"பாடப்புத்தகம் வழியா அடுத்த தலைமுறைக்குப் போகப்போறார்" நெல் ஜெயராமன் மனைவி சித்ரா நெகிழ்ச்சி | Definetly My son going to follow his path says chitra, wife of nel jeyaraman

வெளியிடப்பட்ட நேரம்: 20:05 (29/05/2019)

கடைசி தொடர்பு:20:05 (29/05/2019)

"பாடப்புத்தகம் வழியா அடுத்த தலைமுறைக்குப் போகப்போறார்" நெல் ஜெயராமன் மனைவி சித்ரா நெகிழ்ச்சி

இயற்கை விவசாயம் என்றாலே நினைவிற்கு வருவது ``நம்மாழ்வாரும் அவரின் சீடரான நெல் ஜெயராமனும்தான். நஞ்சில்லா இயற்கை விவசாயம் பற்றிய செய்திகளை தம் வார்த்தைகள் மூலமாக மட்டுமல்லாமல், வாழ்க்கையின் வழியேயும் மக்களிடம் கொண்டுசேர்த்தவர் நெல் ஜெயராமன். அவர் நடத்திய பாரம்பர்ய நெல் திருவிழாக்கள் நம் சமூகத்திற்கு அவர் அளித்த மாபெரும் கொடை. இளம் தலைமுறையினர் விவசாயத்தை நோக்கி வருவதற்குப் பெரும் தூண்டுகோலாக நெல் ஜெயராமன் இருந்தார் என்பதற்கு மாற்றுக்கருத்துகள் இருக்க முடியாது. கடந்த ஆண்டு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிர் நீத்தார். அவரின் உழைப்புக்கு ஈடாக இன்னொருவரைச் சொல்வது சிரமம். அவரின் இழப்பு தமிழகத்தின் வேளாண்துறைக்குப் பேரிழப்பே. தனிச் சிறப்புமிக்க நெல் ஜெயராமன் வரலாற்றைத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை 12 -ம் வகுப்பு தாவரவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற வைத்துள்ளது. பல்வேறு விவசாய அறிஞர்களுடன் நெல் ஜெயராமன் பற்றிய குறிப்புகளும் உள்ளன.

நெல் ஜெயராமன்

இந்த மகிழ்ச்சியான செய்தி பற்றி அவரின் மனைவி சித்ராவிடம் பேசினோம். ``என் கணவர் குடும்பத்தை நேசிப்பதைவிட அதிகமாக நேசித்தது விவசாயத்தையும் விவசாயிகளையும்தான். இயற்கை விவசாயம், பாரம்பர்ய நெல் விதைகளை மீட்டெடுப்பது எனத் தன் வாழ்நாள் முழுவதையும் விவசாயத்திற்காகவே அர்ப்பணித்தார். எல்லா நேரமும் விவசாயத்தைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தார்.

எப்படியாவது இயற்கை விவசாயத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதுதான் அவருடைய பெரும் கனவாக இருந்தது. பலமுறை என்னிடம், ``நாம் அழிந்தாலும் நமது இயற்கை விவசாயம் நம் பாரம்பர்ய விதைகளும் அழியாமல் காப்பாற்ற வேண்டும். அதற்கு அடுத்த தலைமுறைக்கு விவசாயத்தைக் கற்பிப்பதைத் தவிர வேறு வழி இல்லை" என்று கூறுவார். இன்றைக்கு அவருடைய வரலாறு பள்ளி மாணவர்களிடையே சென்று சேர்ந்துள்ளது. இதைவிட அவருக்கு வேறு சிறப்பை யாராலும் செய்துவிட முடியாது. அவர் உயிரோடு இருந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் இதைப் பார்த்து அவர் மிகவும் மகிழ்ந்து இருப்பார். அவருடைய கனவு, அவரின் இறப்பிற்குப் பிறகாவது நிறைவேறி உள்ளதே என்று ஆறுதலாக உள்ளது" என்று கூறும்போதே சித்ரா கண் கலங்குகிறார். 

நெல் ஜெயராமன்

``துக்கமும் மகிழ்ச்சியும் ஒரே நேரத்தில் வந்துவிட்டது" என்று கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மேலும் பேசத் தொடங்கினார். ``அவர் இருந்தவரை குடும்பத்தைச் சரியாகப் பார்த்துக்கொள்ள வில்லையே என்று பல நேரம் வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால், அவர் செய்துகொண்டிருந்தது எவ்வளவு பெரிய சாதனைக்குரிய விஷயம் என்று இப்போதுதான் எனக்குப் புரிகிறது. எங்களுக்கு ஒரே மகன். அவன் இப்போ ஏழாவது படித்துக்கொண்டிருக்கிறான். அவன் அப்பா வழியிலேயே இவனையும் இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கும் போராட்டக்குணம் உள்ளவனாக வளர்ப்பேன். அது ஒன்றுதான் என்னுடைய ஆசையும் அவருடைய கனவும். அடுத்த மாதம் நெல் திருவிழா நடைபெற விருக்கிறது. அவர் இல்லாமல் நடக்கவிருக்கும் நெல் திருவிழா இது. அதை நினைக்கும்போதே எனக்குள் துக்கம் எழுவதைத் தடுக்கமுடியவில்லை. இதுவரை 150 -க்கும் மேற்பட்ட பாரம்பர்ய நெல் விதைகளை மீட்டெடுக்க, இந்த நெல் திருவிழா மிக முக்கியப் பங்கு வகித்தது. அவர் இல்லையென்றாலும் இது தொடர்ந்து நடைபெறுவதை நினைக்கும்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கும் அவரைக் கொண்டுசேர்த்த பள்ளிக் கல்வித்துறைக்கு நன்றி" என்றார் பெருமித உணர்வோடு.


டிரெண்டிங் @ விகடன்