ஓட்டுநரை அபராதத்திலிருந்து காப்பாற்றிய புறா...! - ஜெர்மனியில் நடந்த சுவாரஸ்யம் | Dove saves driver from speeding fine in Germany

வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (29/05/2019)

கடைசி தொடர்பு:14:25 (29/05/2019)

ஓட்டுநரை அபராதத்திலிருந்து காப்பாற்றிய புறா...! - ஜெர்மனியில் நடந்த சுவாரஸ்யம்

முக்கிய நாடுகள் அனைத்திலும் குறிப்பிட்ட வேகத்தைத் தாண்டி சில சாலைகளில் செல்லக் கூடாது எனக் கட்டுப்பாடுகள் இருக்கும். இவற்றை மீறுபவர்களைக் கண்காணிப்பதற்காக ஸ்பீட்டிராப் (speedtrap) கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். இவற்றில் குறிப்பிட்ட வேகத்தைத் தாண்டி வாகனங்கள் சென்றால் அவை புகைப்படம் எடுக்கப்படும். ஜெர்மனியில் இருக்கும் இப்படியான ஒரு ஸ்பீட் கேமராவில்தான் ஒரு வைரல் நிகழ்வு பதிவாகி உள்ளது. மணிக்கு 30 கிலோமீட்டருக்கு மேல் செல்லக்கூடாத குறுகலான பாதையில் மணிக்கு 54 கிலோமீட்டர் வேகத்தில் வந்து €105 (சுமார் 8,000 ரூபாய்) அபராதம் கட்டவேண்டியவரை ஒரு புறா காப்பாற்றியிருக்கிறது.

ஓட்டுநரை காப்பாற்றிய புறா

Photo: Viersen District Police

அது எப்படி என்று கேட்கிறீர்களா, ஸ்பீட் கேமராவில் விழுந்த காரின் புகைப்படத்தில் சரியாக ஓட்டுநரை மட்டும் மறைத்திருக்கிறது இந்தப் புறா. இதனால் அவரைக் காவல்துறையால் அடையாளம் காணமுடியவில்லை. வியர்சென் மாவட்ட காவல்துறை இதுகுறித்து ஜாலியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

``கிறிஸ்துவத்தில் புறாவை புனிதமாகக் கருதுவர். அதுதான் இவரை வந்து காப்பாற்றியிருக்கிறது. இம்முறை அவரை விட்டுவிடுகிறோம். இந்தப் படத்தில் இருப்பவரும் இந்தக் குறியீட்டைப் புரிந்துகொண்டு இனிமேல் கட்டுப்பாட்டுடன் வண்டி ஓட்டுவார் என நம்புகிறோம்" என்றது அந்த அறிக்கை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க