`பூமியின் பேரழிவு இப்படித்தான் தொடங்கும்!' 1972-லேயே சரியாகக் கணித்த 'வோர்ல்டு1' | World1 computer which predicted the apocalypse in 1972

வெளியிடப்பட்ட நேரம்: 11:33 (30/05/2019)

கடைசி தொடர்பு:11:34 (30/05/2019)

`பூமியின் பேரழிவு இப்படித்தான் தொடங்கும்!' 1972-லேயே சரியாகக் கணித்த 'வோர்ல்டு1'

இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கத் தொடங்கும்போது பூமியின் ஏதாவதொரு மூலையில், உலகம் அழிந்துகொண்டிருப்பதன் விளைவுகளை உங்களைப் போன்ற ஏதேனும் ஒரு மனிதர் அனுபவித்துக்கொண்டிருப்பார். நாளை அது நீங்களாகவும் இருக்கலாம்...

`பூமியின் பேரழிவு இப்படித்தான் தொடங்கும்!' 1972-லேயே சரியாகக் கணித்த 'வோர்ல்டு1'

உலகம் அழியப்போகிறது. அழிந்துகொண்டிருக்கிறது. இல்லை, அழிந்தேவிட்டது. 

இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கத் தொடங்கும்போது பூமியின் ஏதாவதொரு மூலையில், உலகம் அழிந்துகொண்டிருப்பதன் விளைவுகளை உங்களைப் போன்ற ஏதேனும் ஒரு மனிதர் அனுபவித்துக்கொண்டிருப்பார். நாளை அது நீங்களாகவும் இருக்கலாம்...

இடம்: மெசாசூஸெட்ஸ் தொழில்நுட்பக் கழகம், அமெரிக்கா. 

1972-ம் ஆண்டில் ஒரு கணினி மென்பொருள் வடிவமைக்கப்பட்டது. அதன் பெயர் வோர்ல்டு 1 (World1). க்ளப் ஆஃப் ரோம் என்ற அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், அரசாங்க அதிகாரிகள் என்று பலரும் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்கள் உலகின் பிரச்னைகளைச் சரிசெய்வதில் கவனம் செலுத்தியிருந்தார்கள். அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் உலகம் எந்த அளவுக்கு வளர்ந்துகொண்டிருக்கிறது, அவர்கள் முன்னெடுத்த வளர்ச்சிக் கோட்பாட்டை உலகம் எந்த எல்லைவரை தாக்குப்பிடிக்கும் போன்றவற்றைத் தெரிந்துகொள்ள முயன்றார்கள். வோர்ல்டு 1 என்ற எதிர்காலத்தைக் கணிக்கக்கூடிய அந்த மென்பொருள் ஜே ஃபாரஸ்டர் (Jay Forrester) என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

பேரழிவு

மனித நாகரிகத்தின் எதிர்கால தலையெழுத்தை கணிக்க வேண்டியதுதான் அந்த மென்பொருளுக்குக் கொடுக்கப்பட்ட வேலை. மனித நாகரிகத்தின் எதிர்காலத்தைக் கணிப்பதற்காக அது பல காரணிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டது. மாசுபாடு, மக்கள் தொகை அதிகரித்தல், இயற்கை வளங்களின் இருப்பு, சர்வதேச அளவில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்வியல் தரம் உட்பட பசி, வறுமை என்று பலவும் அந்தப் பட்டியலில் முக்கியமான காரணிகளாக இருந்தன. இவற்றையெல்லாம் ஜேய் ஃபாரஸ்டர் கணக்கில் எடுக்குமாறு மென்பொருளுக்குக் கட்டளையிட்டபோது க்ளப் ஆஃப் ரோம் அமைப்பிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. அவர்கள் இத்தனையை ஏன் கவனிக்க வேண்டும். அவையெல்லாம் தனித்தனி பிரச்னைகள் என்று வாதிட்டார்கள். ஆனால், இவை அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றும் அனைத்தையும் நாம் கவனிக்க வேண்டுமென்றும் அவர் உறுதியாகக் கூறினார். அவர் சொன்னதுபோல், இந்தப் பிரச்னைகள் அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று நாம் இன்று பேசிக்கொண்டிருக்கிறோம்.

வோர்ல்டு 1 கணிப்பது 100 சதவிகிதம் துல்லியமாக இருக்காது. அது எடுத்துக்கொண்ட காரணிகளை அப்போதைய நிகழ்காலத்தோடு ஒப்பிட்டு எதிர்காலத்தில் எப்படியிருக்கும் என்பதைப் புரிய வைக்க வரைகட்டப் பகுப்பாய்வை (Graph analysis) உருவாக்கியது. காலநிலை மாற்றத்தை அப்போது கணக்கில் எடுக்கவில்லை. வோர்ல்டு1 எடுத்துக்கொண்ட காரணிகள் அனைத்தின் நிலையும் எதிர்காலத்தில் அதாவது, இன்றைய காலகட்டத்தில் இறங்கு முகமாக இருக்குமென்று அந்த வரைகட்டப் பகுப்பாய்வு கூறியது. பூமியில் மனித இனத்தின் பயணப்பாதை எதிர்காலத்தில் அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது என்பதை வோர்ல்டு1 மென்பொருளின் கணிப்பு கூறியது. இது வெறும் மென்பொருள்தான் அது கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென்று பலரும் வாதிட்டார்கள். அவர்கள் முன்வைத்த வளர்ச்சிக் கோட்பாடுமீது இப்படியொரு ஆபத்தான குற்றச்சாட்டுகளை யாரும் வைப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் கணித்தது தவறாகிவிட்டது. வோர்ல்டு1 கணித்தது சரியாகிவிட்டது. ஆம், அவர்களின் வளர்ச்சிக் கோட்பாடு பூமியை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றுகொண்டிருக்கிறது. 

1972-ம் ஆண்டின் வோர்ல்டு1 கூறியதன்படி, 2020-ம் ஆண்டுதான் அந்தப் பேரழிவுக்கான தொடக்கமாக இருக்குமென்று கணிக்கப்பட்டது. அப்படி ஏற்படாமல் தவிர்ப்பதற்காக நாம் எதையும் செய்யவில்லை என்றால் பூமியில் மனித நாகரிகத்தின் தரம் பூஜ்ஜியத்தைத் தொடும் வரை இந்தப் பேரழிவின் வீரியம் ஓயாது என்று அது கணித்திருந்தது. மாசுபாடு மிகத் தீவிரமான பிரச்னையாக உருவெடுக்கும், அது மனிதர்களைக் கொல்லும் அளவுக்கு ஆபத்தானதாக மாறி நிற்கும் என்று அது கணித்தது. ஆம், இன்று மாசுபாடு உலகளவில் பலரையும் கொன்றுகொண்டிருக்கிறது. இந்த நிலை 2040-க்குப் பிறகு மேலும் மோசமாகும் என்று கூறப்பட்டது. அதுவும் உலகின் இப்போதைய மக்கள் தொகையை 1900-ம் ஆண்டில் எந்த அளவுக்கு இருந்ததோ அந்த அளவுக்கே குறைத்துவிடும் என்று கணிக்கப்பட்டது. 2050-ம் ஆண்டிலிருந்து நாகரிகம் என்று நாம் இப்போது எதை நினைக்கிறோமோ அது இருக்குமா என்பதே சந்தேகம்தான் என்றும் வோர்ல்டு1 கூறியது. 

1973-ம் ஆண்டின் வோர்ல்டு1 மென்பொருள்

இந்தக் கணிப்புகளை மையமாக வைத்து "வளர்ச்சிக்கான எல்லை (The Limits to Growth)" என்றொரு புத்தகத்தை க்ளப் ஆஃப் ரோம் அமைப்பு வெளியிட்டது. அதன்பிறகு, வோர்ல்டு 3 என்றொரு மென்பொருள் டொனெல்லா, டென்னிஸ் மீடோஸ் மற்றும் அவர்களின் குழுவால் உருவாக்கப்பட்டது. இந்த முறை, அவர்கள் மக்கள் தொகை, தொழிற்புரட்சி, இயற்கை வளங்களின் நுகர்வு, உணவு உற்பத்தி என்று மேலும் சில காரணிகளையும் சேர்த்துக்கொண்டார்கள். 'வளர்ச்சிக்கான எல்லை' புத்தகம் இதே வேகத்தில் போனால் மனித நாகரிகம் 2072-ம் ஆண்டு அழிந்துவிடும் என்று எச்சரித்தது. அந்த நூலின் மீதான விமர்சனங்கள் மிகக் கடுமையாக வந்தன. 

"கணினித் தொழில்நுட்பம் கூறுவது வெறும் பிதற்றல்தான். அதை உருவாக்கியவர்கள் மனம்போன போக்கில் தங்கள் அனுமானங்களைக் கூறியுள்ளார்கள். இதை வைத்துக்கொண்டு எதையும் முடிவு செய்ய முடியாது. இந்த நூல் வெறுமையான தவறாக வழிநடத்தக்கூடிய ஒன்று" என்று மிகக் கடுமையாக விமர்சித்தது நியூயார்க் டைம்ஸ். 

அப்போது அந்தக் கணினி மனித நாகரிகம் எப்படியும் 2040-ம் ஆண்டின்போது அழிந்துவிடும் அல்லது குறைந்தபட்சம் அதன் அழிவு தொடங்கிவிடும் என்று கணித்திருந்தது. 

உண்மையைச் சொல்லப்போனால், பூமியின் ஆறாவது பேரழிவு தொடங்கிவிட்டது. இதைப் பல அறிவியலாளர்களும் ஏற்றுக்கொள்ளவே செய்கிறார்கள். அதோடு இந்த ஆறாவது பேரழிவில் அழியப்போகும் உயிரினம் மனிதனாக இருக்கலாமென்றும் கூறப்படுகிறது. இவை அனைத்துமே அன்று வோர்ல்டு1 கூறியதிலிருந்து சிறிதும் பிசகாமல் நமக்குச் சமகாலத்தில் கிடைத்துள்ள தகவல்கள். அது வடிவமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதன் முடிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. "50 ஆண்டுகள் கடந்துவிட்டன. தரவுகள் மாறியிருக்கும். நில அமைப்புகள், மக்களின் வாழ்வியல் என்று அனைத்துமே மாறியிருக்கும். அவற்றையெல்லாம் வைத்து மீண்டுமொரு ஆய்வு செய்து பார்ப்போமே" என்று முடிவுசெய்தார் ஒருவர். 

வோர்ல்டு1

2014-ம் ஆண்டு கிரஹாம் டர்னர் (Graham Turner) என்ற ஒருவர் மீண்டும் வோர்ல்டு 1 கூறிய உலக அழிவு குறித்த விஷயங்களை ஆய்வுசெய்யத் தொடங்கினார். ஐக்கிய நாடுகள், அமெரிக்காவின் தேசிய கடலியல் மற்றும் வளிமண்டல ஆய்வகம் போன்றவற்றிலிருந்து தரவுகளைச் சேகரித்தார். வோர்ல்டு 1 மற்றும் வோர்ல்டு 3 மென்பொருள்கள் கூறியவற்றை இவற்றில் சேகரித்த தரவுகளோடு ஒப்பிட்டுப் பகுப்பாய்வு செய்தார். 

அவை அப்போது கூறியவையும் அவர் சேகரித்த தரவுகளும் பெரும்பாலும் ஒத்துப்போவது அவருக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது. வோர்ல்டு3 மென்பொருளின் தரவுகள் நாம் 2072-ம் ஆண்டு அழிந்துவிடுமென்று கூறியிருந்தது. டர்னர் செய்த ஆய்வின் முடிவில் அவர் இப்படிக் குறிப்பிட்டார், 

"நம் அழிவு தொடங்கிவிட்டது என்று சொல்வதைவிட, மனித இனத்தின் அழிவுப்பாதையுடைய கூர்முனையில் நாம் நின்றிருக்கிறோம் என்று சொல்வதே சரியாக இருக்கும்!" 

வோர்ல்டு 3 கூறியது சரியா அல்லது டர்னர் கூறுவது சரியா என்று நாம் ஆராய்ந்தால் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. நிலைமை இப்படியே போனால் நம் அழிவு மட்டும் நிச்சயம். 

அவர்களுடைய ஆய்வு உலகப் பொருளாதாரம், சுற்றுச்சூழல், மக்கள் தொகை இவை அனைத்துமே நிச்சயமாகப் பாதிக்கப்படும் என்று கூறவில்லை. அதேசமயம், 1973-ம் ஆண்டின் கணிப்புகள் அப்படியே நடக்குமென்றும் நாம் முடிவுக்கு வரவில்லை. ஆனால், ஏற்படப்போகும் சூழலியல் பேரழிவு அவை அனைத்துக்குமே வித்திடும். அதனால், உலகம் முழுவதும் போர்கள் வெடிக்கும். அதேசமயம் அதைச் சரிசெய்யத் தகுதியுள்ள உண்மையான சூழலியல் தலைமை உருவாகலாம். அது நம் பயணத்தைத் திசைதிருப்பலாம். நாம் மீண்டும் உயிர்த்தெழுந்து வரலாம். எதிர்காலத்தில் என்ன நடக்க வேண்டுமென்பது இப்போது நாம் எடுக்கப்போகும் முடிவில்தான் இருக்கிறது. இன்னமும் அரசுகள் சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்குக் காலநிலை அவசரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்குமானால் அந்த முடிவுக்கான விளைவுகளை அனுபவிக்கப்போவது நாமாகத்தானிருக்கும். 

கிரஹாம் டர்னர்

"எங்கள் ஆய்வு முடிவுகள் யாரையும் பயமுறுத்துவதற்காக அல்ல. அது ஓர் எச்சரிக்கை மணி மட்டுமே. நம் வளர்ச்சிக் கோட்பாடு 2100-ம் ஆண்டில் பேரழிவைக் கொண்டுவரும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால், இதே வேகத்தில் நாம் சென்றால் அந்தப் பேரழிவு வோர்ல்டு 1 சொல்வதுபோல் 2040-ம் ஆண்டுக்குள்ளாகவே வந்தாலும் வரலாம். எப்போதும் பூமி நாம் எதிர்பார்ப்பதுபோல் செயல்படுவதில்லை. அதன் இயல்புக்குத்தான் நாம் செயல்பட வேண்டும். இனியாவது அதை உணர்ந்து செயல்படுவோம். இதை நாம் ஏற்க மறுப்போமானால் விளைவுகளையும் அனுபவிப்போம்" - கிரஹாம் டர்னர். 

உலகம் அழியப் போகிறதென்று சொன்னோம். இப்போது அழிந்துகொண்டிருக்கிறது என்றும் சொல்கிறோம். உலக நாடுகளும் அரசுகளும் இதை முக்கியப் பிரச்னையாகக் கருதி தங்கள் தவறுகளைச் சரிசெய்ய முயலவில்லை என்றால், டர்னர் சொல்வதுபோல் நாளை உலகம் அழிந்துவிட்டதென்று சொல்ல நாம் இருக்கமாட்டோம். 


டிரெண்டிங் @ விகடன்