''திருநங்கைகளைப் பொறுத்தவரை காதல் ஓர் அனுபவம்!" திருநங்கை அருணா | Transgender Aruna talks about her personal life

வெளியிடப்பட்ட நேரம்: 19:24 (29/05/2019)

கடைசி தொடர்பு:19:24 (29/05/2019)

''திருநங்கைகளைப் பொறுத்தவரை காதல் ஓர் அனுபவம்!" திருநங்கை அருணா

'காதல்' அனைவருக்கும் பொதுவானது... காதலுக்கு இடையில் எந்த விதமான ஏற்றத் தாழ்வுகளும் கிடையாது. 'காதல்' என்பது வெறும் வார்த்தையல்ல... அது வாழ்க்கை!' என்கிறார் திருநங்கை அருணா. இவர் திருநங்கை எனத் தெரிந்தும் இவரைக் காதலித்தவர் தற்போது இவருடன் இல்லை. அவர் இல்லாவிட்டாலும் அவர் தந்து சென்ற நினைவலைகளைச் சுமந்துகொண்டு மீதி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார் அருணாம்மா.

திருநங்கை அருணா

''திருநங்கைகளை வீட்ல ஏத்துகிறது குறைவு... நானும் அந்த ரகம்தான். திருநங்கைனு தெரிஞ்சதும் வீட்டை விட்டு வெளியேறி பல போராட்டங்களை எதிர்கொண்டு எனக்கான வாழ்க்கையை வாழத் தொடங்கிய காலம் அது! புனேவில் என்னைப் போன்ற திருநங்கை சமூகத்தினருடன் சேர்ந்து சமூக சேவைகளில் ஈடுபட்டுட்டு இருந்தேன். 21 வயதில் முழு திருநங்கையாக மாறியிருந்த சமயம் ஒரு திருவிழாவில் அவரைப் பார்த்தேன். அந்தத் திருவிழாவில் நாங்க ரெண்டு பேரும் நண்பர்கள் ஆனோம். அவர் சென்னையில் பிசினஸ் பண்ணிட்டு இருந்தார். நான் புனேவில் இருந்தேன். நாங்க ரெண்டு பேரும் தொலைபேசி வழியாகத்தான் எங்கள் நட்பைத் தொடர்ந்தோம். போகப்போக அவருக்கு என்னைப் பிடிச்சிருந்தது. அவருடைய காதலை என்கிட்ட சொன்னார். நல்ல குடும்பம், கெட்ட பழக்கம் இல்லாத பையன். அதுமட்டுமல்லாமல் என்னை நேசிக்கிறவர் இதுக்கு மேல என்ன வேணும்... அவர் காதலை ஏத்துக்கிட்டேன்.

எங்க காதலுக்கு வயசு ஐஞ்சு ஆச்சு. அப்ப, நான் இளம் திருநங்கையாக இருந்த நேரம். எல்லா வயசு பெண்களும் எப்படிக் காதல் வசப்படுவாங்களோ அதே மாதிரியான உணர்வுதான் எனக்குள்ளேயும் இருந்துச்சு. தினமும் அவரைப் பார்க்கணும், அவர்கிட்ட மணிக்கணக்கா பேசணும்னு நிறைய ஆசைகள். இரண்டு பேரும் திருமணம் செஞ்சுக்கலாம்னு முடிவெடுத்தோம். நான் திருநங்கைன்னு அவருக்கு மட்டும்தான் தெரியும். அவர் குடும்பத்தினர் யாருக்கும் நான் திருநங்கைங்குறதே தெரியாது. எங்க காதல் திருமணத்தில் முடிந்தது'' என்றவர், சில நொடி மௌனத்துக்குப் பின் தொடர்ந்தார்.

''கல்யாணத்துக்குப் பிறகு, ஓராண்டு வரை எங்களுடைய சந்தோஷத்துக்கும் காதலுக்கும் குறைவே இல்லாம நாள்கள் நகர்ந்துச்சு. கொஞ்ச நாள் போகப்போக எங்களோட சந்தோஷம் குறைய ஆரம்பிச்சது. அவருக்குன்னு சில ஆசைகள் இருக்கும். என்னால் அதைப் பூர்த்தி செய்ய முடியாம போச்சு. அதே மாதிரி அவரால் சில விஷயங்களில் என்னைப் புரிஞ்சுக்க முடியலை. இரண்டு பேருக்குள்ளேயும் கருத்து வேறுபாடு எட்டிப் பார்க்க ஆரம்பிச்சது. சரி நாம பிரிஞ்சிடலாம்னு நாங்க ரெண்டு பேரும் பேசி முடிவெடுத்தோம்.

அருணா

இரண்டு பேரும் பிரிஞ்சதுக்கு அப்புறமாகத்தான் அவங்க வீட்டுல எல்லோருக்கும் நான் திருநங்கைன்னே தெரிஞ்சது. அதுக்கப்புறம் சில ஆண்டுகள் வரைக்கும் நான் அவரைச் சந்திக்கவே இல்லை. என்னைப் பிரிந்து அவரும் சில ஆண்டுகள் வரைக்கும் யாரையும் திருமணம் செஞ்சிக்காமலேயே இருந்திருக்காரு. அப்புறம் எப்படியோ அவங்க வீட்டுல ஒத்துக்க வைச்சு திருமணம் செஞ்சு வைச்சிருக்காங்க. ரொம்ப வருஷத்துக்கு அப்புறமா அவரை சந்திச்சேன். நான் பார்க்கும்போது என் காதலுக்கு வயசாகிடுச்சு. அவருக்குத் திருமணமாகி குழந்தைகள் இருந்தாங்க. எப்படி இருக்கன்னு அவர் கேட்ட தருணம் வெடித்து அழுகணும்னு தோணுச்சு. ஆனா, அவர் சந்தோஷமா இருக்காரு... அதைவிட எனக்கு என்ன வேணும்... அதுக்கப்புறம் ஒரு நண்பனா அவர்கிட்ட பேசுவேன். அவ்வளவுதான்! இப்போ நரை வந்து அவர் தளர்ந்து போயிட்டார். ஆனா, இன்னமும் அவர் மனசுல என் மேல உள்ள காதல் பசுமையா இருக்கிறதை என்னால உணர முடியுது.

எப்போவாச்சும் எங்கேயாச்சும் அவரைப் பார்த்தா இரண்டு நொடிகள் நின்னு பேசுவேன். எனக்கு ஆதரவுன்னா அது என் திருநங்கை சமூகம் மட்டும்தான். அவங்களுக்காக ஓடிட்டு இருக்கேன். இந்த ஓட்டத்தில் காதல், கல்யாணம்னு எதுக்கும் நேரமுமில்லை. அவரை நேசிச்ச இந்த இதயத்தில் வேறு யாருக்கும் இடமுமில்லை. அதனால், என் காதல் பற்றி யோசிக்கவோ அதுக்காக வருத்தப்படவோ எனக்கு நேரமில்லை. திருநங்கைகளைப் பொறுத்தவரைக்கும் காதலும் சரி, கல்யாணமும் சரி அவங்க வாழ்க்கையில் ஓர் அனுபவம். என் காதல் எனக்கு ஒரு அனுபவம்..." எனப் புன்னகைக்கிறார் அருணா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்