இந்த அழகிய பறவைகள் இறப்புக்கும் காலநிலை மாற்றம்தான் காரணம்! | These birds' death may be related to Climate change

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (30/05/2019)

கடைசி தொடர்பு:20:00 (30/05/2019)

இந்த அழகிய பறவைகள் இறப்புக்கும் காலநிலை மாற்றம்தான் காரணம்!

காலநிலை மாற்றத்தால் இறக்கும் பஃபின் பறவைகள்

காலநிலை மாற்றத்தால் அதிகரித்துவரும் வெப்பநிலையை மனிதன் மட்டுமில்லை, பறவைகளால்கூட தாங்க முடியாது. காலநிலை மாற்றம்குறித்து உலகம் முழுவதும் பலர் ஆராய்ச்சி செய்துவருகின்றனர். அப்படியான ஆராய்ச்சி ஒன்றின் அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர், அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். ஆர்ட்டிக் பகுதியில் உள்ள செயின்ட் பால் தீவுகளில் ஆரஞ்சு நிற மூக்கு, வெள்ளை நிறத்தில் தலை, கறுப்பு நிற உடல் என காணப்படும் பஃபின் என்ற நீர்வாழ் பறவையினம் கொத்துக் கொத்தாக செத்து மடிந்தன. அதற்கான முக்கியக் காரணம், பருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பநிலைதான் என்கிறார்கள். கடலின் வெப்பநிலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டிருக்கும் நிலையில், அதில் வாழும் கடல் வாழ் உயிரினங்களான மீன் மற்றும் ஏனைய விலங்குகள் பலவும் இடம்பெயர்கின்றன. இதனால், மீன்களை மட்டும் உண்டு உயிர்வாழும் பஃபின் பறவைகள், உணவு கிடைக்காமல் இறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

கடந்த 2016-ம் ஆண்டுகூட இப்பறவைகள் அதிகமாக இறப்பது பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதே நேரத்தில், ஆராய்ச்சியாளர்கள் கடந்த மூன்று மாதங்களாக அந்தப் பகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அங்கு, 9000 -க்கும் மேற்பட்ட பஃபின்களும் சில வகை கடல்வாழ் பறவைகளும் இறந்துள்ளதாகத் தெரிவிக்கிறது அந்தக் குழு. மீன்களும் முதுகெலும்பற்ற கடல் உயிரிகளும்தான் பஃபினின் உணவு வகை. இப்போது, வெப்பநிலை உயர்வால் அதிலும் பிரச்னை உருவாகியிருக்கிறது. இது, அந்தப் பகுதியின் உணவுச் சங்கிலியைப் பெருமளவில் பாதித்துள்ளது. உயரும் வெப்பநிலை, உருகும் பனிமலைகள் போன்றவற்றால் கடல்மட்டமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வௌவால்கள், சிறிய பறவையினங்கள் மற்றும் வலசை வரும் பறவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.