்பதும் நல்லதுதான். மூன்று மாவட்டங்களுக்கும் ஒரு மாதத்துக்கு 3 டி.எம்.சி என வைத்துக்கொண்டால், ஒரு மாதத்துக்கே 36 டி.எம்.சிதான் தேவைப்படும்."

"இந்தத் தண்ணீர் ஏன் வீணாகிறது, எப்படிச் சேமிப்பது?"

"மழைநீரை முழுமையாகச் சேமித்தால் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு மழை பொழிவு இல்லாமல் இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம். இதை ஏன் செய்யக் கூடாது. இதுதான் உண்மையான மழைநீர் சேகரிப்பு. இதனால், நிலத்தடி நீரை ஏராளமாகச் சேமிக்கலாம். வறட்சிக்கு ஒரு காப்பீடாகவும் வைத்துக்கொள்ளலாம். வெப்பத்தைக் குறைத்து, சூழலை இனிமையாக வைத்திருக்கவும் உதவும்."

வறட்சி

"தண்ணீரைச் சேமிக்க இதற்கு முன்னர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கிறதே?"

"1985-லிருந்து இன்று வரை 20,000 கோடிக்கும் மேல் அரசு செலவழித்திருக்கிறது. உலக வங்கி உட்படப் பல வங்கிகளில் இருந்து கடன் வாங்கி செலவு செய்திருக்கிறார்கள். இவ்வளவு செலவு செய்தும் நீர் நிலைகளில் தண்ணீர் நிற்காமல் போவதன் காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. ஆவணங்களில் நீர்நிலைகள் தூர்வாரப்பட்ட விவரங்கள் இருக்கிறதே தவிர, நிஜத்தில் தூர்வாரியிருக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஒரு பக்கம் ஏரிகளை இழந்துகொண்டே இருக்கிறோம், ஒரு பக்கம் செலவு செய்து கொண்டே இருக்கிறோம். இப்படித் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருப்பதுதான் தமிழகத்தின் அவலம். எல்லாம் அரசின் கைகளில்தான் இருக்கின்றன."

"இந்த நிலைக்கு என்னதான் தீர்வு?"

"நீர்நிலைகளை மக்கள் சொத்து என்று அறிவித்துவிட்டு, எந்தவிதமான ஆக்கிரமிப்புகளும் செய்யவிடக் கூடாது. திருவள்ளூர், காஞ்சிபுரத்தை நீர்பிடிப்பு மேலாண்மைப் பகுதியாக அறிவிக்க வேண்டும். ஏரி, குளம், குட்டை, கோயில் குளங்கள் ஆகியவற்றைப் பராமரிக்க தனி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். அந்த அமைப்பு நீர்நிலைகளை மட்டும் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். இதை முழுமையாகச் செய்தால் வரும் காலங்களில் தண்ணீர் பிரச்னைகளிலிருந்து தப்பிக்க முடியும். இன்று இருக்கும் பிரச்னைக்குக் காரணம், 'மழையின் பிழையல்ல, மனிதனின் பிழைதான்.' "


டிரெண்டிங் @ விகடன்