``ஆதரவற்றோர் இல்லத்துல நாப்கின் கிடைக்காம அவதிப்பட்டிருக்கேன்..!'' - சமூக சேவகி ஜமிமா | A woman who was raised in an orphanage shares her story on how she gives back to the society

வெளியிடப்பட்ட நேரம்: 18:54 (31/05/2019)

கடைசி தொடர்பு:18:54 (31/05/2019)

``ஆதரவற்றோர் இல்லத்துல நாப்கின் கிடைக்காம அவதிப்பட்டிருக்கேன்..!'' - சமூக சேவகி ஜமிமா

"இல்லத்தில் சேர்ந்த புதிதில் நிறைய அழுதிருக்கேன். நாமளும் செத்துப்போயிடலாம்னுகூட நினைச்சிருக்கேன். ஆனா என்கூட ஹாஸ்டலில் தங்கியிருந்த ஒவ்வொருத்தரோட கதையையும் கேட்டதுக்கு அப்புறம், நாம வாழணும், சாதிக்கணும்ங்கிற ஆசை வந்துச்சு!"

``இந்த வாழ்க்கையில் எதுவும் நமக்குச் சொந்தம் இல்லைனு நினைச்சு வாழ ஆரம்பிச்சா போதும், மத்தவங்களுக்கு உதவுகிற குணம் தானா வரும்" என்று வார்த்தைகளில் நிதர்சனத்தை விதைக்கிறார் பிரியா ஜமிமா. தன் 3 வயதில் பெற்றோரை இழந்தவர். 25 வருட வாழ்க்கையை ஆதரவற்றவர்களுக்கான இல்லத்தில் வாழ்ந்த ஜமிமா, இன்று பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவி செய்யக்கூடிய சமூக சேவகியாக உருவெடுத்துள்ளார். ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி உதவி, அரசுப் பள்ளிகளில் இலவசமாக நாப்கின் வழங்குதல், மரம் நடுதல் எனத் தன்னால் இயன்ற சேவைகளைச் செய்து வரும் ஜமிமா அது குறித்து நம்மிடம் பகிர்கிறார்.

``ஒரு கஷ்டத்திலிருந்து மீண்டு வந்தவங்களுக்குத்தான் அதன் வலி என்னனு தெரியும். என்னோட 30 வருட வாழ்க்கையில் எத்தனையோ நாள் இரவு எனக்கு யாருமே இல்ல, எதுவுமே இல்லனு அழுதுருக்கேன். அந்த அழுகையின் வலிதான் இன்னைக்கு மத்தவங்களுக்கு உதவுற குணத்தை எனக்குள்ள விதைச்சிருக்கு. எனக்கு மூணு வயசானப்போ எங்கப்பா, அம்மா ரெண்டு பேரும் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. என்ன காரணம்னுகூட அந்த வயசில் என்கிட்ட யாரும் சொல்லல. அவங்க இனி திரும்பி வரவே மாட்டாங்க என்பதைக்கூட புரிஞ்சுக்க முடியாத வயசு. ஒன்றரை வயசில் எனக்கு ஒரு தம்பியும் இருந்தான். அம்மா - அப்பா இறந்த வீட்டில், நாங்க ரெண்டு பேரும் சொந்தக்காரங்க எல்லாரும் வந்துருக்காங்கன்னு ஜாலியாயிருந்தோம். சில நாள்ல ஒவ்வொருத்தரா போயி நானும் என் தம்பியும் தனியா நின்னப்போதான் கஷ்டம் தெரிய ஆரம்பிச்சது. அப்போ பாட்டி மட்டும்தான் எங்களுக்குத் துணையாயிருந்தாங்க. அம்மாவை காணோம்னு அழுதுட்டிருந்த என்னைக் கூப்பிட்டு, `உன் தலையெழுத்து மாறணும்னா நீ நல்லா படிச்சு நல்ல நிலைமைக்கு வரணும்'னு சொல்லி அழுதாங்க. ஆனா, எங்களைப் படிக்கவைக்க அவங்ககிட்ட காசு இல்லாததால எங்க ரெண்டு பேரையும் ஆதரவற்றவர்களுக்கான இல்லத்துல சேர்த்துட்டாங்க.

ஜமிமா

இல்லத்தில் சேர்ந்த புதிதில் நிறைய அழுதிருக்கேன். நாமளும் செத்துப்போயிடலாம்னுகூட நினைச்சிருக்கேன். ஆனா என்கூட ஹாஸ்டலில் தங்கியிருந்த ஒவ்வொருத்தரோட கதையையும் கேட்டதுக்கு அப்புறம், நாம வாழணும், சாதிக்கணும்ங்கிற ஆசை வந்துச்சு" - சில நிமிடங்கள் அமைதியாகித் தொடர்கிறார் ஜமிமா.

``படிப்பு மட்டும்தான் நமக்கு வாழ்க்கைக்கான பிடிமானமா இருக்கப்போகுதுனு உணர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். நானும் என் தம்பியும் வேற வேற ஹாஸ்டல் என்பதால ஸ்கூல் லீவ் விடுறப்போதான் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துப்போம். ப்ளஸ் டூ வரை எப்படியோ படிச்சு முடிச்சுட்டேன். காலேஜ்ல சேர ஃபீஸ் கட்ட நிறைய பணம் வேணும் என்பதால் கம்ப்யூட்டர் டிப்ளோமா கோர்ஸ்களில் சேர்ந்தேன். முடிச்சிட்டு தனியார் கம்பெனிகளில் இரவு நேரப் பணியில் சேர்ந்தேன்.

என் சம்பளத்தைச் சேமிச்சு சென்னை, வைஷ்ணவா கல்லூரியில் பி.சி.ஏக்கு அப்ளை பண்ணினேன். அட்மிஷனுக்காக எல்லா பசங்களும் அவங்க அம்மா, அப்பாவோட நின்னப்போ நான் மட்டும் தனியாளா நின்னதெல்லாம் துயரமான தருணங்கள். ஆனா யாரோட உதவியும் இல்லாம நானே எனக்காகப் போராடிய நாள்கள்தான் என்னை அடுத்தடுத்து பயணிக்கவெச்சது. நிறைய போராட்டங்களுக்கு அப்புறம்தான் காலேஜில் சீட் கிடைச்சது. காலேஜ் 8 மணி முதல் 2 மணி வரை. வீட்டுக்கு வந்து ரெண்டு மணிநேரம் படிச்சுட்டு 4 மணிக்கு வேலைக்குப் போவேன். நைட் ஒரு மணிக்கு வேலை முடிச்சுட்டு வந்து திரும்பி காலையில் காலேஜ் போவேன். இப்படி நிக்காம நான் ஓடுன ஓட்டத்தில்தான் நானும் என் தம்பியும் படிப்பை முடிச்சோம். படிப்பு முடிஞ்சதும் கேம்பஸ் இன்டர்வியூ மூலமே வேலை கிடைச்சது. என் சம்பளத்தில் பாதி தொகையை படிக்கக் கஷ்டப்படுறவங்களுக்குக் கொடுத்து உதவ ஆரம்பிச்சேன்.

நேப்கின்

சில வருஷங்களில் எனக்குத் திருமணம் ஆச்சு. அதுக்கு அப்புறம் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினேன். என் கணவர் சம்பளத்தை மட்டும் எங்க குடும்பச் செலவுக்கு வெச்சுக்கிட்டு, என் பிசினஸில் கிடைக்கும் வருமானம் முழுவதையும் சோஷியல் சர்வீஸ் பண்றதுக்காக ஒதுக்கினேன். குறிப்பா, படிக்க பணம் இல்லாம கஷ்டப்படுற பசங்களுக்காக நானே கல்லூரியில் போய் பேசி ஃபீஸை குறைச்சுக்கச் சொல்லி வேண்டி கேட்பேன். மீதித் தொகையை நான் கட்டிருவேன். இதுவரை 52 மாணவர்களுக்குப் படிக்க உதவி பண்ணியிருக்கேன்" என்றவரிடம் அவர் அரசுப் பள்ளிகளில் இலவசமாக நாப்கின்கள் வழங்கிவருவதை பற்றிக் கேட்டோம்.

``நான் இல்லத்தில் வளர்ந்தப்போ நாப்கின் கிடைக்காமல் எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கேன். அதனாலதான் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நாப்கின்கள் கொடுத்து உதவ ஆரம்பிச்சேன். நாப்கின் வழங்குவதற்கு முன் ஒரு மகப்பேறு மருத்துவரை அந்தப் பள்ளிக்கு அழைத்துச்சென்று, நாப்கினை எப்படிப் பயன்படுத்தணும், மாதவிடாய் நேர சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றைப் பேசுவோம். இதுவரை 10 லட்சம் பேட்கள் கொடுத்திருக்கேன். சில நண்பர்களின் உதவியோடு, பயன்படுத்திய நாப்கின்களை எரிக்கும் இயந்திரங்களையும் கொடுக்க ஆரம்பிச்சிருக்கேன். கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் பெண்களுக்கு நாப்கின்கள் கொடுத்தேன்; மரங்கள் நட உதவினேன். இப்படி என் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சேவையைச் செய்துட்டே வர்றேன்.

உதவி வாங்குறவங்க உதவி பண்ணும் இடத்துக்கு வரும்போது, தன்னைப்போல இருக்கிறவங்களை கைதூக்கிவிடுகிறதை கடமையா எடுத்துக்கணும்!''


டிரெண்டிங் @ விகடன்