``உலகைக் காக்கத் திரும்ப வரும் `அயர்ன் மேன்'!” - ராபர்ட் டௌனி ஜூனியரின் அவெஞ்சர்ஸ் திட்டம் | Robert Downey Jr. Announces plan to save the environment

வெளியிடப்பட்ட நேரம்: 09:49 (08/06/2019)

கடைசி தொடர்பு:09:49 (08/06/2019)

``உலகைக் காக்கத் திரும்ப வரும் `அயர்ன் மேன்'!” - ராபர்ட் டௌனி ஜூனியரின் அவெஞ்சர்ஸ் திட்டம்

``உலகைக் காக்கத் திரும்ப வரும் `அயர்ன் மேன்'!” - ராபர்ட் டௌனி ஜூனியரின் அவெஞ்சர்ஸ் திட்டம்

அயர்ன்மேன் பற்றிய அறிமுகம் பெரிதாக யாருக்கும் தேவையிருக்காது. MCU வரிசையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெளியான பெரும்பாலான படங்களில் அயர்ன்மேன் கதாப்பாத்திரமே மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. டோனி ஸ்டார்க் கவசத்தை அணிந்து கொண்டு அயர்ன்மேனாக மாறுவார். படங்களில் டோனி ஸ்டார்க் கதாப்பாத்திரத்தில்  நடித்தவர் ராபர்ட் டௌனி ஜூனியர். சோகம் என்னவென்றால் இறுதியாக வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் உலகைக் காக்க உயிரைத் தியாகம் செய்திருப்பார் டோனி ஸ்டார்க். அடுத்த மார்வெல் படத்திலாவது அவர் திரும்பி வந்துவிட மாட்டாரா என்று ரசிகர்கள் கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்த்தது போலவே இப்போது புதிதாக ஒரு அயர்ன்மேன் திரும்ப வரப்போகிறார். ஆனால் இந்த முறை திரையில் அல்ல நிஜத்தில்.

என்ன செய்யப்போகிறார் ராபர்ட் டௌனி ஜூனியர்?

அயர்ன்மேன்

கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக MCU வரிசை படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் ராபர்ட் டௌனி ஜூனியர். ஒரு வழியாக அது முடிவுக்கு வந்த நிலையில் அடுத்து அவர் செய்யப்போகிறார் என்பதை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இந்நிலையில்தான் அவரது அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பற்றி அறிவித்திருக்கிறார். இரண்டு நாள்களுக்கு முன்னால் அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடந்த ஒரு மாநாட்டில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார். அமேசான் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட் தொழில்நுட்பம், விண்வெளி ஆகியவை தொடர்பாக புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஒரு மேடையாகவும் இருந்து வருகிறது. இந்த வருடம் இதில் ராபர்ட் டௌனி ஜூனியரும் கலந்து கொண்டு பேசினார். அப்போதுதான் அவரது எதிர்காலத் திட்டத்தைப் பற்றியும் விளக்கியுள்ளனர். அதன்படி மேம்பட்ட தொழில்நுட்பங்களைச் சுற்றுச்சூழலுக்கு உதவும் வகையில் பயன்படுத்துவதுதான் அவரது திட்டம் எனத் தெரிவித்திருக்கிறார். 

திரைப்படத்திலிருந்து கிடைத்த யோசனை! 

டோனி ஸ்டார்க் அயர்ன் மேன்

மார்வெல்லின் படத்தில் வரும் ஒவ்வொரு சூப்பர் ஹீரோவுக்கும் தனிப்பட்ட முறையில் ஏதோ ஒரு சூப்பர் பவர் இருக்கும். ஆனால்  டோனி ஸ்டார்க் முழுவதுமாக தொழில்நுட்பத்தை மட்டுமே துணைக்கு வைத்து அதைச் சாத்தியப்படுத்தியிருப்பார். அதே போல ஜார்விஸ் என்ற கதாபாத்திரத்தையும் மார்வெல் ரசிகர்கள் நன்றாக அறிந்திருப்பார்கள். டோனி ஸ்டார்க் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) தொழில்நுட்பத்தின் பெயர் அது. தொடக்கம் முதலே அவருக்கு உறுதுணையாக இருக்கும். பெரும்பாலான வேலைகளை அதுவே செய்து விடும். ஜார்விஸ் படத்தில் வந்த ஒரு  கதாபாத்திரம்தான் என்றாலும் கூட பத்து வருடங்களுக்கு முன்னால் அது நம்ப முடியாத ஒன்றாக இருந்தது. அயர்ன்மேனுக்கு இருந்ததைப் போலவே அதற்கும் ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. படத்தில் அயர்ன்மேன் கவசத்தை முழுமையாக உருவாக்குவதற்கும், இயங்கவும் ஜார்விஸ் உதவி செய்யும். இப்படி தொழில்நுட்ப விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவராகவே மார்வெல் படங்களில் டோனி ஸ்டார்க் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதே போல ராபர்ட் டௌனி ஜூனியர் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் தொழில்நுட்பம் தொடர்பான விஷயத்தில் ஆர்வம் கொண்டவர். தற்போது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடிவு செய்திருக்கிறார்.

ராபர்ட் டௌனி ஜூனியர் அவெஞ்சர்ஸ்

"ரோபோட்டிக்ஸ் மற்றும் நானோடெக்னாலஜி மூலமாக அடுத்த பத்து வருடங்களில் முழுவதுமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு நமது பூமியைச் சுத்தம் செய்து விட முடியும்" என்ற ராபர்ட் டௌனி ஜூனியர் இந்தத் திட்டம் தொடர்பாக வல்லுநர் குழுவுடன் ஆலோசித்ததாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் அத்துடன் நின்று விடாமல் இதைச் செய்வதற்காக Footprint Coalition என்ற அமைப்பையும் அவர் தொடங்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து அந்த பெயரில் ஓர் இணையதளம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த அமைப்பின் செயல்பாடுகள் எந்த விதத்தில் இருக்கும் என்பது போன்ற தகவல்களைப் பெரிதாக ராபர்ட் டௌனி ஜூனியர் தெரிவிக்கவில்லை. மேடையில் டோனி ஸ்டார்க் கதாப்பாத்திரத்தை எடுத்துக்காட்டாக வைத்தே அவரது பேச்சு இருந்தது. படத்தில்தான் என்றில்லை இப்போது நிஜமாகவே உலகத்தைக் காக்கப் புறப்பட்டிருக்கிறார் ரியல் 'டோனி ஸ்டார்க் '.


டிரெண்டிங் @ விகடன்