பென்ஸ் தலைவருக்கு மறக்கமுடியாத விடைகொடுத்த பிஎம்டபிள்யூ! #zetsche | BMW bid farewell to Diamler CEO dieter zetsche

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (29/05/2019)

கடைசி தொடர்பு:13:40 (29/05/2019)

பென்ஸ் தலைவருக்கு மறக்கமுடியாத விடைகொடுத்த பிஎம்டபிள்யூ! #zetsche

கடந்த 13 ஆண்டுகளாக டயம்லெர் AG மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனங்களுக்குத் தலைவராக இருக்கும் டைட்டர் ஸெட்ச் கடந்த வாரம் தனது பதவியில் இருந்து ஓய்வுபெற்றார். அட்டோனோமஸ் டிரைவிங், எலெக்ட்ரிக் கார் போன்ற நவீன தொழில்நுட்பத்தின் பக்கம் மெர்சிடீஸ் திரும்ப மிக முக்கியமான காரணம் இவர்தான். 8 பில்லியனாக இருந்த மெர்சிடீஸின் R&D முதலீட்டை 14 பில்லியன் வரை உயர்த்தியவர் இவர். ஜெர்மன் நிறுவனங்களில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது நபர் இவர். 2014-ல் இவரின் ஆண்டு வருமானம் 112.2 கோடி ரூபாய். மெர்சிடிஸ் நிறுவனத்தில் இருந்து விலகிய இவருக்காக ஃபேர்வெல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது பிஎம்டபிள்யூ.

பென்ஸ் CEO dieter zetsche

டைட்டர் ஸெட்ச் போலவே இருக்கும் ஒருவரை இந்த வீடியோவில் நடிக்கவைத்துள்ளார்கள். இந்த வீடியோ தற்போது கார் ரசிகர்களிடையே செம டிரெண்டிங். பென்ஸ் நிறுவனத்திலிருந்து டாடா காட்டிய ஸெட்சை மேபக் காரில் வீட்டில் கொண்டுபோய் விடுகிறார்கள். சிறிது நேரத்தில் கராஜ் கதவைத் திறந்து பிஎம்டபிள்யூ i8 ரோட்ஸ்டர் காரில் இருந்து டைட்டர் ஸெட்ச் வெளியேறுவது போல முடிகிறது. கடைசியில், பல ஆண்டுகளாக எங்களுக்கு ஊக்கமளித்ததற்கு நன்றி என்ற வார்த்தைகளோடு முடிகிறது வீடியோ.

பென்ஸ்-பிஎம்டபிள்யூ, இந்த இரண்டு ஜெர்மன் நிறுவனங்களுக்கிடையே லக்ஸூரி கார் விற்பனையில் பெரும் போட்டி நடந்துவருகிறது. பிஎம்டபிள்யூ 100-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தபோது 100 ஆண்டு போட்டிக்கு நன்றி என்று மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.