'இந்தளவுக்குக் கொடூர மரணம் எதற்கும் வரக்கூடாது!' - சீலுக்கு நேர்ந்த சோகம் | 'No animal should suffer this much' Seal's struggle for life

வெளியிடப்பட்ட நேரம்: 19:03 (01/06/2019)

கடைசி தொடர்பு:19:03 (01/06/2019)

'இந்தளவுக்குக் கொடூர மரணம் எதற்கும் வரக்கூடாது!' - சீலுக்கு நேர்ந்த சோகம்

கடந்த 25 வருடங்களில் மனிதர்களாகிய நம்மால் ஏற்பட்டிருக்கும் மாசு என்பது இமயமலை தொடங்கி அன்டார்டிகா வரை பரவியிருக்கிறது. அதுவும் பிளாஸ்டிக் பயன்பாடு மிகவும் மோசமான விளைவுகளைத் தந்திருக்கிறது. எதையும்விட கடல்கள்தான் இதனால் பெரிதளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கடல்வாழ் விலங்குகளின் வயிற்றிலிருந்து கிலோ கணக்கில் பிளாஸ்டிக் எடுப்பது வழக்கமான செய்தி ஆகிவிட்டது. இப்போது இங்கிலாந்தின் கார்ன்வெல்லில் சீல் ஒன்று மிகவும் கோரமான மரணத்தை அடைந்துள்ளது.

உயிரிழந்த சீல்

இந்த ஆண் சாம்பல் நிற சீல் சில நாள்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் வலையால் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் கரை ஒதுங்கியது. பிரேத பரிசோதனையில் தலை, கழுத்து, சுவாசக் குழாய் போன்ற பாகங்களில் கடுமையான காயங்கள் இருப்பது தெரியவந்தது. இந்த ஆய்வை நடத்திய மருத்துவர், 'மிகவும் கொடிய சித்ரவதையை அனுபவித்திருக்கிறது வாயில்லா மிருகம்' என்று தெரிவித்தார். 

சீல் மரணம்

இந்த சீலை இரண்டு வாரங்களுக்கு முன்பே சிலர் பெரிதும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பார்த்திருக்கின்றனர். அப்போதே British Divers Marine Life Rescue (BDMLR) குழுவுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 16 நாள்களுக்குப் பின்பு இறந்தநிலையில் கரை ஒதுங்கியிருக்கிறது அது. இதைச் சுற்றிய வலை மட்டும் 35 கிலோ எடை இருந்திருக்கிறது. யோசித்துப் பாருங்கள், இந்த எடையுடன்கூடிய வலையால் கழுத்து வெளியே வரவும் முடியாமல், நீந்தவும் முடியாமல், சிக்கிய காயங்களுடன் பல நாள்கள் போராடியிருக்கிறது அந்த சீல். இதை மீட்ட குழுவினர் இதன் நிலையை எண்ணி கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். இதன் காயங்களைப் பரிசோதித்த பின் கடந்த 20 ஆண்டுகளில் உலகில் இதுபோன்று நடந்த மரணங்கள் எதுவும் இந்த அளவுக்கு கொடூரமாக இருந்ததில்லை என்கின்றனர். கொடூரமோ இல்லையோ நாம் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களால் எங்கோ இருக்கும் ஒரு மிருகம் கடுமையான போராட்டத்துக்கு உள்ளாகிறது என்பது மட்டும் உண்மை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க