அலுவலக வேலைகளில் ஃபாலோ அப் ரொம்பவே முக்கியம்! ஏன்? | Office work, Follow up is very very important

வெளியிடப்பட்ட நேரம்: 10:11 (31/05/2019)

கடைசி தொடர்பு:10:32 (31/05/2019)

அலுவலக வேலைகளில் ஃபாலோ அப் ரொம்பவே முக்கியம்! ஏன்?

நீங்கள் முடித்துத் தரும் வேலையை உங்கள் உயர் அதிகாரிகளிடம் தருவதற்கு முன்பு நீங்கள் ஒரு பிரதியை உங்கள் மெயிலில் வைத்துக்கொள்வது நல்லது. உங்கள் உயர் அதிகாரி திடீரென நீங்கள் செய்து தந்த வேலையில் சந்தேகம் கேட்டால்...

அலுவலக வேலைகளில் ஃபாலோ அப் ரொம்பவே முக்கியம்! ஏன்?

ன்று எல்லா துறைகளிலும் அலுவலகத்தின் வேலை நேரம் தாண்டியும் வேலைகளை ஃபாலோ-அப் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. குறிப்பாக, மார்க்கெட்டிங், விற்பனை, மருத்துவம், ஊடகம் போன்ற பல துறைகளில் நேரம், காலம் பார்க்காமல் பணிபுரிய வேண்டியிருக்கிறது. இந்தத் துறைகளில் வாடிக்கையாளர்களின் திருப்திதான் முக்கியம் என்பதால், அவர்களின் தேவைக்கு 24 மணி நேரமும் ரெஸ்பான்ஸ் செய்வது முக்கியம். அலுவலக வேலையை அலுவலகத்தில் மட்டும்தான் செய்வேன் என்றில்லாமல், வீட்டுக்குப் போன பிறகும் ஃபாலோ-அப் செய்து வேலையை முழுமையாக முடித்துக்கொடுக்கும் பொறுப்பு அனைத்துப் பணியாளர்களுக்கும் இருக்கிறது. 

அலுவலகத்திலிருந்து கிளம்பும் முன்..!

அலுவலக

அலுவலகத்தைவிட்டுக் கிளம்பும் முன் சில விஷயங்களைச் செய்வது அவசியம். அதாவது, நீங்கள் செய்யும் வேலை குறித்த தகவல் அனைத்தையும் உங்களின் தலைமைக்குத் தெரிவித்துவிடுவது நல்லது. அதேபோல, எந்த வேலை செய்தாலும் அதுகுறித்து சிறு குறிப்பு எழுதிவைப்பது நல்லது. அந்த வேலைக்குத் தொடர்புடைய தொலைபேசி எண், முகவரி, மெயில் ஐடி, வேலை குறித்த விவரங்கள் என அனைத்தும் அந்த வேலை முடியும் வரை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். முடிந்தவரை இவற்றை ஒரு டைரியில் எழுதி வைத்துக்கொள்வது நல்லது அல்லது வேலை தொடர்பான விவரங்களை உங்கள் இ-மெயிலில் வைத்திருந்தால் செல்போன் மூலம் எப்போது வேண்டுமானாலும் அவற்றை எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இ-மெயிலில் சேமியுங்கள்!

நீங்கள் முடித்து தரும் வேலையை உங்கள் உயர் அதிகாரிகளிடம் தருவதற்கு முன்பு, ஒரு பிரதியை உங்கள் மெயிலில் வைத்துக்கொள்வது நல்லது. உங்கள் உயர் அதிகாரி திடீரென நீங்கள் செய்து தந்த வேலையில் சந்தேகம் கேட்டால், அப்போது சட்டென பதிலளிக்க இது வசதியாக இருக்கும். இதனால் எந்த வேலையையும் தடைப்படாமல் வீட்டில் இருந்தபடியே முறையாகச் செய்து முடிக்க முடியும். டெஸ்க்டாப்பில் வைத்திருந்த ஃபைல்கள் காணாமல்போனால்கூட, அந்தச் சமயத்தில் மெயிலில் சேமித்து வைத்திருக்கும் ஃபைல்கள் காப்பாற்றும்.

வெளியூர் செல்லும் சமயங்களில்..!

வெளியூர் செல்லும் சமயங்களில் நீங்கள் செய்த வேலை சம்பந்தமான தகவல்களை உயர் அதிகாரியிடம் ரிப்போர்ட் செய்துவிட்டு செல்வது நல்லது அல்லது உடன் பணிபுரிபவர்களிடம் அது பற்றிய விவரங்களைத் தெளிவாகச் சொல்லிவிட்டு, மேற்கொண்டு யாரைத் தொடர்புகொள்ள வேண்டும் என்பதையும் சொல்லிவிடுவது நல்லது. தொடர் விடுமுறை எடுக்கும் சமயங்களிலும் இது மாதிரி திட்டமிட்டுச் செயல்பட்டால் மட்டுமே வேலைகள் தடைப்படாமல் இருக்கும். 

சக ஊழியர்களுடன் நட்புறவு..!

அலுவலக

உங்களோடு உங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியர்களின் நட்பு மிகவும் முக்கியம். அதாவது, எல்லா ஊழியர்களுடனும் எப்போதும் சகஜமாகப் பழகுவது அவசியம். அதோடு நீங்கள் உதவி கேட்டால் செய்யக்கூடிய அளவுக்கு நட்பை வளர்த்துக்கொள்வது முக்கியம். இதற்கு அவர்கள் கேட்கும் உதவியை நீங்களும் முடிந்தவரை செய்துதர வேண்டும். மேலும், அலுவலகத்தில் உங்களுக்கு மேலே, கீழே பணிபுரிபவர்கள் அனைவரின் செல்போன் எண்ணையும் கையில் வைத்திருக்க வேண்டும். அலுவலகத்தில் யாருக்கு என்ன வேலை தெரியும் என்பதையும் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

குடும்பத்தைச் சமாளிப்பது அவசியம்!

வீட்டில் இருந்தபடி அலுவலக வேலையைச் செய்யும்போது குடும்ப உறுப்பினர்கள் எரிச்சலடைவது இயல்பே. எனவே, அவர்களுக்கு அந்த வேலையின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்வது அவசியம். அதே நேரத்தில் அவர்களுடன் நீங்கள் நேரம் செலவழிப்பதும் முக்கியம். அலுவலகத்துக்காகக் குடும்பத்தையோ, குடும்பத்துக்காக அலுவலகத்தையோ தவிர்க்கக் கூடாது. அலுவலகத்தில் எவ்வளவு வேலை இருந்தாலும் தொலைபேசியிலாவது குடும்ப உறுப்பினர்களுடன் பேச வேண்டும். அப்போதுதான் நீங்கள் வீட்டில் இருக்கும்போது அலுவலக வேலையைச் செய்தாலும் அதை அவர்கள் ஒரு குறையாகச் சொல்ல மாட்டார்கள். 

ஆக, அலுவலக வேலைகளில் ஃபாலோ-அப் ரொம்பவே முக்கியம் பாஸ்!


டிரெண்டிங் @ விகடன்