'இந்நகரின் தாகம் இவர்களால்தான் தணிகிறது!' சாந்தி அக்காவும் விஜயகுமார் அண்ணனும் #WhereisMyWater | Meet these two people who support public to escape from water scarcity

வெளியிடப்பட்ட நேரம்: 15:48 (03/06/2019)

கடைசி தொடர்பு:16:52 (03/06/2019)

'இந்நகரின் தாகம் இவர்களால்தான் தணிகிறது!' சாந்தி அக்காவும் விஜயகுமார் அண்ணனும் #WhereisMyWater

"ஜனங்களுக்கான தண்ணியை காசுக்கு ஆசைப்பட்டுக்கிட்டு கடைகளுக்கு விக்கக்கூடாது. அப்புறம், தெரு ஜனங்க வாய் நிறைய அக்கான்னு கூப்பிடுற மருவாதி கெட்டுப் போயிடும் கண்ணு!"

'இந்நகரின் தாகம் இவர்களால்தான் தணிகிறது!' சாந்தி அக்காவும் விஜயகுமார் அண்ணனும் #WhereisMyWater

சென்னைக்கு வீராணத்திலிருந்து தண்ணீர் வருகிறது, கிருஷ்ணாவிலிருந்து தண்ணீர் வருகிறது என்றெல்லாம் செய்திகளைப் படித்திருப்போம். அவையனைத்தும் இந்த நகரத்தின் எல்லைகளைத் தொடுவதோடு நின்றுவிடும். அவற்றை நம் வீடுகளின் குழாய்களுக்கும் குடங்களுக்கும் கொண்டுவந்து சேர்ப்பது இவர்களைப் போன்ற மனிதர்கள்தான். இந்நகரின் தாகம் தீர்ப்பதில் இவர்களின் பணி பலரும் அறியாதது. அதில் இரண்டு கதைகள் இங்கே.


இதுநாள் வரைக்கும் முகம் மட்டுமே அறிந்த சில நபர்கள், திடீரென உறவுமுறை வைத்து அழைக்கிற அளவுக்கு நிறைய பேருக்கு நெருக்கமாகிவிடுவார்கள். அப்படிப்பட்டவர்களில் இருவர்தான் சாந்தி அக்காவும் விஜயகுமார் அண்ணனும். முன்னவர் ஐ.சி.எஃப் ஏரியாவுக்கு மிக அருகே இருக்கிற தெருவொன்றில் டேங்க்கில் விடப்படுகிற தண்ணீரை கிட்டத்தட்ட 70 குடும்பத்துக்கு பங்கிட்டுக் கொடுக்கிறவர். பின்னவர் தண்ணீர் லாரி டிரைவர்.  இவர்களைப் போன்றவர்கள் எத்தனையோ பேர் இருக்கையில், இந்த இருவர் மட்டும் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? 

சாந்தி அக்கா தன் வீட்டுக்கு கள்ள கனெக்‌ஷன் போட்டு தண்ணீர் நிரப்பிக்கொள்ளாதவர். விஜயகுமார் அண்ணன், வில்லிவாக்கத்தின் குறுகலான தேவர் தெருவில், கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு லாரியை பின்னோக்கியே ஓட்டிச் சென்று அந்தத் தெருவில் இருக்கிற டேங்க்குகளுக்கு தண்ணீர் விடுகிறார். 3 வருடங்களுக்கும் மேலாகத் தினமும் காலை 6 மணிக்குள் தெருவுக்குள் பின்னோக்கி தன் லாரியுடன் நுழைந்துவிடுகிறார். 

"இந்தத் தெருவுல ரெண்டு பக்கமும் சிங்காரம்பிள்ளை ஸ்கூல் இருக்கும்மா. அதனால, புள்ளைங்க எல்லாம் வர்றதுக்கு முன்னாடியே விடியற்காலையிலேயே வந்துருவேன். இதுக்காக டெய்லி 4 மணிக்கு எழுந்திடுவேன். 5 மணிக்கெல்லாம் கீழ்ப்பாக்கம் வாட்டர் டேங்க் வந்து முத ஆளா தண்ணி ஃபில் பண்ணிக்கிட்டு வந்திருவேன்" என்கிற விஜயகுமார் கடந்த 30 வருடங்களாகத் தண்ணீர் லாரி ஓட்டி வருகிறார். 

விஜயகுமார் - லாரி டிரைவர்

"இது மார்க்கெட் ஏரியாம்மா. தெருவும் ரொம்ப குறுகலா இருக்கு. முன் பக்கமா வந்தா எந்தத் தெரு வழியாவும் வெளியே போக முடியாது. எவ்வளவு காலையில வந்தாலும் ஜனநடமாட்டம் அதிகமா இருக்கும். தெருவோட ரெண்டுப் பக்கமும் டூ வீலரா நிக்கும். அதையாவது எப்படியாவது சமாளிச்சு ரிவர்ஸ்லேயே தெருக்குள்ள பூந்துடுவேன். ஆனா, இப்பல்லாம் வரிசையா கார்களையும் நிறுத்தி வைச்சிடுறாங்க. இடிச்சிடுவோமோ இடிச்சிடுவோமோன்னு ரொம்பப் பதற்றமா இருக்கும். நான் மட்டுமல்லம்மா, தண்ணி லாரி ஓட்டுற நிறைய டிரைவர்களோட நிலைமை இதுதான். எப்படிப்பட்ட சந்து, பொந்தா இருந்தாலும் லாரியை எப்படியாவது உள்ள கொண்டு போயி தண்ணி ஊத்திடுவோம். நாங்களும் பப்ளிக் சர்வன்ட்தாம்மா" என்கிறார் அழுத்தமாக. 

ரவு 11 மணி. அந்த மாட வீதியில் இருக்கிற ஒவ்வொரு வீட்டு வாசல் முன்னாடியும் போய் நின்று 'எம்மாவ் தண்ணி வந்திடுச்சு. வாங்க வாங்க' என்று உரத்தக் குரல் எழுப்பிவிட்டு, தண்ணீர் டேங்க்கை நோக்கி ஓடுகிறார் சாந்தி அக்கா. தூக்கம் கலைந்துபோன மக்கள் குடங்களுடன் அவர் பின்னாடியே ஓடுகிறார்கள். 

"இந்த டேங்க்கை பராமரிச்சுட்டிருந்தவரு வீடு மாறிப் போறப்போ, பொறுப்பை என் கையில கொடுத்திட்டுப் போனாரு கண்ணு. ஒரு கெளரவமா நினைச்சுக்கிட்டுத்தான் 7 வருஷமா இந்த வேலையைச் செஞ்சுக்கிட்டு வர்றேன். 

'தண்ணி' விடும் சாந்தி அக்கா

இந்த வருஷம் மாதிரி தண்ணிக் கஷ்டம் வர்ற நேரத்துல எங்கப் பாடு போராட்டம்தான். மெட்ரோ வாட்டருக்குப் போன் பண்ணணும்; தெருக்காரங்களுக்கு எப்போ தண்ணி வரும்னு சொல்லணும்; வந்தத் தண்ணியை வீட்டுக்கு இத்தன குடம்னு சரிசமமா பங்குப் போட்டுக் கொடுக்கணும்; யாராவது எக்ஸ்ட்ரா ஒரு குடம் கேட்டுட்டாங்கன்னா பொம்பளைங்களுக்குள்ள தகராறு வந்திரும்; அவங்க வீட்ல கைக்குழந்தை இருக்கு. தண்ணி நிறையத்தான் செலவாகும்னு சொல்லி சண்டைக்கு வந்தவங்களை சமாதானப்படுத்தணும்" என்று சிரிக்கிற சாந்தி அக்காவுக்கும் தொழில் சவால்கள் இருக்கத்தான் செய்கின்றன. 

"நைட்டு தண்ணி ரொப்பிட்டு போனாங்கன்னா உடனே தூங்கிட்டு இருக்கிற ஜனங்களைக்கூட எழுப்பி, தண்ணி வுட்டுருவேன். இல்லன்னா, இந்த மாதிரி தண்ணிப் பஞ்சக் காலத்துல யாராவது திருடிட்டுப் போயிடுவாங்க. அடிக்கடி டேங்க்கை ஆளை வைச்சு சுத்தம் பண்ணணும். சின்ன லீக்கேஜ் இருந்தாலும் தண்ணி சத்தமில்லாம வழிஞ்சுப் போயிடும். தண்ணி டேங்குக்குக் கீழே இருக்கிற சிமென்ட் ஏரியா உடைஞ்சுப் போச்சுன்னா உள்ளூரு எம்.எல்.ஏ கிட்ட சொல்லி, அதைச் சரிசெய்யணும். முக்கியமா, ஜனங்களுக்கான தண்ணியை காசுக்கு ஆசைப்பட்டுக்கிட்டு கடைகளுக்கு விக்கக்கூடாது. அப்புறம், தெரு ஜனங்க வாய் நிறைய அக்கான்னு கூப்பிடுற மருவாதி கெட்டுப் போயிடும் கண்ணு" - வெற்றிலைப்போட்ட வாயுடன் வெள்ளந்தியாகச் சிரிக்கிறார் சாந்தி அக்கா. 


டிரெண்டிங் @ விகடன்