`என்ன நடந்துச்சுன்னா?!' - அப்போலோ அறை எண் 2008-ல் நேசமணியுடன் ஒரு சந்திப்பு! #VikatanExclusive | An exclusive interview with the movie character nesamani

வெளியிடப்பட்ட நேரம்: 16:49 (30/05/2019)

கடைசி தொடர்பு:16:49 (30/05/2019)

`என்ன நடந்துச்சுன்னா?!' - அப்போலோ அறை எண் 2008-ல் நேசமணியுடன் ஒரு சந்திப்பு! #VikatanExclusive

மத்தபடி வேணும்னு எல்லாம் அவன் பண்ணலங்க! நமக்கு ``மத்தவங்கிட்டதான் அடிவாங்கித் தருவாங்களே தவிர அவங்களே அடிக்கிற அளவுக்கு மனசாட்சி இல்லாத பசங்க இல்லை அவங்க!''

`என்ன நடந்துச்சுன்னா?!' - அப்போலோ அறை எண் 2008-ல் நேசமணியுடன் ஒரு சந்திப்பு! #VikatanExclusive

பக்கோடா போட்டு பொழைத்துக்கொள்ளச் சொல்லும் மனசாட்சி இல்லாத உலகில் இளைஞர்களுக்கு பெயின்டிங் பயிற்சி அளித்து தற்சார்பு வாழ்க்கையை முன்னெடுத்தவர், பூட்டிக்கிடந்த அதிகாரவர்க்கத்தின் கதவுகளை டெம்போ ட்ராவலர் கொண்டு முட்டித்திறந்த போராளி, பிரிட்டிஷ் தயாரிப்பு கடிகாரத்தைச் சல்லிசல்லியாகப் போட்டு நொறுக்கிய சுதேசி, `இது பட்டக்ஸுடா' என நிஜ மனிதனைக் குப்புறப்போட்டு ஹியூமன் அனாடமி பாடமெடுத்த சயின்டிஸ்ட் - இப்படிப் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரரான கான்ட்ராக்டர் நேசமணி தலையில் அடிபட்டு ஆபத்தான நிலைமையில் அப்போலோவில் இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டு தமிழகமே கவலையில் இருக்கிறது. அவரின் உண்மை நிலையை அறிய 2016-ல் அங்கிருந்த அதே தூரத்து மாமாவின் ஒண்ணுவிட்ட சித்தி பையனின் நண்பரான சோர்ஸின் உதவியை நாடினோம். நம்மை உள்ளே அழைத்துச் சென்றார்.

வாசலில் பிரேக்கிங் பசியில் டிவி மீடியாக்கள், வழிநெடுகிலும் கண்ணீரோடு எண்ணற்ற நலம்விரும்பிகள், பரபரப்பான ஆஸ்பத்திரி சிப்பந்திகள் என அனைவரையும் கடந்து அதே இரண்டாவது மாடிக்குச் சென்றோம். பொதுப்பணித்துறையை `நிர்வகிப்பதாக' சொல்லப்படும் முதல்வர் எந்நேரமும் வரலாம் என்பதால் மொத்த இடமும் பரபரப்பாக இருந்தது. செக்யூரிட்டி வளையங்களைத் தாண்டி அவர் இருந்த அறைக்குச் சென்றோம். வாசலில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு ஒருவர் ஜுஸ் குடித்துக்கொண்டிருந்தார். ``சார், இந்த நேசமணி...?'' என நாம் இழுப்பதைப் பார்த்து, `வாங்க... இந்த ரூம்தான்' என உள்ளே அழைத்துச் சென்றார். பெட் காலியாக இருந்தது. பெட்டில் ஏறி படுத்தவர், `இப்போ சொல்லுங்க, நான்தான் நேசமணி; என்றார். `சார், இதெல்லாம் ஒரு விளையாட்டா?' என நம் போட்டோகிராபர் டென்ஷனாக, `அட விளையாட்டு இல்லப்பா, ரூம்குள்ளயே இருந்தா ஒரே ஒரு சி.சி.டி.வி கேமராலதான் விழுவேன்! அந்த டேப்பு டெலீட் ஆயிட்டா? அதான் எல்லா சி.சி.டி.வி கேமராலயும் படுறமாதிரி அப்பப்ப வெளியே ஒரு நடை போய்ட்டுவர்றது' என நடப்பதை விளக்கினார்.

நேசமணி

யார் சார் நீங்க? எப்படி ஒரேநாள்ல டிரெண்ட் ஆனீங்க?

``அதான் தம்பி எனக்கும் தெரியல. நான் அடிப்படைல ஒரு இசைக்கலைஞன். சிங்காரவேலன் அண்ட் கோ இசைக்குழுவுல ஆரம்பிச்சது நம்ம பயணம். அப்போ பெருசா ஒண்ணும் வாசிக்கத் தெரியாது. பார்க்க மைக்கேல் ஜாக்சன் தங்கச்சி மாதிரி இருப்பேன்னு கூடவே வச்சிருந்தாங்க. இன்ஸ்ட்ரூமென்ட்டை எப்படி துடைச்சு வைக்கிறதுனு அவங்ககிட்ட கத்துக்கிட்டேன். என் ஃப்ரெண்ட் பிரபு முரட்டுக் காதலன். அவனுக்கு ஹெல்ப் பண்ணப்போய் பஞ்சாயத்தாயிடுச்சு. அதனால ஊரைவிட்டு ஓடி பட்டுக்கோட்டை சக்திநாடக சபாவுல வேஷம் கட்டிட்டு இருந்தேன். அங்கே வந்து முத்து என்னைப் பார்த்துட்டு `சென்னைக்குப் போ'னு அட்வைஸ் பண்ணார். சென்னை வந்த புதுசுல `ரூன் ஜகம்'ங்கிற ஒரு பங்களாவுல செக்யூரிட்டியா வேலை பார்த்தேன்.

பங்களாவுக்கு ஒருமுறை கச்சேரிக்காக வந்த ஆவுடப்பிள்ளையோட திறமையைப் பார்த்து அவரோட குழுவுல சேர்ந்தேன். நாங்க பாடின `மழைத்துளி மழைத்துளி' பாட்டு பட்டிதொட்டியெல்லாம் அப்போ ரொம்ப ஃபேமஸ்! இப்போ வந்த `தந்தானேனானே னானேனானே' கேஜிஎஃப் சவுண்டுக்கு எல்லாம் அப்போ எங்காளு கொடுத்த `தந்தானானே தனானா'தான் முன்னோடி. நகை, பணம்னு கூட்டம் விட்டெறியும். ஆவுடைப்பிள்ளைக்கு அப்புறம் குழு சிதறிப்போச்சு. அப்புறம் பக்கத்து கிராமத்துல இருந்த ஜமீன்தார் ராசப்பன்கிட்ட வேலைக்குச் சேர்ந்தேன். அவருக்கு போரடிக்கிறப்போ எல்லாம் வண்ணத்தமிழ்பாட்டு பாடுறதுதான் என் வேலை. அது பாருங்க, அப்போ தூக்கத்துல நடக்குற வியாதி இருந்தது. அப்படி ஒருநாள் ராத்திரி நடந்துபோய் கண்டது கழியதைப் பார்த்து பேயடிச்சு பயந்து ஊரைவிட்டு ஓடவேண்டியதாகிப் போச்சு.''

இசைபின்னணில இருந்து எப்படிங்க கான்ட்ராக்டர் வேலை?

``அதான் சொன்னேனே! பயத்துல ஊரைவிட்டு ஓடிட்டேன்னு! ஆவுடப்பிள்ளை எப்பயோ எடுத்துத் தந்த பாஸ்போர்ட்டை வச்சு பாரீன் போயிட்டேன். துபாய்ல ஏதுங்க இசைக்குழுவெல்லாம்? அதான் பொழைக்க கெக்ரான் மெக்ரான் கம்பெனில சேர்ந்து பில்டிங் வேலையெல்லாம் கத்துக்கிட்டேன். திரும்ப ஊருக்குள்ள வந்தப்போ `பில்டிங் கான்ட்ராக்டர்'னு மதிப்பு வந்துடுச்சு. அப்படியே பிடிச்சதுதான் இந்த ஜமீன் பங்களா பெயின்டிங் ஆர்டரும்.'' 

கிச்சுணமூர்த்தி, அரவிந்தன், சந்துரு

சம்பவம் நடந்த அன்னிக்கு அப்படி என்னதாங்க ஆச்சு?

கிச்சுணமூர்த்தி, அரவிந்தன், சந்துரு மூணு பேரும் ரெண்டு நாளா போட்டு பாடாப்படுத்தினானுங்க. போதாக்குறைக்கு இந்தக் கோவாலு வேற! `நீங்க மூணு பேரும் வேலையே பாக்கவேண்டாம்டா'னு கத்திட்டேன். அன்னிக்கு பாருங்க திங்கட்கிழமை போல! உடனே மூணு பேரும் மொபைல்ல ஏதோ கேம் சீரியல் பார்க்க ஆரம்பிச்சுடானுக. அதுல வர்ற வொயிட்ரைஸ் வெள்ளச்சாமியை நம்ம ஆர்யாத்தம்பி கத்தியை வச்சு ஏதோ கஜக்கஜக்னு பண்ணுவாராம்ல! இந்தக் கிச்சுணமூர்த்தி அப்படித்தான் சுத்தியை வச்சு எல்லார்கிட்டயும் ஏதோ பண்ணி காமிச்சுக்கிட்டுருந்தான். அதுபாருங்க நடுமண்டைல நம்மள டப்புனு போட்ருச்சு! நல்லவேள மயங்கிட்டேன். இல்லன்னா ஒண்ணுமாகலனு இந்த கேம் விளையாட ஆரம்பிச்சுருப்பானுக. மத்தபடி வேணும்னு எல்லாம் அவன் பண்ணலங்க! நமக்கு `மத்தவங்கிட்டதான் அடிவாங்கித் தருவாங்களே தவிர அவங்களே அடிக்கிற அளவுக்கு மனசாட்சி இல்லாத பசங்க இல்லை அவங்க!'

இப்போ என்ன ஐடியா? திரும்ப ஃபாரீனே போகப்போறீங்களா?

அது முடியாது தம்பி! வண்டில இருந்த நம்ம பாஸ்போர்ட்டை ஒரு எலி கடிச்சு தின்னுடுச்சு. நானும் சும்மா இல்லையே. `எலி'னு ஒரு படமே எடுத்து மொத்தமா எலி வம்சத்தையே கதறக் கதற பழிவாங்கிப்புட்டோம்ல!

குடும்பம் குட்டினு ஏதுமில்லையா?

யாருக்குத்தான் தம்பி ஆசை இருக்காது. ஒருதடவை எனக்கு பொண்ணு பார்க்கப்போனேன். பொண்ணு சும்மா மின்னல் மாதிரி பரபரன்னு இருப்பா. நமக்கு பொருத்தமா இருப்பாளேனு நினைச்சேன். ஆனா நம்ம நேரம் பாருங்க, நம்மகூட வந்த மாயி அண்ணனுக்கு அந்தப் பொண்ணு கரெக்ட்டாயிடுச்சு! அதோட வெறுத்துப்போனதுதான். 

கிச்சுணமூர்த்தி, அரவிந்தன், சந்துரு

ஆஸ்பத்திரி செலவை எப்படிச் சமாளிக்கிறீங்க?

சாஃப்ட்வேர்ல இருக்குற நம்ம நண்பர் மிஸ்டர் வொயிட், சென்ட்ரல் கவர்ன்மென்ட்ல வேலை பார்க்குற பிச்சுமணினு ஒருத்தர், மதுரைல என்னை மாதிரி சின்னச் சின்ன கான்ட்ராக்ட் வேலை பார்க்குற படித்துறைப் பாண்டி, இவங்க எல்லாம்தான் செலவைப் பாத்துக்கிறாங்க. பங்களா மேனேஜர் சுந்தரேசனும் கொஞ்சம் பணம் தர்றதா சொல்லியிருக்கார்.

இந்த விளம்பர மைலேஜை வச்சு நீங்க அரசியல்ல இறங்கப்போறதா தகவல் வருதே?  

அது பேரலல் யுனிவர்ஸ்ல வர்ற கேரக்டர் தம்பி! நம்ம டைம்லைனுக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல. அதனால, அது பத்திலாம் நாம பேசுறது சரியா இருக்காது. மன்னிச்சுக்கிடுங்க!

பதவியேற்பு விழா பரபரப்பை நீர்த்துப்போக வைக்கணும்னுதான் உங்களை வச்சு இவ்வளவு விளம்பரம் பண்ணப்படுறதா சொல்றாங்களே?

நானே இருந்து இருந்து 18 வருஷம் கழிச்சு டிரெண்ட் ஆகியிருக்கேன். அது உங்களுக்குப் பொறுக்கல! வெளியே போங்கய்யா அப்பரசன்டிகளா! 

குறிப்பு: படத்தின் கதாபாத்திரங்களைப் போலவே இந்த பேட்டியும் முழுக்க முழுக்க கற்பனை மட்டுமே... சிரித்து மகிழ மட்டுமே!


டிரெண்டிங் @ விகடன்