``ஜானி ஜானி எஸ் பாப்பா... காற்று மாசுபாடு நோ பாப்பா" - மாணவர்களின் வித்தியாசப் பேரணி | Rally by agri university students on controlling air pollution

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (07/06/2019)

கடைசி தொடர்பு:18:45 (07/06/2019)

``ஜானி ஜானி எஸ் பாப்பா... காற்று மாசுபாடு நோ பாப்பா" - மாணவர்களின் வித்தியாசப் பேரணி

``ஜானி ஜானி எஸ் பாப்பா... காற்று மாசுபாடு - நோ பாப்பா" என்ற முழக்கத்தோடு சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி சென்றனர்.

ஒவ்வொரு வருடமும் ஜூன் 5-ம் தேதி சுற்றுச்சூழல் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 1974-ம் ஆண்டு தொடங்கி இந்த வருடம் வரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஒரு கருப்பொருளோடு இந்தத் தினத்தை உலகம் முழுவதும் வாழும் மக்கள் மற்றும் பல தன்னார்வ அமைப்புகள் பல விழிப்புணர்வு நிகழ்வுகளோடு கடைப்பிடித்து வருகின்றனர். 

காற்று மாசுபாடு

இந்த ஆண்டின் கரு `காற்று மாசுபாட்டைத் தடுத்தல்.' வளி மண்டலமானது மனிதனின் அதிநவீன பயன்பாட்டின் காரணமாக அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. உலகின் அதிக மாசடைந்த 10 நகரங்களில் எட்டு நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரச்னை தற்போது உலகளவில் மிக ஆபத்தானதாக அவசர நிலையில் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டியதாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

விழிப்புஉணர்வுப் பேரணி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் துறையினர் ஒவ்வொரு வருடமும் உலக சுற்றுச்சூழல் தினத்தன்று விழிப்புணர்வுப் பேரணியை நடத்திவருகின்றனர். இந்த வருடத்தின் கருப்பொருளான காற்று மாசைத் தடுத்தல் பற்றிய விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணி சென்றனர். அவர்கள் பேரணி சென்ற வழியெங்கும் முழக்கமிட்டுக்கொண்டே சென்ற ``ஜானி ஜானி எஸ் பாப்பா, காற்று மாசுபாடு - நோ பாப்பா" என்ற கோஷம் அனைவரையும் ஈர்த்தது. இந்நிகழ்வின் முக்கியப் பகுதியாகப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்.குமார், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நேற்று திறந்து வைத்தார்.