``சம்மரை இப்படித்தான் சமாளிக்கிறோம்... மிருகங்களும் ஹேப்பி!'' - வண்டலூர் துணை இயக்குநர் | ''Here no water scarcity till now'' says Vandaloor Zoo Deputy Director

வெளியிடப்பட்ட நேரம்: 07:32 (09/06/2019)

கடைசி தொடர்பு:11:31 (09/06/2019)

``சம்மரை இப்படித்தான் சமாளிக்கிறோம்... மிருகங்களும் ஹேப்பி!'' - வண்டலூர் துணை இயக்குநர்

''மிருகங்களைக் குளிக்க வைக்கிற விஷயத்துல நாங்க எந்த சமரசமும் செய்யறதில்லை. பைப்புல தண்ணீர் அடிக்கிறது, ஷவர் பாத் கொடுக்கிறதுன்னு அவற்றுக்கான குளியல் முறைப்படி குளிக்க வைச்சிடுவோம்.''

வ்வொரு வருடமும் வெயில் காலம் வந்தாலே, வண்டலூர் மிருகக் காட்சி சாலையில் `தண்ணீர்த் தட்டுப்பாட்டால் பறவைகள் அவதி', `வன விலங்குகள் தண்ணீரில்லாமல் அவஸ்தை' என்கிற செய்திகள் வருவது வாடிக்கை. மனிதர்களுக்குத் தண்ணீர்த் தட்டுப்பாடு வந்தால், சாலைக்கு வந்து மறியல் செய்தாவது பெற்று விடுகிறார்கள். ஆனால், மிருகங்களுக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் இல்லையென்றால், அந்த வாயில்லாத  ஜீவன்களால் என்ன செய்ய முடியும்? இந்த வருடம்  மிருகக்காட்சி சாலையில் மிருகங்கள் குடிக்க, குளிக்கத்  தேவையான தண்ணீர் இருக்கிறதா எனத் தெரிந்துகொள்வதற்காக  வண்டலூர் மிருகக்காட்சி சாலையின் துணை இயக்குநர் சுதா அவர்களிடம் கேட்டோம். 

வண்டலூர் - ஐஸ்கியூப் பழம் சப்பிடும் கரடி

``வண்டலூர் மிருகக்காட்சி சாலையைப் பொறுத்தவரை, இங்கே நிறைய கிணறுகள் இருக்கு. அதுவே  எங்க மிருகங்களுக்கான தண்ணீர்த் தேவைக்குப் போதுமானதா இருக்கு. அங்கங்கே சர்குலேஷன் குளங்கள் வைச்சிருக்கோம். அந்தக் குளங்களுக்குள்ள மழைத் தண்ணீர் தேங்கி நிற்கிறதால, நிலத்தடி நீரோட வளத்தை அதிகப்படுத்திக் கொடுக்கும். எங்களுக்கு பாலாற்றில் இருந்தும் கொஞ்சம் தண்ணி வருது.  தவிர, ஆழ்துளைக் கிணறுகளும் வைச்சிருக்கோம். அதனால, இந்த வருஷம் எங்க மிருகக்காட்சி சாலையில இருக்கிற எந்த மிருகங்களும் இதுவரை தண்ணீர்ப்பற்றாக்குறையைச் சந்திக்கலை. இனியும் அப்படி நடக்காதுன்னு நம்பறேன்'' என்றவர், மிருகங்களைக் குளிக்க வைப்பது பற்றி சொல்ல ஆரம்பித்தார். 

வண்டலூர்

``வெயில் காலத்துல நம்மாலே குளிக்காம இருக்க முடியுமா? அதே நியாயம்தானே மிருகங்களுக்கும்... அதனால, மிருகங்களைக் குளிக்க வைக்கிற விஷயத்துல நாங்க எந்த சமரசமும் செய்யறதில்லை.  பைப்புல தண்ணீர் அடிக்கிறது, ஷவர் பாத் கொடுக்கிறதுன்னு அவற்றுக்கான குளியல் முறைப்படி குளிக்க வைச்சிடுவோம். இதுல யானைகளுக்கு எப்பவும்போல தினமும் ஷவர் பாத்  கொடுக்கிறோம். போன வருஷம் வரைக்கும் பைப் மூலமா தண்ணீரைப் பீய்ச்சி அடிச்சு குளிக்க வைச்சிக்கிட்டிருந்த புலிகளுக்கு இந்த வருஷம் தினமும் ஷவர் பாத் கொடுக்க ஆரம்பிச்சிருக்கோம். நல்லா என்ஜாய் பண்றாங்க.  

மிருகக்காட்சி சாலை

இதோட, மிருகக் காட்சி சாலையிலே இருக்கிற மிருகங்களுக்கு கோடைக்காலத்துல சாப்பிடக் கொடுக்கிறக்காகவே தனிச் சாப்பாடு மெனு வைச்சிருக்கோம். எங்ககிட்ட இருக்கிற ஐந்து டாக்டர்கள்ல ஒருத்தருக்கு, இந்த சீசன்ல எல்லா மிருகங்களுக்கும் என்னென்ன மாதிரி தண்ணீர்ச்சத்து மிகுந்த உணவுகள், பழங்கள் தரணும்னு சொல்றதுதான் வேலையே. தவிர, மிருகங்களுக்குக் கொடுக்கிற பழங்கள் வாடிப்போய் இருக்கா அல்லது நல்லா ஜூஸியா இருக்குதான்னு வெட்டிப் பார்த்துத்தான் கொடுப்போம். யானைக்கு மட்டும் முழு தர்பூசணியா கொடுப்போம். சிம்பன்ஸிக்கு சின்னச் சின்னதா நறுக்கிக் கொடுப்போம். இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாதிரி.

துணை இயக்குநர் சுதா

மான்களுக்கு வெளியில இருந்து நாங்க புல்லு வாங்கித் தர்றதில்லை. அப்படி வந்தா, புல்லு இங்கே வர்றதுக்குள்ளேயே வாடி வதங்கிப் போயிடும் இல்லன்னா காய்ஞ்சுடும். இங்கேயே புல்வெளிகள் இருக்கிறதால, அதைதான் ஃபிரெஷ்ஷா கட் பண்ணி மான்களுக்குத் தர்றோம். 

இவற்றைத் தவிர, வெயில் காலத்துல விலங்களுக்கு உணவு தர்றதுல இங்கே சில விதிமுறைகள் இருக்கு. கரடி, சிம்பன்ஸி மாதிரி சில விலங்குகளுக்கு பெரிய பெரிய ஐஸ் க்யூபுக்குள்ளே பழங்களை நறுக்கி வைச்சுத் தருவோம். ஐஸ்கிரீம் மாதிரி அவ்ளோ என்ஜாய் பண்ணி சாப்பிடுவாங்க. இதுக்கும் தண்ணீர் தேவைப்படும். ஸோ, இந்த வருஷம் வண்டலூர் மிருகக் காட்சி சாலையிலே தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படலை. டோன்ட் வொர்ரி'' என்று பேசி முடித்தார் சுதா. 


டிரெண்டிங் @ விகடன்