காருக்கு 12%, பைக்குக்கு 21%... எவ்வளவு உயர்கிறது இன்ஷூரன்ஸ் விலை? | IRDAI proposes Third Party insurance premium hike

வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (09/06/2019)

கடைசி தொடர்பு:11:21 (09/06/2019)

காருக்கு 12%, பைக்குக்கு 21%... எவ்வளவு உயர்கிறது இன்ஷூரன்ஸ் விலை?

ஜூன் 16 முதல் புதிய இன்ஷூரன்ஸ் விலைகள் அமலுக்கு வருகின்றன. லாங் டெர்ம் இன்ஷூரன்ஸ் ப்ரீமியத்தில் மாற்றம் எதுவும் இல்லை.

காருக்கு 12%, பைக்குக்கு 21%... எவ்வளவு உயர்கிறது இன்ஷூரன்ஸ் விலை?

இந்தியாவின் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சித் துறை (IRDAI) சமீபத்தில் வாகனங்களுக்கான மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ் பாலிசியின் (Third party insurance) ப்ரீமியத்தை உயர்த்தியுள்ளது. இந்தப் புதிய இன்ஷூரன்ஸ் கட்டணம் ஜூன் 16-ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இன்ஷூரன்ஸ் ப்ரீமியம் விலையில் ஒவ்வோர் ஆண்டும் கடந்த ஆண்டு நிகழ்ந்த க்ளெய்ம் பொருத்து இன்ஷூரன்ஸ் ப்ரீமியம் விலைகள் மாற்றியமைக்கப்படுகிறது. வழக்கமாக மார்ச் மாதம் ப்ரீமியம் வரையறுக்கப்படும் நிலையில், இந்த முறை தேர்தல் காரணமாகத் தாமதிக்கப்பட்டுள்ளது.

இன்ஷூரன்ஸ் விலை உயர்வு

IRDAI-ன் ப்ரீமியம் விலை மாற்றத்தின்படி 1000சிசி-க்கு குறைவான தனியார் கார்களுக்கு 12 சதவிகிதம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது 1,850 ரூபாய்க்குக் கொடுக்கப்படும் இன்ஷூரன்ஸ் இனி 2,072 ரூபாய்க்குக் கொடுக்கப்படும். இதுவே 1000 முதல் 15000சிசி இன்ஜின் கொண்ட காராக இருந்தால் 12.5 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இதுவரை 2,863 ரூபாய்க்குக் கிடைத்த TP இன்ஷூரன்ஸ் இனி 3,221 ரூபாய்க்குக் கிடைக்கும். 1500சிசி-க்கு அதிகமான இன்ஜின் அளவு கொண்ட கார்களுக்கு இன்ஷூரன்ஸ் விலையில் எந்த மாற்றமும் இல்லை. பழைய விலையான ரூ.7,890-க்கே கிடைக்கும்.

Insurance Price for cars and two wheelers

இரண்டு சக்கர வாகனங்களைப் பொறுத்தவரை 75சிசி-க்கு குறைவான இன்ஜின் இருக்கும் வாகனங்களுக்கு 12.9 சதவிகிதம் இன்ஷூரன்ஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு ரூ.427 ஆக இருந்த விலை தற்போது ரூ.482 ஆக உயர்ந்துள்ளது. 75 முதல் 150சிசி இன்ஜின் கொண்டிருந்தால் தற்போது 752 ரூபாய் TP இன்ஷூரன்ஸ் ப்ரீமியம் செலுத்த வேண்டும். இது முன்பைவிட 4.4 சதவிகிதம் அதிகம். இருப்பதிலேயே அதிகமாக உயர்ந்திருப்பது 150-350சிசி பைக்குகளுக்கான ப்ரீமியம் விலை. இதற்கு முன்பு 985 ரூபாயாக இருந்த ப்ரீமியம் இப்போது 1,193 ரூபாய் வரை அதிகரித்துவிட்டது. 350சிசி-க்கு அதிகமான பைக்குகளுக்கு எந்த மாற்றமும் இல்லை.

Hiked Insurance price for Commercial vehicles

சரக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட சரக்கு அளவுகளோடு சேர்த்து மொத்த எடை(GVW) 7,500 வரை இருக்கும் வாகனங்களுக்கு இந்த ப்ரீமியம் ரூ.14,390-ல் இருந்து ரூ.15,746 வரை உயர்ந்துள்ளது. GVW, 7500-ல் இருந்து 12,000 வரை இருக்கும் வாகனங்களுக்கு 24,190 ரூபாயில் இருந்து 26,935 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 12000 முதல் 20000 கிலோ எடை கொண்ட கனரக வாகனங்கள் இனி TP ப்ரீமியமாக ரூ.33,418 செலுத்த வேண்டும். 20,000 முதல் 40,000 கிலோ மற்றும் அதற்கு அதிகமான GVW கொண்ட வாகனங்களுக்கு எந்த மாற்றமும் இல்லை.

Insurance price for electric vehicles

இம்முறை புதிதாக மின்சார வாகனங்களுக்கு TP இன்ஷூரன்ஸ் ப்ரீமியத்தை நிர்ணயித்துள்ளது IRDAI. இதற்கான ப்ரீமியம் அந்த வாகனத்தில் உள்ள மின்சார மோட்டாரின் பவரை வைத்துத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களின் இன்ஷூரன்ஸ் விலை சாதாரண கார் பைக்கைவிட 15 சதவிகிதம் வரை குறைவாக உள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு வந்த பஜாஜ் கியூட் போன்ற குவாட்ரிசைக்கிள்களுக்கும் புதிதாக இன்ஷூரன்ஸ் ப்ரீமியம் நிர்ணயித்துள்ளார்கள். இதன் TP ப்ரீமியம் 1000சிசி-க்கு உட்பட்ட கார்களின் விலையிலேயே உள்ளது. பேருந்துகளைப் பொறுத்தவரை பள்ளிப் பேருந்துகளைத் தனியாகப் பிரித்து அதற்கு மட்டும் 4 சதவிகிதம் TP ப்ரீமியம் விலை குறைக்கப்பட்டுள்ளது.

IRDAI Insurance price for Quadricycle

கடந்த 6 ஆண்டுகளில் வாகனங்களுக்கான தேர்டு பார்ட்டி ப்ரீமியம் 20 சதவிகிதத்துக்கும் மேல் அதிகரித்துவிட்டன. கடந்த ஆண்டு புதிய வாகனங்கள் வாங்குபவர்களுக்கு லாங் டெர்ம் இன்ஷூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி புதிய காருக்கு 3 ஆண்டும், புதிய பைக்குக்கு 5 ஆண்டும் கட்டாயமாக இந்த தேர்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ் வாங்க வேண்டும். தற்போது, ஏற்கெனவே பயன்படுத்தும் கார்களுக்கு ஓர் ஆண்டுக்கு எடுக்கப்படும் இன்ஷூரன்ஸின் விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. லாங் டெர்ம் இன்ஷூரன்ஸ் ப்ரீமியத்தில் மாற்றமில்லை.


டிரெண்டிங் @ விகடன்