நேசமணி டிரெண்ட் பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்கு!’ - விளக்கும் காயத்ரி ரகுராம்  | Gayathri raghuram slams who shares nesamani troll

வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (31/05/2019)

கடைசி தொடர்பு:18:05 (31/05/2019)

நேசமணி டிரெண்ட் பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்கு!’ - விளக்கும் காயத்ரி ரகுராம் 

நேசமணிக்காக தமிழகம் உருகிக்கொண்டிருந்த அதே சமயம் டெல்லியில் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. தேர்தல் பரபரப்புகள் ஓய்ந்த நிலையில் அனைவருக்குமே ஒரு ரிலாக்சேஷனாக நேசமணி டிரெண்டிங் மீம்ஸ்கள் இருந்தன. ஆனால், ஒரு சிலர் குறிப்பாக பா.ஜ.க-வினர், `நேசமணி’ டிரெண்டிங் எல்லாம் தேவையில்லாத ஆணி என்று கடுமையாகச் சாடி வருகின்றனர். நேசமணி ஹேட்டர்ஸ்களில் நடன இயக்குநர் காயத்ரி ரகுராமும் ஒருவர்.

மோடி அமைச்சரவை
 

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி அடைந்ததை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்துடன் பதிவுகளைப் பகிர்ந்து வந்தார் காயத்ரி ரகுராம். ஆனால், கடந்த இரண்டு நாள்களாக மீண்டும் ஆங்கிரி மோடுக்கு மாறியிருக்கிறார். நேசமணி டிரெண்டிங் தேவையற்றது என காயத்ரி ரகுராம் பதிவிட, நேசமணி ஆர்மி காயத்ரியை ட்ரோல் செய்யத் தொடங்கிவிட்டனர்.
நேசமணி டிரெண்ட் ஆனதில் காயத்ரி அப்ஸெட்டானது ஏன் என அவரிடமே கேட்டோம்.

காயத்ரி ரகுராம்
 

``இன்று மிகவும் சிறப்பான நாள். காரணம் தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் தேசிய அரசியல் களத்தில் மீண்டுமொருமுறை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். மத்திய நிதி அமைச்சர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் முக்கியப் பொறுப்பு நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம். அவர்கள் அனைவருக்கும் நான் வாழ்த்துக் கூற விரும்புகிறேன். மோடி அரசு தனது ஆட்சிக் காலத்தில் நாட்டை முன்னோக்கி நகர்த்தியுள்ளது. இதனால்தான் வட மாநிலங்கள் அவருக்கு வாக்களித்து மீண்டும் பிரதமராக்கின. ஆனால் தமிழக இணையவாசிகள் இதையெல்லாம் விட்டுவிட்டு தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

நேசமணி
 

மக்கள் அனைவருமே அரசியல் பழக வேண்டும். என்ன நடக்கிறது நம்மைச் சுற்றி என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அனைவரையும் கண்மூடி நம்பக் கூடாது. முன்பெல்லாம் எனக்கு அரசியலில் ஆர்வமே கிடையாது. செய்தி சேனல் கூடப் பார்க்கமாட்டேன். ஆனால் இப்போது நான் அரசியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். அது நம் ஒவ்வொருவரின் கடமை. உலக நாடுகள் மோடியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கின்றன. சர்வதேசக் களத்தில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்துள்ளது. தமிழக மக்களும் இந்த உண்மைகளைப் புரிந்து கொள்ளும் நாள் வரும். நமக்கு லஞ்சமும் ஊழலும் செய்யும் ஆட்சி பழக்கப்பட்டுவிட்டது. அதை ஒழிக்கும் கட்சிக்கு அனைவருமே ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தமிழகமும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.


நேசமணி

உலகமே கொண்டாடும் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு எதிராகத் தொடங்கப்பட்டதுதான் இந்த நேசமணி டிரெண்ட். ’GoBackModi’ போன்று இதுவும் அரசியல் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதுதான். நேசமணி என்னும் திரைப்பட கதாபாத்திரத்தை தேவையில்லாமல் இப்போது ஏன் டிரெண்டாக்க வேண்டும். அதுவும் மோடியின் பதவியேற்பு விழா நடந்த அதே நாளில். வெளியிலிருந்து பார்ப்பவர்கள் தமிழகத்தைப் பார்த்து சிரிப்பார்கள். நம் அனைவரும் சேர்ந்து காமெடிசெய்து வைத்திருக்கிறோம். இதில் எந்த அர்த்தமும் இல்லை. நமக்கு ஆயிரம் பிரச்னைகள் இருக்கிறது. நான் வடிவேலுவின் மிகப்பெரிய ஃபேன். ஆனாலும் இந்த டிரெண்ட் பிடிக்கவில்லை. இதை டிரெண்ட் செய்து எந்த பிரயோஜனமும் கிடையாது. எஸ்.ஆர்.எம்மில் பெண்கள் தற்கொலை செய்து கொண்டதை பற்றியெல்லாம் பேசாமல் இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். உலக அளவில் இந்தத் தேவையில்லாத விஷயம் டிரெண்ட் ஆகி இருக்கிறது என்றால் மற்ற நாடுகள் நம்மை ஏளனமாக நினைக்கமாட்டார்களா. இப்படியெல்லாம் செய்தால் நம்மை எப்படி மற்ற மாநிலங்கள் மதிக்கும்’’ என்ற கேள்வியுடன் முடித்துக் கொண்டார் காயத்ரி ரகுராம். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க