கிரிக்கெட்டிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய 5 நிதிப்பாடங்கள்! | The game of cricket teaches us some valuable money lessons

வெளியிடப்பட்ட நேரம்: 08:58 (30/05/2019)

கடைசி தொடர்பு:08:58 (30/05/2019)

கிரிக்கெட்டிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய 5 நிதிப்பாடங்கள்!

கிரிக்கெட் விளையாட்டை, விளையாட்டாக மட்டும் பார்ப்பவர்கள்தான் இங்கு அதிகம். ஆனால் மைதானத்தில் நடக்கும் ஒரு சில நிகழ்வுகளை நம் ஒவ்வொருவரின் பொருளாதார விஷயங்களுடன் பொறுத்திப் பார்க்கும் போது, அதிலிருந்து சில நிதிப் பாடங்களை நம்மால் கற்றுக் கொள்ள முடியும்.

கிரிக்கெட்டிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய 5 நிதிப்பாடங்கள்!

கிரிக்கெட் விளையாட்டை `ஜென்டில்மென் விளையாட்டு' என்றும் அழைப்பார்கள். ஏனெனில், மற்ற விளையாட்டுகளில் இல்லாத நேர்த்தியும் சரியான அணுகுமுறையும் இந்த விளையாட்டில் அதிகம். அதுமட்டுமல்லாமல், கிரிக்கெட் விளையாட்டின் விதிமுறைகளும் சரியானதாக இருக்கும். அவுட் எனத் தெரிந்ததும் அடுத்த நிமிடமே ஆடுகளத்தைவிட்டு கேப்டன் தோனி வெளியேறுவதுபோல, பெரும்பாலான விளையாட்டு வீரர்களும் கண்ணியமாக நடந்துகொள்வார்கள். இந்திய ரசிகர்களுக்கு மற்ற விளையாட்டுகளின் மீது இல்லாத ஈர்ப்பும் மரியாதையும் கிரிக்கெட் விளையாட்டின் மீது இருப்பதற்குக் காரணம் இதுதான்.

கிரிக்கெட் விளையாட்டை, விளையாட்டாக மட்டும் பார்ப்பவர்கள்தான் இங்கு அதிகம். ஆனால், மைதானத்தில் நடக்கும் ஒருசில நிகழ்வுகளை நம் ஒவ்வொருவரின் பொருளாதார விஷயங்களுடன் பொருத்திப் பார்க்கும்போது, அதிலிருந்து சில நிதிப்பாடங்களை நம்மால் கற்றுக்கொள்ள முடியும். 

1. பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் முக்கியம்

கிரிக்கெட்

கிரிக்கெட் மைதானத்தில் விளையாடும்போது அடிபட்டுவிடக் கூடாது என்பதற்காக, விளையாட்டு வீரர்கள் தலைக்கவசம், கைகளுக்கு கிளவுஸ், முழங்காலுக்கு பேட் என அனைத்து பாதுகாப்புக் கவசங்களையும் அணிந்த பிறகே களமிறங்குவார்கள். அதேபோல  வாழ்க்கையிலும் பொருளாதார விஷயங்களில் பாதுகாப்பு மிகமிக அவசியம். 100 பேரை ஒன்றாக அமரவைத்து, யாரிடமெல்லாம் போதுமான அளவு லைஃப் இன்ஷூரன்ஸ் மற்றும் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் இருக்கிறது எனக் கேட்டால், அந்தக் கூட்டத்திலிருந்து 10 பேர் மட்டுமே கை தூக்குவார்கள்.

வாழ்க்கையின் பாதுகாப்பின்மைக்கு, இன்ஷூரன்ஸ் இல்லாமல் இருப்பதுதான் மிக முக்கியக் காரணம். அப்படித்தான் அவசரக்கால நிதியைச் சேமிக்காமல் இருப்பதும். சம்பாதிக்கும் பெரும்பகுதியை சேமிப்புக்காக ஒதுக்குபவராக நீங்கள் இருந்தாலும், அவசரக்கால நிதி எனத் தனியாக வங்கிக்கணக்கில் வைத்துக்கொள்ளாமல் இருப்பதும் ரிஸ்க்தான். வருமானமே இல்லாமல்போனாலும், குறைந்தபட்சம் குடும்பத் தேவைகளைச் சமாளிக்கிற அளவுக்காவது தோராயமான நிதி உங்களுடைய வங்கிச் சேமிப்புக் கணக்கில் இருப்பது நல்லது.

2. பரபரப்பான சூழ்நிலையில் சரியாக முடிவெடுப்பது

எதிர்வரும் பந்தை அடித்த அடுத்த நிமிடமே, ரன் எடுப்பதற்கு ஓடலாமா கூடாதா என்பதை பேட்ஸ்மேன்தான் முடிவு செய்ய வேண்டும். தானோ அல்லது தனது எதிர்முனையில் இருக்கும் பேட்ஸ்மேனோ ஓடி இலக்கை அடைய முடியாமல்போனால், ரன் அவுட் ஆகிவிடுவோம் என்கிற பதற்றமும் பரபரப்பும் பந்தை அடிக்கும் ஒவ்வொரு முறையும் பேட்ஸ்மேனுக்கு இருக்கும். இது மாதிரியான திக் திக் நிமிடங்களில் சரியாக முடிவெடுப்பது ரொம்பவே முக்கியம். அது தெரியாமல்தான் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை இழக்கிறார்கள். முடிவெடுக்கத் தெரிந்தவர்கள் தொடர்ந்து விளையாடுகிறார்கள். முதலீட்டு விஷயங்களையும் இப்படித்தான் அணுக வேண்டும். குறிப்பாக, பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், பரபரப்பான சூழ்நிலைகளில் பதற்றத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. பங்குகள் ஏற்ற-இறக்கங்களைச் சந்திக்கும்போது, பீதியடையாமல் எடுக்கும் முடிவுகளில் தெளிவாக இருப்பது முக்கியம். 

3. தெளிவான தகவல் பரிமாற்றம் 

கிரிக்கெட் மைதானத்தில் இருக்கும் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் கம்யூனிகேஷன் ரொம்பவே முக்கியம். குறிப்பாக, பேட்ஸ்மேனுக்கும் எதிர்முனையில் இருக்கும் மற்றொரு பேட்ஸ்மேனுக்கும் அதிகமாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் ரன் அவுட் ஆகாமல் ஆட முடியும். பொருளாதார விவரங்களை குடும்ப உறுப்பினர்களுடன் பரிமாறிக்கொள்வதும் அப்படித்தான். தன் வாழ்க்கைத் துணையுடன் குடும்பத்தின் நிதி மற்றும் இன்ஷூரன்ஸ் விஷயங்கள் குறித்த கம்யூனிகேஷன் தெளிவாக இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் இல்லாத சமயங்களிலும், நிதி சார்ந்த விஷயங்களை அவர்களால் கையாள முடியும். 

4. முறையான திட்டமிடல்

கிரிக்கெட்

தனது குழுவை கட்டமைப்பதும், சரியாக வழிநடத்துவதும் கேப்டன் பொறுப்பு. இதில் அவர் தவறு செய்கிறார் என்றால், நிச்சயமாக அந்தத் தவறானது விளையாட்டையும் பாதிக்கும். குழுவின் ஒற்றுமையையும் அது சீர்குலைக்கும். அதேபோலத்தான், ஒருவருடைய அசெட் அலகேஷன் சரியாகத் திட்டமிடப்படவில்லை என்றால், அனைத்து முதலீடுகளுமே சரிவைச் சந்திக்கும். முதலீட்டை ஆரம்பிக்கும்போதே எந்த முதலீட்டில் எவ்வளவு என்பதைச் சரியாகப் பிரித்து முதலீடு செய்வது முக்கியம். அசெட் அலகேஷன் சரியாக இருக்கும்போது, ஒரு முதலீடு நஷ்டமடைந்தாலும் இன்னொரு முதலீடு தரும் லாபம் அதை ஈடுசெய்யும். முதலீட்டாளர்களின் வயது, ரிஸ்க் எடுக்கும் அளவு எனப் பல காரணிகளின் அடிப்படையில் அசெட் அலகேஷனைத் தீர்மானிக்க வேண்டும்.

5. முதலீடுகளை, சீக்கிரமாகவே தொடங்குங்கள்

ரன்கள் எடுப்பதற்காக அதிகபட்சம் 20 ஓவர் வழங்கப்படுகிறது எனில், ஆரம்ப ஓவர்களில் ரன்களை குவிக்காமல், இறுதிக்கட்ட ஓவர்களுக்காகக் காத்துக்கொண்டிருப்பது சரியான அணுகுமுறை கிடையாது. ஓப்பனிங்கில் இறங்கும் பேட்ஸ்மேன்கள் அதிக ரன்களை எடுக்கும் எண்ணத்தில்தான் பந்தை எதிர்கொள்வார்கள். அப்படித்தான் முதலீட்டு விஷயங்களையும் அணுக வேண்டும். வயது குறைவாக இருக்கும்போதே முதலீட்டை ஆரம்பித்துவிடுங்கள். அதாவது எப்போது ஒருவர் சம்பாதிக்க ஆரம்பிக்கிறாரோ அப்போதிருந்தே குறைந்தபட்ச தொகையையாவது சேமிக்க ஆரம்பித்துவிட வேண்டும். சீக்கிரமாக ஆரம்பிக்கும் முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் எதிர்பார்ப்பதைவிட அதிகமாக இருக்கும் என்பதால், எதிர்காலத் தேவைகளை எளிதாகப் பூர்த்திசெய்துகொள்ளலாம்.


டிரெண்டிங் @ விகடன்