ஒரு குடம் 210 ரூபாய்...! இது எங்கே தெரியுமா? #WhereIsMyWater | Price of a plastic jug is 210 rupees

வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (07/06/2019)

கடைசி தொடர்பு:18:55 (07/06/2019)

ஒரு குடம் 210 ரூபாய்...! இது எங்கே தெரியுமா? #WhereIsMyWater

சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையினால், எப்போதாவது கிடைக்கும் தண்ணீரைச் சேமித்து வைக்க போதிய வசதி இல்லாதவர்கள், குடங்களையும், பிளாஸ்டிக் டிரம் வகைகளையும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். 

குடம்

தண்ணீர்ப் பஞ்சம் வந்ததிலிருந்து ஆங்காங்கே பிளாஸ்டிக் குடங்களுக்கும் தட்டுப்பாடு வர ஆரம்பித்துவிட்டது. மார்க்கெட் பகுதிகளில் இருக்கிற கடைகளுக்குப் போனால், ஏழெட்டுக் குடங்களை எடுத்துக் காட்டி `இவ்ளோதான் இருக்குங்க' என்கிறார்கள். ஒரு பொருளுக்குத் தட்டுப்பாடு வந்தால், அதனுடைய விலையும் சீரற்றுப் போகுமே என்கிற பதற்றத்தில், சென்னையின் சில பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் குடங்களின் விலையை விசாரித்தோம்.

குடம்

தண்ணீர் விலையைப் போன்றே குடங்களின் விலையும் இருமடங்கு உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் 50 ரூபாயிலிருந்து விற்கப்பட்ட பிளாஸ்டிக் குடங்கள் தற்போது 70 ரூபாய் முதல் 210 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வில்லிவாக்கம் பகுதிகளில் 65 ரூபாயில் ஆரம்பித்து 110 ரூபாய் வரை விலை சொல்கிறார்கள். 65 மற்றும் 70 ரூபாய் குடங்கள் 10 முதல் 12 லிட்டர் தண்ணீர் பிடிக்கும். 90 ரூபாய் குடம் 16 முதல் 17 லிட்டர் தண்ணீர் பிடிக்கும். இதுவே 110 ரூபாய் குடம் 19 அல்லது 20 லிட்டர் தண்ணீர் கொள்ளுமாம். குடங்களைக் கையில் தூக்கினால் ஒரு குடம் லைட் வெயிட்டாகவும் மற்றொன்று நல்ல வெயிட்டாகவும் இருந்தது. விசாரித்தால், ``டூ வீலர்ல குடத்தைக் கட்டி தண்ணியெடுக்கிறவங்க கனமா இருக்கிற குடத்தைத் தாங்க வாங்குவாங்க. அதுதான் சீக்கிரம் உடையாது, விலையும்கூட'' என்கிறார் கடைக்காரர். 

குடம் விலை

அடுத்து சூளைமேடுப் பகுதியில் இருக்கிற கடைகளுக்குள் நுழைந்தோம். `இது 100 ரூபா, இது 120 ரூபா, இ.........து 210 ரூபாங்க' என்று கடைசி குடத்தில் அதிர வைத்தார். `எல்லாம் ஒரே அளவாகத்தானே தெரியுது' என்றால், ``குவாலிட்டிங்க. இது தாங்கும். அது தாங்காது'' என்கிறார்.  ராயப்பேட்டையில் விசாரிக்கும்போது ஆரம்பமே 80-ல்தான் தொடங்குகிறது. குடத்தின் விலையைத் தவிர்த்து டிரம்களின் விலையைக் கேட்டால் 100 லிட்டர் தண்ணீர் சேமித்து வைக்கும் ஒரு டிரம் விலை 450 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது.

சைதாப்பேட்டையில் பார்த்தால், குடத்தின் தடிமனைப் பொறுத்து 75 முதல் 95  ரூபாய் வரை விற்பனை செய்கிறார்கள். ஈ.சி.ஆர். பகுதிகளில் 120 முதல் 200 ரூபாய் வரை விலை சொல்கிறார்கள். `ஒரு குடம் 200 ரூபாயா' என்று கேள்வி எழுப்பினால், `பற்றாக்குறைதாங்க காரணம்' என்கிறார்கள் சிம்பிளாக.