கிளைகளுக்கிடையே வாட்டர் கேன்கள்; பறவைகளுக்குத் தண்ணீர்... இளைஞர்களின் வித்தியாச முயற்சி! | Youngsters feed water to birds with the help of old water bottles

வெளியிடப்பட்ட நேரம்: 16:43 (04/06/2019)

கடைசி தொடர்பு:16:43 (04/06/2019)

கிளைகளுக்கிடையே வாட்டர் கேன்கள்; பறவைகளுக்குத் தண்ணீர்... இளைஞர்களின் வித்தியாச முயற்சி!

``முன்பு வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் எங்கள் பகுதிக்கு வலசை வரும். இப்போது தண்ணீர்த் தட்டுப்பாட்டால், வெளிநாட்டுப் பறவைகளின் வருகை குறைந்துவிட்டது. அப்படியே வந்தாலும், வந்த சில நாள்களில் இந்த இடத்தைக் காலிசெய்துவிட்டு தண்ணீர் இருக்கிற ஊரைத்தேடிச் சென்றுவிடுகின்றன."

கிளைகளுக்கிடையே வாட்டர் கேன்கள்; பறவைகளுக்குத் தண்ணீர்... இளைஞர்களின் வித்தியாச முயற்சி!

துரை மாவட்டம் மேலூர் பகுதிகளில், இளைஞர்கள், மாணவர்கள் ஒன்று சேர்ந்து பறவைகள் அமர்ந்து இளைப்பாறும் மரங்களில் வாட்டர்கேனில் தண்ணீர் நிரப்பி வைத்து அவற்றின் தாகத்தினைப் போக்கி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் ரெங்கசாமிபுரம், வடக்குவளையப்பட்டி, சருகுவலையப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள மரங்களில்,ஏராளமான பறவைகள் கூடுகட்டி வாழ்ந்து வருகின்றன. தற்போது நிலவும் கடும் வறட்சியால், இங்குள்ள நீர் நிலைகள் அனைத்திலும் தண்ணீர் இல்லை. பறவைகளும் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் திண்டாடி வருகின்றன. பறவைகள் தண்ணீர் கிடைக்காமல் திண்டாடுவதை அறிந்த மேலூர் பகுதி இளைஞர்கள் சிலர் ஒன்றுசேர்ந்து மரக்கிளைகளில் அமரும் பறவைகளுக்கு தண்ணீர் கொடுத்து நெகிழவைத்துள்ளனர். பறவைகள் கூடுகட்டியுள்ள மரத்தில் இளைஞர்கள் ஏறி, மரக்கிளைக்கு இடையே வாட்டர் கேனைக் கட்டி, அதில் தண்ணீரை நிரப்பி வைக்கின்றனர். கிளையில் அமர்ந்தவாறு அதைப் பறவைகள் பருகுகின்றன. பறவைகள் தண்ணீரை அருந்திவிட்டதா எனப் பார்த்து 2 நாள்களுக்கு ஒருமுறை மீண்டும் தண்ணீர் நிரப்புகின்றனர்.

பறவைகளுக்கு தண்ணீர் வைக்கும் இளைஞர்

ரெங்கசாமி புரத்தைச் சேர்ந்த முருகன் கூறும்போது, ``ரெங்கசாமிபுரம் பகுதியில் மட்டும் 100-க்கும் அதிகமான பறவைகள் கூடுகட்டி வசிக்கின்றன. சிட்டுக்குருவி, புறாக்கள், கொக்குகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டுப் பறவைகளும் இங்கு வருகின்றன. முன்பு வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் எங்கள் பகுதிக்கு வலசை வரும். இப்போது தண்ணீர்த் தட்டுப்பாட்டால், வெளிநாட்டுப் பறவைகளின் வருகை குறைந்துவிட்டது. அப்படியே வந்தாலும், வந்த சில நாள்களில் இந்த இடத்தைக் காலிசெய்துவிட்டு தண்ணீர் இருக்கும் ஊரைத் தேடிச்சென்று விடுகின்றன. சிட்டுக்குருவிகளும் அரிதாகிக்கொண்டே வருகிறது. இருக்கின்ற கொஞ்ச நஞ்ச பறவைகளையாவது காப்பாற்றணும். இதற்காகத்தான் இந்த முயற்சியை நாங்க கையில் எடுத்தோம். எங்க பகுதி மாணவர்கள்கிட்ட இதுபற்றி சொன்னதும், ரொம்ப ஆர்வமாக என்னோட கிளம்பிட்டாங்க. மொதல்ல பறவைகள் கூடுகட்டி இருக்க மரத்தில் ஏறிப்பார்த்து, எங்கு தண்ணீர் பாட்டில் வைக்கலாம் என்று முடிவுசெஞ்சோம். காலி வாட்டர் கேன்களைச் சேகரித்து அவற்றை அறுத்து அதில் தண்ணீரை நிரப்பி பறவைகளின் கூட்டுக்கு அருகே மரக்கிளைகளுக்கு இடையே வாட்டர் கேனை வைத்தோம்.

கிளைகளில் வாட்டர்கேன் வைக்கும் இளைஞர்

வச்ச கொஞ்ச நேரத்திலேயே கூட்டுக்கு வந்த சிட்டுக்குருவி மரக்கிளையில் அமர்ந்து மெல்ல மெல்லத் தலையை அசைத்தபடி, அந்தத் தண்ணீரைக் குடிச்சது. அப்பத்தான் எங்களுக்கு உசிரே வந்துச்சு. ரெண்டு நாளைக்கு ஒரு தடவை மரங்களில் ஏறி தண்ணீர் இருக்கா என்று பார்த்து வருகிறோம். தண்ணீர் தேவைப்பட்டால், நிரப்பி வைக்கிறோம். எங்க பகுதி சிறுவர்கள் மரம் ஏறுவதில் கில்லாடிகள். ஆனாலும், உயரமான மரங்களில் பெரும்பாலும் ஏற விடமாட்டோம். தண்ணீரை நிரப்பித் தருவது, சிறிய மரங்களில் கீழே இருந்து வாட்டர் கேனைப் பொருத்துவது உள்ளிட்ட பணிகளைப் பார்ப்பாங்க. எல்லாரும் சேர்ந்து பறவைகளின் தாகத்தைப் போக்குகிறது ரொம்பவே மனசுக்கு நிம்மதியாக இருக்குது. தற்போது, ஒண்ணு ரெண்டு ஊர்களில் மட்டும்தான் இந்தப் பணியை ஆரம்பித்திருக்கோம். இன்னும் மேலூர் பகுதி முழுவதும் உள்ள கிராமப்பகுதிகளிலும் மரங்களில் வசிக்கிற பறவைகளுக்குத் தண்ணீர் கொடுக்கணும். இனிமேல் எங்க ஊருக்கு வர்ற வெளிநாட்டுப் பறவைங்க தண்ணீர் கிடைக்கலை'ன்னு திரும்பிப் போகக் கூடாது. அந்த நிலையை உருவாக்கணும்" என்கிறார்.

இளைஞர்கள்

பள்ளி மாணவர் பிரதாப் கூறும்போது, ``இந்தப் பறவைங்க பார்ப்பதற்கே ரொம்ப அழகாக இருக்கும். இவற்றைப் பார்ப்பதற்காகவே தினசரி இங்கு வந்துடுவோம். பாட்டிலில் நிரப்பி வைத்த தண்ணீரை பறவைகள் குடிச்சிருக்கா? என்பதைப் பார்த்து அண்ணங்ககிட்ட சொல்லுவோம். அவங்க கல்லூரி முடிச்சிட்டு வந்து, எந்த மரத்தில் தண்ணீர் இல்லையோ, அந்த மரத்தில் ஏறி உடனடியாக தண்ணீர் நிரப்பி வச்சிருவாங்க. இப்ப பள்ளி ஆரம்பிச்சதால, காலையில் போக முடியாது. சாயந்தரம் பள்ளி முடிச்சு வந்துதான் பார்க்கிறோம். பழகிப் போனதால பறவைகளைப் பார்க்காமல் எங்களால் இருக்க முடியாது" என்கிறார்.


டிரெண்டிங் @ விகடன்