``படிப்பு அறிவுக்கு... கோழி ஆசைக்கு!'' - கோழி வளர்ப்பில் அசத்தும் ஒன்பதாம் வகுப்பு வெங்கடாஜலபதி | 13 year old boy shares his poultry farming success

வெளியிடப்பட்ட நேரம்: 17:44 (10/06/2019)

கடைசி தொடர்பு:17:44 (10/06/2019)

``படிப்பு அறிவுக்கு... கோழி ஆசைக்கு!'' - கோழி வளர்ப்பில் அசத்தும் ஒன்பதாம் வகுப்பு வெங்கடாஜலபதி

"ஒரு வருஷத்தில் என்னோட கோழிகள் மூலமாக 75,000 வரை சம்பாதிச்சிருக்கேன். இப்போ 2 ஆட்டுக் குட்டிகளும் வாத்துகளும் புதுசா வாங்கிருக்கேன். ஒருங்கிணைந்த பண்ணை அமைக்கணும்ங்கிறதுதான் என்னோட ஆசை. இன்னும் ஒரு வருஷத்தில் அதையும் சாத்தியப்படுத்திருவேன்."

``படிப்பு அறிவுக்கு... கோழி ஆசைக்கு!'' - கோழி வளர்ப்பில் அசத்தும் ஒன்பதாம் வகுப்பு வெங்கடாஜலபதி

"நாம படிக்கிற படிப்பு நம்ளோட அறிவைத் தீர்மானிக்குமே தவிர, நம்மளோட எதிர்காலத்தை இல்ல. எதிர்காலத்தில் நான் யாருங்கிறதை என் கனவுதான் தீர்மானிக்கவேண்டும் என்பதில் நானும் என் அம்மா அப்பாவும் உறுதியா இருக்கோம்'' என இயல்பாகப் பேசுகிறார் சிறுவன் பொன் வெங்கடாஜலபதி. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இவர் தன்னுடைய வீட்டில் கோழிப்பண்னை அமைத்து 130 கோழிகளைப் பராமரித்து வியாபாரம் செய்து வருகிறார்.எதிர்காலத்தில் ``நான் விவசாயி ஆகப்போறேன்" என்று உறுதியாகச் சொல்லும் சக்தி தன்னுடைய கோழிப் பண்ணை பற்றி நம்மிடம் பகிர்கிறார்.

``எனக்குச் சொந்த ஊரு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம். ரொம்ப வறட்சியான கிராமம். என்னோட அம்மா - அப்பா ரெண்டு பேரும் கூலி வேலை செய்றாங்க. எப்போதும் எங்களோட வயலில் சேறும் சகதியுமா மண்வாசனையோட வேலை செய்ஞ்சுட்டு வர்ற எங்க தாத்தா குப்புசாமிதான் என்னோட ரோல் மாடல். பள்ளிக்கூடம் லீவ் விட்டுட்டா தாத்தா வீட்டுக்குப் போயிருவேன். கோழி, ஆடுகள்னு எப்போதும் அங்க பாசம் செழிச்சு கெடக்கும். ஒவ்வொரு முறை தாத்தா வீட்டுக்குப் போயிட்டு வரும் போதும் அங்க இருக்க ஆட்டுக்குட்டிகளையும் கோழிகளையும் பிரிஞ்சு வர மனசுக்குக் கஷ்டமா இருக்கும். அதனால தாத்தாகிட்ட நானும் கோழி வளர்க்கவானு கேட்டேன். தாத்தாவும் ஒரு கோழியைக் கொடுத்து அதைக் கவனிச்சிக்கிற சொன்னாங்க. அந்தக் கோழியை எப்படி ஆரோக்கியமா பார்த்துக்கிறது என்ன சாப்பாடு போடணுங்கிறது எல்லாத்தையும் தாத்தா சொல்லிக்கொடுத்தாலும் நிறைய புதுத் தகவல்களை யூடியூப் பார்த்து கத்துக்கிட்டேன். தகவல்கள் நிறைய தேடித் தேடி கத்துக்கிட்டதில் எனக்கு கோழிப் பண்னை வைக்கணும்ங்கிற ஆசை வந்திருச்சு" என்று தன் கோழிகளுக்குத் தீனி போட்டவாறே, கோழிப் பண்ணை தொடங்கிய விதம் பற்றிய தகவல்களைப் பகிர்கிறார்.

வெங்கடாஜலபதி

``கோழிப் பண்ணை ஆசையை முதலில் தாத்தா கிட்டதான் சொன்னேன். தாத்தாவுக்கு ஒரே சந்தோஷம். அம்மா-அப்பாகிட்ட பேசி கோழிப் பண்ணை வைக்கச் சம்மதம் வாங்கிக்கொடுத்தாங்க. என்னோட அப்பாவும் ``நீ உனக்கு பிடிச்சதை செய்... ஆனா படிப்புலேயும் கவனமா இருக்கணும்"னு சொல்லி 25 கோழிகள் வாங்கிக்கொடுத்து, கம்பி அடிச்சும் கொடுத்தாங்க. தினமும் காலையில் ஒரு மணி நேரமும் சாயங்காலம் ஒரு மணிநேரமும் கோழிகளோடு செலவிடுவேன். அதுங்களுக்கு தீனி வைக்கிறது, மருந்து போடுறது, அதுங்க இடத்தைச் சுத்தம் பண்றதுனு எல்லா வேலையையும் நான்தான் பார்த்துப்பேன். கோழிகளுக்கு எந்தச் செயற்கை உணவும் கிடையாது. கீரைகள், காய்கறி கழிவுகள், கம்பு, சோளம்னு இயற்கையான உணவுகள்தான் போடுவேன். என்னோட கோழிகளுக்கு இயற்கையான உணவு போடுறதுக்காக எங்க வீட்டிலேயே ஒரு சின்ன தோட்டம் அமைச்சு கீரைகள் வளர்த்துட்டு இருக்கேன். கோழி வளர்ப்பில் எந்த அளவு லாபம் இருக்கோ அதே அளவு ஆபத்தும் இருக்கு.

``ஒரு கோழிக்கு நோய்வந்தா கூட அது எல்லா கோழியையும் பாதிச்சிரும். நான் கோழி வளர்க்க ஆரம்பிச்ச புதிதில் ஒரு நாள் பள்ளிக்கூடம் விட்டு வந்து பார்க்கும் போது என்னோட பத்துக் கோழிங்க ஒரே நேரத்தில் `கழிச்சல் நோய்' வந்து இறந்து கிடந்துச்சுங்க. மனசு கஷ்டம் ஒரு பக்கம், காசை வீண்டிச்சிட்டனு அப்பா திட்டுவாங்கனு பயம் ஒரு பக்கம் இருந்துச்சு. அழுதுகிட்டே கோழிங்க பக்கத்துல உட்கார்ந்து இருந்தேன். வேலையில இருந்து திரும்பி வந்த அப்பா, `விடு சாமி! அதுங்கள நீ நல்லாதான் பார்த்துக்கிட்ட, தொழில் பண்ணா சில சமயம் நஷ்டம் வரதான் செய்யும். இது ஒரு பாடம்'னு சொல்லி சமாதானம் பண்ணாங்க. பத்துக் கோழிகளையும் புதைச்சிட்டு, என்னை நானே தேத்திக்கிட்டு மீதம் இருந்த 15 கோழிகளை வெச்சு, புதுத்தெம்போட பிசினஸை ஆரம்பிச்சேன்.

கோழி

ஆரம்பத்தில் கோழிகளோட எண்ணிக்கை குறைச்சலா இருந்ததால் முட்டைகளை விற்காமல், அடைகாக்க வெச்சு கோழிகள் இனத்தைப் பெருக்கினேன். கோழிகளோட எண்ணிக்கை அதிகரிச்ச பின் கோழிகளையும் முட்டைகளையும் விற்க ஆரம்பிச்சேன். நாட்டுக்கோழி முட்டைகள் 12 ரூபாய், கோழியா வாங்கினா ஒரு கிலோ 400 ரூபாக்கும் விற்க ஆரம்பிச்சேன். அது மூலமாக கிடைக்குற லாபத்தைத் திரும்பி கோழிகளிலே முதலீடு செய்தேன். ஒரு முறை வாங்குற கோழியை அஞ்சு முறை முட்டை இட்டு அடை காக்கிறதுக்குப் பயன்படுத்துவேன். அஞ்சு முறைக்கு அப்புறம் கறிக்கு வித்துருவேன். நல்லா வளர்ந்த கோழி 2 மாசத்துக்கு ஒரு முறை முட்டை இடும். அதனால் ஒரு கோழி என்கிட்ட குறைந்தது நூறு நாள் வரை இருக்கும். கோழியோட எண்ணிக்கை குறையும் சமயத்தில் புதுக் கோழி வாங்குவேன்". என்பவர் கோழிகளை தேர்வு செய்யும் விதத்தை விளக்குகிறார்.

``சந்தைகளில் வாங்குற கோழிகளில் சில சமயம் நோய்வாய்ப்பட்டு இருக்கும் என்பதால், பள்ளி விடுமுறை நாளில் நேரடியா கிராமத்துல போய்தான் கோழி வாங்கிட்டுவருவேன்.ஒரு கோழி எத்தன முறை முட்டை இட்டு இருக்கு என்பதை அதோட உடம்பை வெச்சே கண்டு பிடிச்சிருவேன். நான் விலைக்கு வாங்குற கோழி ஒரு தடவைக்கு மேல முட்டை இட்டு இருந்தா அந்தக் கோழியை வாங்க மாட்டேன். கோழி வாங்கும் போது அதன் எச்சத்தைப் பார்க்கணும். கோழியோட எச்சம் கறுப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில் இருந்தா அது ஆரோக்கியமா இருக்குனு அர்த்தம். அதே மாதிரி அதோட கழிவையும் பார்த்துத்தான் வாங்கணும். 30 கோழிகள் இருந்தால் 2 சேவலாவது இருந்தால்தான் இனப்பெருக்கம் மூலமாக கோழியோட இனத்தைப் பெருக்க முடியும். 30 கோழிகளில் தொடங்கிய என்னோட பிசினஸ் ஒரே வருஷத்தில் 130 கோழியாகப் பெருகிருக்கு. ஒரு வருஷத்தில் என்னோட கோழிகள் மூலமாக 75,000 வரை சம்பாதிச்சிருக்கேன். இப்போ 2 ஆட்டுக் குட்டிகளும் வாத்துகளும் புதுசா வாங்கிருக்கேன். ஒருங்கிணைந்த பண்ணை அமைக்கணும்ங்கிறதுதான் என்னோட ஆசை. இன்னும் ஒரு வருஷத்தில் அதையும் சாத்தியப்படுத்திருவேன். அடுத்தபடியா தாத்தாகூட சேர்ந்து விவசாயம் பண்ணவும் தயாராகிட்டு இருக்கேன். அதே சமயம் பள்ளியிலும் டாப்பர்தான். படிப்பு அறிவுக்குக் கோழி ஆசைக்கு..." என்கிறார்.

இயற்கை செழிக்கட்டும்!


டிரெண்டிங் @ விகடன்