``பணப்பரிமாற்றத்தை உறுதிசெய்யும் ஸ்பீக்கர்!” - பேடிஎம்-மின் புதிய முயற்சி | This new device from paytm will announce you the transactions

வெளியிடப்பட்ட நேரம்: 09:55 (04/06/2019)

கடைசி தொடர்பு:09:55 (04/06/2019)

``பணப்பரிமாற்றத்தை உறுதிசெய்யும் ஸ்பீக்கர்!” - பேடிஎம்-மின் புதிய முயற்சி

இந்தியாவில், இணையவழி பணப் பரிமாற்றங்களுக்குப் பயன்படும் ஆப்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவது, பேடிஎம். 2016-ம் ஆண்டின் பண மதிப்பிழப்புக்குப் பிறகு, இதன் சேவை இங்கு அதிகமாக தேவைப்படத் தொடங்கிவிட்டது. அப்போதிருந்து முழுவீச்சில் வளர்ந்துகொண்டிருக்கும் பேடிஎம், அவ்வப்போது பணப் பரிமாற்றங்களை மேன்மேலும் எளிமையாக்க சில வசதிகளைச் செய்துகொண்டே இருக்கிறது.  

பேடிஎம்

இருந்தாலும், நடைமுறையில் ஆப் மூலமாக ஸ்கேன் செய்து பணம் அனுப்பும்போது, அது சென்றடைந்த குறுந்தகவல் விற்பனையாளருக்குச் செல்ல சில நிமிடங்கள் எடுக்கும். அதுவரை வாடிக்கையாளர் மற்றும் விற்பனையாளருக்கு இடையே கழியும் அந்த மௌன நேரம், இருவருக்குமே ஓர் அசௌகர்யத்தை ஏற்படுத்துகிறது. பேடிஎம் இதைச் சரிசெய்யவும் விரைவான பணப் பரிமாற்றத்திற்கு வழிவகுக்கவும், புதிதாக ஒரு கருவியைக் கொண்டுவரப்போகிறது. அது ஒரு ஒலிப்பெட்டி (Soundbox). அதில், சிம் கார்டு போட்டு வைத்துக்கொண்டால் போதும். அதிலேயே ஸ்கேன் செய்து பணப் பரிமாற்றத்தைச் செய்யலாம். பரிமாற்றம் முடிந்தவுடன், பணம் வந்துவிட்டது என்பதை அந்த ஒலிப்பெட்டி அறிவிக்கும்... அவ்வளவுதான். இதில், குறுந்தகவலுக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை. 

இது 4G சேவையுடன் இருப்பதால் வேகமாக இயங்குவதுடன், உடனடியாக அறிவுப்பும் செய்துவிடுகிறது. உங்கள் அக்கவுன்டுக்கு பணம் வந்துவிட்டது என்பதைப் பார்த்துத் தெரிந்துகொள்வதைவிட, ஒரு குரல் அறிவிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். இப்போதைக்கு இதற்கு பணம் அனுப்ப மட்டுமே முடியும். இதில் கேமரா கிடையாது. எதிர்காலத்தில் மேலும் பல வசதிகள் சேர்க்கப்படலாம். ஆனால், தற்போது இந்த வகையான பரிமாற்றத்தைச் செய்ய முயல்வது பேடிஎம் மட்டுமே.  

ஒலிப்பெட்டி

இதைப் பயன்படுத்தப்போகும் விற்பனையாளர்களுக்கு பேடிஎம் பயன்படுத்த ஸ்மார்ட் போன் தேவைப்படாது. அவர்கள், சந்தா கட்டி இந்தக் கருவியை வாங்கிவைத்தாலே போதும். அதிலும் சில்லறை வியாபாரம் செய்பவர்களுக்கு பேடிஎம் மூலமாக வங்கிக் கணக்குக்கு வந்துசேரும் பரிமாற்றங்களைத் தொடர்ச்சியாக கணக்கு வைக்க முடிவதில்லை. அவர்களுக்கு இந்த வசதி மிகவும் உதவிகரமாக இருக்கும். விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இதன் வெளியீட்டுத் தேதி, விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.