புயலிலே உழலும் வாழ்க்கை... 16-ம் நூற்றாண்டு மாலுமிகள் இப்படித்தான் உருவானார்கள்! | Here is how the 16th century voyages started their first sail...

வெளியிடப்பட்ட நேரம்: 18:08 (07/06/2019)

கடைசி தொடர்பு:18:36 (07/06/2019)

புயலிலே உழலும் வாழ்க்கை... 16-ம் நூற்றாண்டு மாலுமிகள் இப்படித்தான் உருவானார்கள்!

கடல் ஒரு போதை வஸ்துவைப் போன்றது. கடல் பயணம் மேற்கொண்டவர்களில் அதைக் கண்டு பயந்து மிரண்டு ஓடிவந்தவர்களும் உண்டு. அதுவே கதியெனக் கிடந்து கடலிலேயே கரைந்தவர்களும் உண்டு.

புயலிலே உழலும் வாழ்க்கை... 16-ம் நூற்றாண்டு மாலுமிகள் இப்படித்தான் உருவானார்கள்!

ரலாற்றில் புதிய புதிய நிலங்களைத் தேடி ஆழ்கடல் முழுவதும் பயணித்த மாலுமிகளைப் பற்றி நிறைய படித்திருப்போம். அவர்களின் கப்பல், மாலுமிகள் வாழ்க்கை, இன்ப துன்பங்கள், கஷ்ட நஷ்டங்கள் என்னென்ன என்பதைப் பற்றிப் படித்துள்ளோமா! ஒரு மாலுமி எப்படி உருவானார் அல்லது எப்படி உருவாக்கப்பட்டார் என்பதைப் பற்றிப் படித்திருப்போமா? 

மாலுமிகள். அவர்களுக்குக் கடல்தான் உலகம். உப்புக் காற்றுதான் உயிர்மூச்சு. ஊசலாடும் கப்பல் வாழ்வுதான் சொர்க்கம். வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் அது கடலிலேயே நிகழ வேண்டுமென்ற வேட்கையோடு சுற்றித் திரிந்தவர்கள் மத்திய கால வரலாற்றின் கடல் மாலுமிகள். அத்தகைய மாலுமிகளைப் பற்றிப் படிக்கப் படிக்கக் கடல் மீதும் கடல் வாழ்க்கை மீது மனம் லயிக்கத் தொடங்கியது. தற்காலத்தில் மாலுமியாகக் கல்விப் படிப்புகள் நிறைய இருக்கின்றன. அதன்மூலம் அந்தச் சொர்க்கத்துக்குள் நுழையும் இந்தக் கால மாலுமிகளைப் பார்க்கச் சற்றுப் பொறாமையாகத்தான் இருக்கிறது. அவர்களே இப்படியென்றால் வாழ்வு முழுவதையும் சுவாரஸ்யத்தின், சாகசங்களின் உச்சாணிக் கொம்பில் நின்று பயணித்த வரலாற்று மாலுமிகள் எப்படி உருவாகியிருப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. அந்தக் கேள்விதான் இந்தக் கட்டுரையைத் தோற்றுவித்தது.  

ஒருவரை மாலுமியாக உருவாக்குவது இப்போதுபோல் நான்கு ஆண்டுகள் ஏட்டுக் கல்வியில் நடந்து முடிந்துவிடும் காரியமல்ல அப்போது. அக்காலத்துப் பெற்றோர் தன் மகனை மாலுமியாக்க விரும்பினால், 14 வயது முடிந்தவுடன் அவரைச் சம்பளமே இல்லாத வேலையாளாக ஒரு கப்பலில் சேர்த்துவிடுவார்கள். அண்ணன் நேசமணியின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் அப்பரசன்டிகளாகச் சேர்த்துவிடுவார்கள். அந்தக் கப்பலில் அவர் ஒன்பது ஆண்டுகள் பணி புரிய வேண்டும். தன் கப்பலில் சம்பளமின்றிப் பணிபுரிவதற்குக் கைம்மாறாக அந்தக் கப்பல் தலைவர் கடல் பயணம் குறித்த அனைத்து விஷயங்களையும் பாடங்களையும் கற்பிக்க வேண்டும். அப்படி அனுபவக் கல்வியாகக் கற்று வரும் மாணவர்கள் தங்கள் ஒன்பது ஆண்டுப் பயணத்தை முடித்துத் திரும்புகையில் ஏதேனும் ஒரு கப்பலில் முதல்கட்ட பணியாளாகவோ, கப்பல் தலைவனாகவோ வருமளவுக்குத் தரம் உயர்ந்துவிடுவார்கள். 

கடல் பயணம்

செல்வந்தரின் மகனாக இருந்தாலும் சரி ஏழைக் குடும்பத்தில் பிறந்த மகனாக இருந்தாலும் சரி அந்த மாணவன் ஒன்பது ஆண்டுகள் முழுவதும் தாங்கள் பயணிக்கும் கப்பலின் தலைவனுக்குக் கீழ் பணிபுரிந்தே தீர வேண்டும். 14 வயதில் கப்பல் தலைவனிடம் மகனை ஒப்படைக்கும் பெற்றோர், ஒரு குறிப்பிட்ட தொகையையும் கொடுத்து அனுப்புவார்கள். அது தன் மகனுக்கு அனைத்து நுணுக்கங்களையும் தந்திரங்களையும் கற்றுக்கொடுக்கத் தரப்பட்டது. செல்வந்தர்கள் மட்டுமே இந்தத் தொகையைத் தந்துள்ளார்கள். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இதைக் கொடுக்கத் தேவையில்லை. ஆனால், அதில் சில இழப்புகளும் இருக்கின்றன. தங்கள் மகனுக்குக் கப்பல் தலைவன் எல்லா நுணுக்கங்களையும் கற்றுத் தர மாட்டான். சில ரகசியமான சூட்சுமங்கள் ஏழை மகன்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படாமலே போகும். அதனால், அவர்கள் பெரும்பாலும் ஒரு தலைவனின் ஊழியன் என்ற அளவுக்கு மட்டுமே வளர முடிந்துள்ளது.  

அப்பரசன்டிகள் என்று அழைக்கப்பட்டாலும் அவர்களுக்கான ஊதியத்தையும் கப்பல் தலைவன் கொடுத்தே அனுப்புகிறான். கப்பல் பயணம் செய்யும் அந்த ஒன்பது ஆண்டுக்காலத்தில் அவர்களுக்குப் பணிகளைத் தவிர ஊதியம் என்று எதுவும் கொடுக்கப்படாது. ஆனால், இறுதியில் மொத்தமாக அவர்களுக்கு ஒரு தொகை ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த ஊதியத் தொகையை எதிர்பார்த்துக்கூடப் பல ஏழைக் குடும்பங்கள் தங்கள் மகன்களை இப்படியாக அனுப்பி வைத்து, எதிர்காலத்தில் அவர்களே பல சாகசங்களுக்குச் சொந்தக்காரர்களான வரலாறுகளும் கடலுக்குள் புதைந்துகிடக்கின்றன. 

கடல் வணிகம்

மாலுமிகளுக்குப் பல்வேறு பணிகள் இடப்பட்டுள்ளன. கடல் பயணம் தொடங்கும் முன் எந்தக் கப்பலாக இருந்தாலும் சரி, அதற்குச் செப்பனிடுதல் அவசியம். அதன் முந்தைய பயணத்தில் ஏற்பட்ட தொய்வுகளை, சேதங்களைச் சரிசெய்து அடுத்தகட்ட நீண்ட பயணத்துக்குத் தயார்படுத்த வேண்டும். பாய்மரங்கள், உமி என்று பலவும் சேதமடைந்திருக்கும். அவை புதுப்பிக்கப்பட வேண்டும். கடலில் ஏற்படும் கடுமையான புயல் மற்றும் மோசமான அலைகளால் அதன் ஓரங்கள், இணைப்புகள் தேய்ந்திருக்கலாம். அதை மறுசீரமைக்க வேண்டும். எவ்வளவு உறுதியான சிறந்த கப்பலாகவே இருந்தாலும் மறுசீரமைப்பு வேலைகளைச் செய்யாமல் மீண்டும் கடலில் இறக்குவது தற்கொலை செய்துகொள்வதற்குச் சமம். இந்தப் பணிகளையெல்லாம் மாலுமிகள் செய்ய வேண்டும். கடல் பயணம் என்பது கடலில் மிதந்து ஊஞ்சலாட்டம் போடும் 'நிலா அது வானத்து மேலே' பாடலைப் போன்றதல்ல. பொங்கும் அலைகளுக்கு மத்தியில் ஆடும் சூதாட்டம். அந்தச் சூதாட்டத்தில் மாலுமிகள் பணயம் வைப்பது தங்கள் உயிரை. 

கடல் ஒரு போதை வஸ்துவைப் போன்றது. கடல் பயணம் மேற்கொள்பவர்களில் அதைக் கண்டு பயந்து மிரண்டு ஓடிவந்தவர்களும் உண்டு. அதுவே கதியெனக் கிடந்து கடலிலேயே கரைந்தவர்களும் உண்டு. அத்தகைய கடல் பயணம் தொடங்கும் முன் மறுசீரமைப்பு வேலைகளைச் செய்துமுடிக்கும் மாலுமிகள், அடுத்த பயணத்துக்குத் தேவையான நீர், உணவு மற்றும் இதரப் பொருள்களைக் கப்பலில் ஏற்றுவார்கள். ஆடு, பன்றி, மாடு என்று இறைச்சிக்காகவே அவற்றையும் ஏற்றிக்கொள்வார்கள். கடலில் மீனைத் தவிர வேறென்ன கிடைக்கும். திடீரென்று ஆட்டுக் கறி சாப்பிட வேண்டுமென்று தோன்றினால் அதற்காகக் கரைக்கா வந்து செல்ல முடியும்! 

இந்த முதல்கட்ட வேலைகள்தான் மாலுமிப் பாடத்தின் முதல் பகுதி. இவற்றையெல்லாம் செய்து செய்து தேர்ந்த பிறகு, மாணவர்கள் அடுத்தகட்டத்துக்குச் செல்வார்கள். பயணத்தின்போது, உணவு, பீர் போன்றவை அளவுக்கு அதிகமாகவே எடுத்துச் செல்லப்படும். கடலில் கப்பல் ஆடும் ஆட்டத்தில் பேரல்கள் விரிசல் விழுந்து நிறைய உணவுகள், பீர், நீர் போன்றவை சேதமடையும். அதனால், அவற்றை அளவாக மட்டுமே எடுத்துச் செல்லக் கூடாது. அவை தேவைக்கு அதிகமாகவே இருக்க வேண்டும். மேற்கத்திய மாலுமிகளின் கப்பலில் முக்கியமான உணவாக இருப்பது பெரும்பாலும் பிஸ்கட்கள்தான். அதை பீரிலோ நீரிலோ நனைத்து மெல்வதற்கு எளிமையாக்கிச் சாப்பிடுவார்கள். மிகப் பெரிய கப்பல்களில் மாலுமிகள் அமர்ந்து சாப்பிடுவதற்கு ஏற்ப உணவு அறை என்று தனியாக அமைக்கப்பட்டிருக்கும். அதுவும் சில கப்பல்களில் மட்டுமே. மற்ற கப்பல்களில் அந்த இடத்தை வேறு எதற்கேனும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் சாப்பிடத் தனியறை அமைக்க மாட்டார்கள். பெரும்பாலும் அந்த இடத்தை அதிகமான சரக்குகளைச் சேமித்து வைக்கப் பயன்படுத்துவதே அவர்களின் நோக்கமாக இருக்கும். 

மாலுமிகள்

கடல் பயணத்தின்போது கயிறுகளில் ஏறிச்சென்று கப்பல் பாய்மரத்தின் உச்சியில் நின்று சுற்றிப் பரந்திருக்கும் கடலை நோட்டமிட வேண்டும். 30 முதல் 50 அடிகள் உயரத்தில் ஒரு பாய்மரத்திலிருந்து இன்னொன்றுக்கு நீண்டிருக்கும் கயிறுகளில் நடந்து சென்று அவற்றை விரிக்கும் வேலைகளை, அவிழ்த்துக் கட்டிவைக்கும் வேலைகளைச் செய்ய வேண்டும். கேட்பதற்குச் சாதாரணமாகத் தோன்றலாம். ஆடிக்கொண்டேயிருக்கும் கப்பலில் அதுவும் அதிகமான அலைகளுக்கு மத்தியிலே கவிழ்ந்துவிடும் வேகத்தில் கப்பல் ஆடும்போதும் அதே 50 அடி உயரத்தில் கைப்பிடியற்ற குச்சியில் நின்று கப்பல் ஏதேனும் உதவிக்கு வருகிறதா என்பதிலிருந்து வானிலையைப் புரிந்துகொள்ள, காற்றின் தன்மையை உணர, கரை ஏதேனும் தெரிகிறதா என்பது வரை அனைத்தையும் அதில் ஏறித்தான் தெரிந்துகொள்ள முடியும்.  

அச்சுப் பிசகினாலும் அதிலிருந்து விழுந்துவிடும் நிலைதான். அதிலிருந்து விழுகையில் கப்பலில் விழுந்தால் என்ன கடலில் விழுந்தால் என்ன, எங்கு விழுந்தாலும் மரணம் நிச்சயம். அந்த அளவுக்கு ஆபத்தான வேலையை ஏதோ வீட்டுச் சுவரில் சாய்த்து வைத்திருக்கும் ஏணியில் ஏறுவதைப் போல் ஏறிச்சென்று தங்கள் பணியை முடிப்பார்கள் மாலுமிகள். பெரும்பாலும் ஒருவர் கடலில் விழுந்துவிட்டால் அவரைக் காப்பாற்ற எடுக்கப்படும் முயற்சிகள் மிகக் குறைவே. அவரைக் காப்பாற்றச் சென்று மற்றவர்களும் தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் துணிய மாட்டார்கள். ஏனென்றால், கடலுக்கு நடுவே பயணிக்கும் ஒரு கப்பலும் அதன் மாலுமிகளும் பிழைக்க வேண்டுமென்றால் ஆள் பலம் மிக மிக முக்கியம். ஆகவே, எந்தத் தலைவனும் பிழைக்க வாய்ப்பிருந்தால் மட்டுமே ஒருவரைக் காப்பாற்றத் தன் மாலுமிகளுக்குக் கட்டளையிடுவான். ஊதித்தள்ளும் சூறாவளிக் காற்றுக்கு மத்தியில்தான் ஆபத்துகள் அதிகமிருக்கும். கும்மிருட்டிலும் கடுங்குளிரிலும்கூடத் தங்கள் பணிகளை மாலுமிகள் சிறப்பாகச் செய்தாக வேண்டும். இல்லையேல், நீரின் நடுவே நிற்கும் அந்த ஒற்றைக் கப்பலில் அவர்கள் அனைவரும் உயிர்பிழைப்பது சிரமம்.  

ஆபத்துகள்

Theodore De Bry, 16th century

சூறாவளிக் காற்றின் நடுவே கப்பலை நிரப்பும் கடல் நீரில் வழுக்கி விழும் மாலுமிகளைத் தூக்கிப் பிடித்துக் காப்பாற்றக்கூட நேரமிருக்காது. கப்பல் மூழ்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கப்பல் தளத்தை நிரப்பும் கடல்நீரையும் வெளியேற்றியாக வேண்டும். மாலுமிகள் வழுக்கி விழுந்துகொண்டேயிருந்தால் யார் கப்பலைக் காப்பாற்றுவது. ஆளுக்கொரு வேலையாகப் பிரித்துக் கொடுத்துத் திறம்படக் கப்பலைக் காப்பாற்றத் திட்டமிட வேண்டியது தலைவனின் பொறுப்பு. தலைவன் ஒரு தவறான முடிவை எடுத்தாலும், அது அவரது கப்பலில் இருக்கும் அனைவரின் உயிரையுமே பறித்துவிடும் அளவுக்கு ஆபத்தைக் கொண்டுவந்துவிடும். 

16-ம் நூற்றாண்டு வரையிலுமே கப்பல் தளத்தில் ஊஞ்சல் கட்டித் தூங்கும் பழக்கம் மாலுமிகள் மத்தியில் பிரபலமாகவில்லை. அதுவரை கப்பலில் கிடைத்த காலியிடத்தில் தூங்கிக்கொண்டிருந்த மாலுமிகள் கரீபியன் தீவில் சுற்றித் திரிந்த கடற்கொள்ளையர்களைப் பார்த்து இந்தப் பழக்கத்தை அவர்களும் கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள். ஆம், அதை முதலில் கரீபியன் தீவு மாலுமிகள்தான் ஆரம்பித்தார்கள். அதைப் பின்னர் அனைத்து மாலுமிகளும் செய்யத் தொடங்கிவிட்டார்கள். 

கடலில் தொலைந்துபோன, அழிந்துபோன, கடற்கொள்ளையர்களால் அழிக்கப்பட்ட கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் கதைகள் ஒவ்வொரு கடலிலும் அந்தக் கடல் காற்றோடு சுற்றித் திரிந்துகொண்டிருக்கும். அந்தக் கதைகள் அவ்வளவும் கொடூரமானவை. கேட்பவர்களின் மனதில் மரண பயத்தை உண்டாக்கக்கூடியவை. ஆனால், அவற்றிலெல்லாம் அக்கறை செலுத்தியிருந்தால் கடல் பயணம் வரலாற்று மாற்றங்களுக்கு வித்திட்டிருக்காது. ஆம், அவர்களுக்கு ஆபத்துதான். ஆனால், அந்த ஆபத்தின்மீதே போதை கொண்டவர்கள். அனுதினமும் மரணத்தின் வாயிலுள் சென்று நலம் விசாரித்து வர விரும்பியவர்கள். 

மாலுமியின் வேலைகள்

ஆம், அவர்கள்தான் மாலுமிகள். அவர்களிடம் கற்கும் மாணவர்கள் மனதிலும் மரணம் குறித்த பார்வை அப்படித்தான் இருக்கும். காரணம், அவர்கள் கற்றது அனுபவக் கல்வி. பரந்திருக்கும் கடலின் மேலோடும் கப்பல், இயங்கும் முறையிலிருந்து இயக்கும் முறைவரை அத்தனையையும் கற்றுத்தரும் அனுபவக் கல்வி. அத்தகைய மாலுமிகளிடம் அனுபவப் பாடம் கற்ற மாணவர்களின் வாழ்வும் அப்படியே மாறும். இல்லை, கடல் பயணம் அவர்களை மாற்றும். அவர்களும் அந்தப் போதைக்கு அடிமையாவார்கள். 

"130 அடி உயரமுடைய இந்தப் பாய்மர உச்சியில், 70 மைல் வேகத்தில் அடிக்கும் காற்று முகத்தில் அறைய, மரண ஓலத்தைப் போன்ற அதன் ஒலிக்கு மத்தியிலே நின்றிருந்தாலும் எங்களுக்குப் பயம் எதுவும் தெரிந்ததில்லை. ஏனென்றால், நாங்கள் மாலுமிகள்" - எரிக் நியூபி


டிரெண்டிங் @ விகடன்