பள்ளிக்கூடம் திறக்கப் போகிறது... இவையெல்லாம் ரெடி செய்து விட்டீர்களா? | School reopening - Tension-free tips for parents

வெளியிடப்பட்ட நேரம்: 07:34 (02/06/2019)

கடைசி தொடர்பு:14:18 (02/06/2019)

பள்ளிக்கூடம் திறக்கப் போகிறது... இவையெல்லாம் ரெடி செய்து விட்டீர்களா?

தோ பள்ளிக்கூடங்கள் நாளை திறக்கப் போகின்றன. விடுமுறை விட்ட உற்சாகத்தில்  'மறந்திடு சீசே' என்று மூலைக்கொன்றாக போட்டு வைத்த ஸ்கூல் பேக், லன்ச் பேக், ஷூ, சாக்ஸ் எல்லாவற்றையும் 'அய்யய்யோ கிடைச்சிடு சீசே' என்று அம்மாவும் பிள்ளைகளும் பதற்றத்துடன் தேட ஆரம்பிக்கிற நேரம். இந்த நேரத்தில் பதற்றத்தைத் தணிக்க பெற்றோர்களுக்கு எந்தெந்தப் பொருள்களையெல்லாம் உடனடியாக எடுத்து வைக்க வேண்டும் என்று டிப்ஸ் தரப் போகிறார் ஆசிரியர் உதயலட்சுமி. 

பள்ளி

ஷூ எங்கே, சாக்ஸ் எங்கே... 

இன்றைக்கு, இந்த நிமிடமே வீட்டில் அங்கங்கே போட்டு வைத்திருக்கிற ஸ்கூல் பேக், லஞ்ச் பேக், ஷூ, சாக்ஸ் எல்லாவற்றையும் தேடி எடுங்கள். எல்லாம் நன்றாக இருக்கிறபட்சத்தில் துவைத்து ரெடியாக வைத்துக் கொள்ளுங்கள். பேக் சாயம் போயிருக்கிறது, சாக்ஸ் கிழிந்திருக்கிறது, ஷூவின் வெல்க்ரோ ஒட்டவில்லை என்றால், உடனே புதிது வாங்கக் கிளம்புங்கள். 

ஸ்கூல்

புத்தகங்கள் ரெடியா? 

பள்ளிக்கூடத்திலேயே நோட்டுப் புத்தகங்கள் வாங்கியவர்கள் எல்லாவற்றுக்கும் அட்டைப் போட்டு லேபிள் ஒட்டி விட்டீர்களா என்று செக் செய்யுங்கள். நோட்டுப் புத்தகங்கள் கடையில்தான் வாங்க வேண்டும் என்பவர்கள் உடனே வாங்கி விடுங்கள். ஏனென்றால், பள்ளிக்கூடங்கள் திறந்த ஒரு வாரத்தில் பாடம் நடத்த ஆரம்பித்து விடுவார்கள். சிலர், ஒன்றிரண்டு புத்தகங்கள் மட்டும் கடைகளுக்கு வராத காரணத்தால் இன்னும் அவற்றை வாங்காமல் இருப்பீர்கள். விடுமுறை சந்தோஷத்தில் அதை மறந்தும் இருப்பீர்கள். அப்படிப்பட்ட பெற்றோர்கள் உடனடியாக, சம்பந்தப்பட்ட புத்தகக்கடைக்கு போன் செய்து விடுபட்ட புத்தகங்கள் வந்துவிட்டனவா என்று கேட்டு, புக்கிங் செய்துகொள்ளுங்கள். 

ஆசிரியர் உதயலட்சுமியூனிஃபார்ம் வாங்கி விட்டீர்களா? 

சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கிற பிள்ளைகளுக்கு ஏப்ரலிலேயே புது யூனிஃபார்ம் தைத்து வைத்திருக்கிற பெற்றோர்களுக்குப் பிரச்னையில்லை. அப்படியில்லாமல் இந்த விடுமுறையில்தான் துணி எடுத்து தைக்கக் கொடுத்திருக்கிறீர்கள் என்றால், ஸ்கூல் திறப்பதற்கு முந்தைய நாள் இரவுப் போய் வாங்காதீர்கள். சில பள்ளிக்கூடங்களில் ஸ்கர்ட் துணியில் சிறு துண்டை, சட்டை காலரில் மற்றும் பாக்கெட் மேல் பட்டியில் வைத்து தைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பார்கள். அதை டெய்லரிடம் நீங்கள் சொல்ல மறந்திருந்தாலோ அல்லது அவர் அப்படித் தைக்க மறந்திருந்தாலோ, முந்தைய நாள் இரவு போய் யூனிஃபார்மை வாங்கினீர்கள் என்றாலோ சரி செய்ய நேரம் இருக்காது. உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் தேவையில்லாத பதற்றம்தான் ஏற்படும். சென்ற வருடம் தைத்த யூனிஃபார்மே நன்றாகத்தான் இருக்கிறது என்றால், மறுபடியும் துவைத்து, அயர்ன் செய்து ரெடியாக வைத்துக் கொள்ளுங்கள். 

விடுமுறை வீட்டுப்பாடம் என்ன ஆனது?

சில பள்ளிக்கூடங்களில் கோடை விடுமுறையில் செய்வதற்கென வீட்டுப்பாடம், புராஜெக்ட் என்று கொடுத்து அனுப்புகிறார்கள். அதை விடுமுறை விட்ட சந்தோஷத்தில் பிள்ளைகள் மட்டுமல்ல, பெற்றோர்களாகிய நாமும் மறந்திருப்போம். இப்படி ஏதாவது உங்கள் பிள்ளைக்கும் கொடுத்திருக்கிறார்களா என உடனே செக் பண்ணுங்கள். இருந்தால் கையோடு முடித்து விடுங்கள். இல்லையென்றால், பள்ளிக்கூடம் திறந்த முதல் நாளே, பிள்ளை அழுதுகொண்டே செல்கிறபடி ஆகிவிடும். 

பள்ளிக்கூடத்தில் சொன்னதையெல்லாம் பூர்த்தி செய்து விட்டீர்களா? 

சில பள்ளிக்கூடங்களில் பெற்றோர் மற்றும் மாணவர்களின் புரொஃபைலை வருடந்தோறும் அப்டேட் செய்யச் சொல்வார்கள். அந்த வேலை இருந்தால், அதையும் முடித்து விடுங்கள். 

மாணவர்கள்

இத்யாதி... இத்யாதி...

டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டில், ஸ்நாக்ஸ் பாக்ஸ், பென்சில் பாக்ஸ், பென்சில், ரப்பர், ஸ்கேல், சின்ன பிள்ளைகள் என்றால் கலர் பென்சில், க்ரேயான்ஸ் என்று எல்லாவற்றையும் வாங்கி ரெடியாக இருங்கள். முடிந்தால், எல்லாவற்றையும் உங்கள் பிள்ளைகளுக்குப் பிடித்ததுபோலவே வாங்குங்கள். 


டிரெண்டிங் @ விகடன்

அதிகம் படித்தவை