30 நாடுகளின் கொடிகளைச் சொல்லி உலக சாதனை படைத்த இரண்டரை வயது சிறுமி! | Two and half years old kavya sri identifies 30 countries national flags

வெளியிடப்பட்ட நேரம்: 15:28 (30/05/2019)

கடைசி தொடர்பு:15:28 (30/05/2019)

30 நாடுகளின் கொடிகளைச் சொல்லி உலக சாதனை படைத்த இரண்டரை வயது சிறுமி!

"நாங்கள் சொல்லிக்கொடுப்பதை அவள் ஏற்றுக்கொண்டால் சரி... மாறாக, அதைக் கட்டாயப்படுத்தித் திணிப்பதாக அவள் நினைத்தால், நிச்சயம் அதை வற்புறுத்த மாட்டோம்."

30 நாடுகளின் கொடிகளைச் சொல்லி உலக சாதனை படைத்த இரண்டரை வயது சிறுமி!

ஒரு வாரத்துக்கு முன் அறிமுகமானவர்களை இன்று பார்க்கும்போது, 'யார் இவர் எங்கோ பார்த்த மாதிரி இருக்கே!' என்று யோசனையில் நெற்றியைச் சுருக்கிக்கொள்வோம். ஏனென்றால், எல்லாமே தொழில்நுட்ப வசதிகள் வளர வளர மனிதர்களின் ஞாபக சக்தி குறைந்துகொண்டே வருகிறது. நம் வீட்டில் உள்ளவர்களின் மொபைல் எண்கள்கூட நினைவில் வைத்திருப்பதில்லை. வங்கிக் கணக்கு எண் தொடங்கி, எல்லாமே ஸ்மார்ட் போனில்தான் சேமித்து வைத்திருக்கிறோம். இப்படியான காலகட்டத்தில் இரண்டரை வயதேயான சிறுமி காவியா ஶ்ரீ, தனது நினைவாற்றலால் உலக சாதனை செய்திருக்கிறாள் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா? 

சிறுமி

சாதிப்பதற்கு நேரம் காலம் மட்டுமல்ல வயதும் தடை இல்லை என்பதைப் பலரும் சொல்லிக்கேள்விப்பட்டிருப்போம். அதற்குச் சிறந்த ஓர் உதாரணமாகத் திகழ்கிறார் காவியா ஶ்ரீ. 30 நாடுகளின் தேசியக் கொடிகளை ஒரே நிமிடத்தில் அடையாளம் காட்டி, சாதனை நிகழ்த்தியிருக்கிறார். சென்னை, நாவலூரில் வசித்துவரும் காவியா ஶ்ரீயைச் சந்தித்தோம். மழலை மொழியில் கொஞ்சிப் பேசினார். அதைக் கேட்பதே அழகு. அவளின் பெற்றோர் கார்த்திகேயன் மற்றும் திவ்யாவிடம் பேசினோம். 

“காவியாஸ்ரீக்குச் சில மாதங்களுக்கு முன், எல்லா நாட்டுத் தேசியக் கொடிகள் கொண்ட சார்ட் வாங்கிக் கொடுத்தோம். அப்போது, சும்மா ஒரு நாட்டின் பெயரைச் சொல்லி, அந்நாட்டுக்கான தேசியக் கொடியைக் காட்டினோம். அதை அப்படியே அவள் மறுநாள் சரியாகச் சொல்லிவிட்டாள். நாங்களும் அவளுடைய ஆர்வத்தைப் பார்த்து, ஐந்து நாடுகளையும் அதற்குரிய தேசியக் கொடிகளையும் சொல்லிக்கொடுத்தேன். அவற்றையும் சரியாகச் சொன்னது எங்களுக்கே ஆச்சர்யமாகத்தான் இருந்தது. எதைச் சொன்னாலும் உள்வாங்கி, திரும்பவும் வெளிப்படுத்துவதில் எப்போதுமே வியக்க வைக்கிறாள். அதன் பிறகும், எந்த நாட்டின் பெயரைச் சொன்னாலும், அதன் தேசியக் கொடியைச் சரியாகக் காட்டுவது அவளுக்கு இயல்பாகிவிட்டது. அதனால், நிறைய நாடுகளின் தேசியக் கொடிகளை அறிமுகப்படுத்தினோம். அவள் சொல்வதை வீடியோ எடுத்து வில் மெடல் ஆஃப் வேர்ல்டு ரெகார்டு (Will Medal Of World Record)-க்கு அனுப்பி வைத்தோம். பெரிய எதிர்பார்ப்பு ஏதும் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால், அவர்கள் நாங்கள் அனுப்பிய வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்த வயதில் காவ்யா ஶ்ரீ, இத்தனை நாடுகளின் கொடியை அடையாளம் காட்டுவது உலக சாதனை என்றனர். அதாவது, ஒரே நிமிடத்தில் 30 நாடுகளின் தேசியக் கொடிகளை காவியாஶ்ரீ அடையாளம் காட்டியிருந்ததே சாதனை என்றனர். எங்களுக்கு அவ்வளவு சந்தோஷம். எல்லோரும் பாராட்டினார்கள். மதுரை, பாரத் வித்யா மந்திர் பள்ளியில் பாராட்டு விழா வைத்து பதக்கமும் சான்றிதழும் அந்த நிறுவனம் வழங்கியது. அந்தத் தருணம் அவ்வளவு பெருமையைக் கொடுத்தது. இதைவிட மகிழ்ச்சி வேறு என்ன இருக்கிறது. 

சிறுமி

காவியாஶ்ரீ இப்போது 40 நாடுகளின் தேசியக்கொடியை அடையாளம் காட்டுகிறாள். அவளுக்கு இதிலிருக்கும் ஆர்வத்தை வைத்து, மேற்கொண்டு பல விஷயங்களைக் கற்றுக்கொடுக்க விரும்புகிறோம். ஆனால், ஒன்றில் மட்டும் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் சொல்லிக்கொடுப்பதை அவள் ஏற்றுக்கொண்டால் சரி... மாறாக, அதைக் கட்டாயப்படுத்தித் திணிப்பதாக அவள் நினைத்தால், நிச்சயம் அதை வற்புறுத்த மாட்டோம். ஏனென்றால், பிடிக்காத எதைச் செய்தாலும் முழு ஈடுபாட்டோடு நிச்சயம் செய்ய முடியாது" என்கிறார்கள் மிகத் தெளிவாக. 

காவியா ஶ்ரீ டாட்டா காட்டி விடைகொடுத்தாள். 


டிரெண்டிங் @ விகடன்