Published:Updated:

`எப்பவேணும்னாலும் மண் சரிஞ்சி விழும்' - கிணறுவெட்டும் தொழிலாளர்களின் திகில் வாழ்க்கை ! #MyVikatan

துர்க்கீஸ்வரி வெ
`எப்பவேணும்னாலும் மண் சரிஞ்சி விழும்' - கிணறுவெட்டும் தொழிலாளர்களின் திகில் வாழ்க்கை ! #MyVikatan
`எப்பவேணும்னாலும் மண் சரிஞ்சி விழும்' - கிணறுவெட்டும் தொழிலாளர்களின் திகில் வாழ்க்கை ! #MyVikatan

``இந்த வேலை அவ்வளவு சுலபமில்லைதான். ஆபத்து எப்பவும் எங்களைச் சுத்தியே இருக்கும்தான். எப்பவேணும்னாலும் மண் சரிஞ்சி எங்க மேல விழும்தான். என்ன செய்யிறது. எங்களோட பரம்பரைத் தொழில் ஆச்சே! விட்டுவிட்டுப் போக மனசில்ல. பழக்கப்பட்ட தொழில்வேற! அதனால இதான் எங்க வாழ்க்கை!" - கிணறுவெட்டும் தொழிலாளர்களைச் சந்திக்கச் சென்றபோது, அவர்கள் சொன்ன வார்த்தைகள். வெறும் சொற்கள் மட்டும் அல்ல. அவர்களின் நெஞ்சில் ஆழமாக ஊறிப்போய்விட்ட ரணங்களே, இவை!

`எப்பவேணும்னாலும் மண் சரிஞ்சி விழும்' - கிணறுவெட்டும் தொழிலாளர்களின் திகில் வாழ்க்கை ! #MyVikatan

திண்டுக்கல், கோமாளிபட்டி கிராமத்தின் ஒரு தோட்டத்தில் கிணறுவெட்டும் பணி நடந்துகொண்டிருந்தது. கிணறுவெட்டும் தொழில் குறித்தும் அவர்களது அனுபவம் குறித்தும் பேசினோம்.

ரங்கன், சூரியன் சுளீரிடும் உச்சிவெயிலில், வெப்பம் கிரகிக்கும் கல்குவியல் மீது நின்றுகொண்டிருந்தார். வயது  65-ஐக் கடந்திருக்கும். அடுத்தவர், முனியாண்டி. கிணற்றுக்குள் கற்களை அள்ளும் பணியில் இருந்தார். வயது எப்படியும் 70-ஐத் தாண்டும். எலும்பும் தோலுமாய் கூன்விழுந்த முதுகு, ஒடுங்கிய வயிற்றுடன் இருந்தாலும் உழைத்தே இறுகிப்போய் கட்டுக்கோப்பாக இருந்தது, உடல். இடுப்பின் அரைக்கால் சட்டை பிடிப்பின்றி காணப்பட்டது. இருவரும் கிணறுவெட்டும் தொழிலாளர்கள். ஆழ்குழாய்க் கிணற்றிலேயே தண்ணீர் வற்றி வறண்டு போயிருக்கும் இந்தக் காலத்திலும், தண்ணீரைத் தேடி கிணறுவெட்டி காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கின்றனர், இருவரும். 

`எப்பவேணும்னாலும் மண் சரிஞ்சி விழும்' - கிணறுவெட்டும் தொழிலாளர்களின் திகில் வாழ்க்கை ! #MyVikatan

ரங்கன் சொன்னார். ``எனக்கு விவரம் தெரிஞ்சதுலே இருந்து கிணறு வெட்டற வேலையைத்தான் செஞ்சுக்கிட்டிருக்கேன். வருஷத்துக்குக் குறைந்தது 10 கிணறாவது வெட்டிடுவோம். அதிகபட்சம் 30. இதுவரைக்கும் 150-க்கும் மேல கெணறு வெட்டி இருப்போம். வெட்டும்போது தண்ணி வந்திடுச்சின்னா தோட்டக்காரங்களைக் காட்டிலும் எங்களுக்குத்தான் அதிக சந்தோஷமா இருக்கும்" மலர்ச்சியோடு பேசியவர் சட்டென சோகமாகிறார். ``மொதல்ல மாதிரி இப்ப அதிகமா யாரும் கிணறு வெட்டுறது இல்ல. எல்லாம் `போர்' போடறாங்க. அதனால் தொழில் கொஞ்சம் நலிவடைஞ்சுதான் இருக்கு” குரல் தணிந்திருந்தது.

`எப்பவேணும்னாலும் மண் சரிஞ்சி விழும்' - கிணறுவெட்டும் தொழிலாளர்களின் திகில் வாழ்க்கை ! #MyVikatan

மதிய உணவு நேரம். மண்ணை மேலே கொண்டுவரும்போது மேலேறி வந்தார் முனியாண்டி. சிமென்டு தொட்டிக்குள் விழுந்து எழுந்தவரைப் போல  உடல் முழுவதும் மண் படிந்திருந்தது. எப்படியும் கீழே நாற்பது ஐம்பது அடி இருக்கும். மேலே வரும்போது இரும்புக் கயிறு அறுந்தாலோ அல்லது நிலை தடுமாறினாலோ தண்ணீர் இல்லாத பாழ்கிணற்றில்தான் விழ வேண்டும். மயிரிழையில் உயிர் பிரியும் என்பார்களே, அந்தநிலைதான் அங்கே அவர்களுக்கு!  

நம்மைப் பார்த்ததும் பேசத் தொடங்கினார், முனியாண்டி. ``எங்க தொழில்ல கண்ணுக்குத் தெரிஞ்ச ஆபத்தும் இருக்கு, கண்ணுக்குத் தெரியாத ஆபத்தும் இருக்கு தாயி. எங்க குழுவில எப்பவும் நாலுபேரு வேலை செய்வோம். ஒருத்தர் இன்ஜின் ஓட்டுவாரு. ஒருத்தர் கல்லுக் கூடைய  இழுத்துக் கொட்டுவாரு. மீதி ரெண்டு பேரும் கிணத்துக்குள்ள வேலை செய்வோம். எங்க கான்ட்ராக்டர் வெடிமருந்து வைக்கிறதுக்கு மட்டும் கிணத்துக்குள்ள இறங்கி வருவாரு. காலையில 9 மணிக்கெல்லாம் வேலையை ஆரம்பிச்சு சாயங்காலம் ஆறுமணிக்கு முடிப்போம். சிலநேரம் வெடி வைக்கறப்ப பாறைங்க சிதறி எங்க மேல வந்து விழும். கிணத்துக்குள்ள நின்னு மண்ணள்ளுறப்போ மண் சரிவுலாம் ஏற்பட்டிருக்கு. எப்ப வேணும்னாலும் உயிர் போய்டும்ங்கற ஆபத்தைத் தெரிஞ்சிக்கிட்டுதான் இந்த வேலைய நாங்க செய்யறோம்” என்று முனியாண்டி சொன்ன வார்த்தைகளும் அதிலிருந்த தொனியும் நம்மை உருகச்செய்தது. 

`எப்பவேணும்னாலும் மண் சரிஞ்சி விழும்' - கிணறுவெட்டும் தொழிலாளர்களின் திகில் வாழ்க்கை ! #MyVikatan

மேலும் அவர், ``ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு அம்மா கிணறு வெட்ட கூப்டாங்க. நாங்களும் போனோம். புள்ளையா வளத்த தென்னையெல்லாம் தண்ணி இல்லாம காயுது! சீக்கிரமா கிணத்த வெட்டிக் கொடுங்கய்யானு அழுதுட்டாங்க. எங்களுக்கு ரொம்பச் சங்கடமா இருந்துச்சு. இராப் பகலுனு பாக்காம 80 அடி கிணத்த 30 நாள்ல வெட்டி முடிச்சோம். இத்தனைக்கும் அது கருங்கல் கெணறு. கருங்கல் பாறையா இருந்தா வேல சீக்கிரமா முடியாது. அதுவே மதுரா (மணல் போன்ற பாறை) இருந்தா சீக்கிரம் வெட்டீரலாம். வெடிமருந்து செலவும் கொஞ்சமா வரும். இங்க வேலை செய்யிற எல்லோரும் கவனமாக இருக்கணும். ஒருத்தரோட கவனம் சிதறுனாகூட என்ன வேணாலும் நடக்க வாய்ப்பிருக்கு." மேலும் தொடர்ந்தார்.

`எப்பவேணும்னாலும் மண் சரிஞ்சி விழும்' - கிணறுவெட்டும் தொழிலாளர்களின் திகில் வாழ்க்கை ! #MyVikatan

``மேல வேலை செய்யுறவங்களைவிட கிணத்துக்குள்ள வேலை செய்றவங்களுக்குத்தான் ஆபத்து அதிகம். கல்லுக்கூடை மேலே போகும்போது உள்ளே வேலை செய்யுறவங்க மேல கல்லு தவறி விழுறதுக்கு வாய்ப்பு இருக்கு. சில சமயம் கெணத்து ஓரம் இடிஞ்சு விழுந்துரும். வேட்டு வைக்கிறதுல ஏதாவது பிரச்னை வந்துரும். கல்ல வெட்டி எடுக்கும்போது கை காலுல காயம் ஆகிரும். இதுமாதிரில்லாம் நடக்க வாய்ப்பு இருக்குங்குறது எங்களுக்குத் தெரிஞ்சதுதான். வேட்டு வைக்கிறதுக்கு பாறைய ஓட்டை போடுவோம். அப்போ கெணறே புகை மண்டலமா மாறிடும். மூச்சு விடுறது பெரும் பாடாகிடும். அத்தன புகையும் தூசும் மூக்குல போய்ட்டா ரெண்டு வாரத்துக்கு இருமிக்கிட்டே இருக்கணும். டாக்டர்கிட்ட போனா, `நுரையீரல் கெட்டுப் போய்ரும்'னு சொல்றாரு" என்று  அமைதியானார். 

`எப்பவேணும்னாலும் மண் சரிஞ்சி விழும்' - கிணறுவெட்டும் தொழிலாளர்களின் திகில் வாழ்க்கை ! #MyVikatan

அப்போது ரங்கன், ``நாங்க  வெட்டுனதுலையே அதிக ஆழம்னா 180 அடி கிணறுதான். 100 அடிக்கு கீழே போயிட்டா, மேல என்ன நடக்குதுன்னே தெரியாது. கத்தி கூப்டாலும் கேக்காது. பூமிய விட்டு வேற எங்கேயோ போயிட்ட மாதிரி இருக்கும். மண்வெட்டி கல்லுல பட்டு கேட்கிற சத்தத்தால காதே வலிக்கிற மாதிரி இருக்கும். சுத்தமா வெளிச்சம் இல்லாததால் அங்கங்க லைட் போட்டுக்குவோம். மேலே இருக்கிறவங்களுக்கு செய்தி பரிமாற்றம் கயிறு வழியாத்தான் அனுப்புவோம். கயிற்றை நாங்க அசைக்கிறத வச்சு, கூடையகீழ இறக்கணும், மேல ஏத்தணும்னு  புரிஞ்சுப்பாங்க. `கரணம் தப்புனா மரணம்தான்' எங்க வாழ்க்கை. மழைக்காலத்துல இந்த வேலை இருக்காது. அப்போ தோட்ட வேலைக்குப் போயிடுவோம். உடல் உழைப்பு கடுமையா இருக்குற வேலையா இருந்தாலும் கெணறு வெட்டுற வேலை எங்களுக்குப் பழகிப்போன ஒன்னு. அதனால அதுல இருக்கிற கஷ்டம் பெருசா தெரியறது இல்ல. வேற வேலைக்குப் போறதவிட இது எங்களுக்கு சுலபமா தெரியிது” என்றார்.

`எப்பவேணும்னாலும் மண் சரிஞ்சி விழும்' - கிணறுவெட்டும் தொழிலாளர்களின் திகில் வாழ்க்கை ! #MyVikatan

``எங்கேயாவது கிணத்துல வேலை செய்றவங்களுக்கு விபத்து நடந்துருச்சுனு செய்தி தெரிஞ்சிட்டா போதும், வீட்டுல இருக்குறவங்க பதறிப் போயிடுவாங்க. அன்னைக்கு முழுசா `இந்த வேல வேண்டாம். வேற வேலைக்கு போனாதான் என்னனு!' புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க. ஆனா, எனக்கு இந்த வேலையைச் செய்யறதுலதான் நிம்மதி. எத்தனையோ உசிருங்க குடிக்கிற தண்ணிக்கு வழி பண்ணி உதவுறேன்னு மன திருப்தி இதுல கிடைக்குது. எப்படியும் எங்க பசங்க இந்த வேலையைச் செய்யப்போறது இல்ல. அதனால எனக்கு கை கால் நல்லா இருந்து, சாகுற வரைக்குமே இந்த வேலையை விடாம செய்யணும்கிறதுதான் என்னோட ஆசை. சம்பளம் கொஞ்சம்தான். ஆடம்பரம் இல்லாத வாழ்க்கைதான். உடுக்க உடையும், குடிக்கக் கஞ்சியும் நிரந்தரமா கிடைக்குது. இது போதாதா தாயி. நல்லது பண்றவங்களுக்கு கெட்டது நடக்காதுனு நம்பித்தான் உசுருக்கு பயப்படாம இந்தத் தொழிலச் செய்றோம்" என்றார்கள்.

இவர்களது மனதிலும் உடலிலும் இன்னும் நிறையவே தெம்பு இருக்கின்றது. இவர்களைப் போல பல மனிதர்கள் உழைப்பை தெய்வமாக மதிக்கத்தான் செய்கின்றனர். `என்ன வேலை செய்கிறோம் என்பதில் இல்லை, எப்படி வேலை செய்கிறோம் என்பதில்தான் உள்ளது, நம் மீதான மதிப்பு’ எனும் கொள்கை உடைய இவர்களைப் போன்றோரைப் போற்றுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்!                          -