`எலெக்ட்ரிக் 2 வீலர், 3 வீலர் ஓகே... ஆனால் எலெக்ட்ரிக் கார் வேண்டாமா?’ - ராஜீவ் பஜாஜ் கேள்வி! | Rajiv Bajaj Condemns Government's Policy to Mandate Electric 2 Wheelers and 3 Wheelers by 2025

வெளியிடப்பட்ட நேரம்: 11:03 (11/06/2019)

கடைசி தொடர்பு:11:03 (11/06/2019)

`எலெக்ட்ரிக் 2 வீலர், 3 வீலர் ஓகே... ஆனால் எலெக்ட்ரிக் கார் வேண்டாமா?’ - ராஜீவ் பஜாஜ் கேள்வி!

தற்போதைய சூழலில் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த விழிப்புணர்வு, நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் போதுமான அளவில் இல்லை. எனவே, இத்தகைய நிலையில், ஒரு தலைகீழ் மாற்றம் எப்படி உடனடியாக சாத்தியமாகும்?

`எலெக்ட்ரிக் 2 வீலர், 3 வீலர் ஓகே... ஆனால் எலெக்ட்ரிக் கார் வேண்டாமா?’ - ராஜீவ் பஜாஜ் கேள்வி!

 

இந்தியாவில் வாகனங்களால் ஏற்படும் காற்றுமாசைக் கட்டுப்படுத்தும் விதமாக, எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையைப் பெருக்கும் முயற்சியில் மத்திய அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது. அதன் எதிரொலியாக, 150சிசிக்கு உட்பட்ட டூ-வீலர் மற்றும் 3 சக்கர வாகனங்களை முழுவதும் எலெக்ட்ரிக் மயமாக்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை இது அமலுக்கு வந்தால், ஏப்ரல் 2023 முதலாக எலெக்ட்ரிக் 3-வீலர்களையும் - ஏப்ரல் 2025 முதலாக எலெக்ட்ரிக் டூ-வீலர்களையும் கட்டாயமாக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் டூ-வீலர் மற்றும் 3-வீலர் செக்மென்ட் சேர்த்து, வருடத்துக்கு 2 கோடி வாகனங்கள் விற்பனையாகின்றன. 'உலகளவில் 3-வீலர்கள் மற்றும் குவாட்ரிசைக்கிள்களைத் தயாரிக்கும் பெரிய நிறுவனம்' என்ற பெருமையை பஜாஜ் ஆட்டோ பெற்றிருக்கிறது. இந்த நிலையில், மத்திய அரசின் இந்தத் திட்டம் குறித்தத் தனது கருத்தை, இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ராஜீவ் பஜாஜ் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

 

பஜாஜ் ஆட்டோ

 

''2023 முதலாக எலெக்ட்ரிக் 3-வீலர்களையும், 2025 முதலாக எலெக்ட்ரிக் டூ-வீலர்களையும் கட்டாயமாக்குவதில், மத்திய அரசின் நோக்கம் தெளிவாகிறது. இது ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றாலும், எனக்கு 3 கேள்விகள் இருக்கின்றன. முதல் கேள்வி: தற்போதைய சூழலில் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த விழிப்புணர்வு, நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் போதுமான அளவில் இல்லை. எனவே, இத்தகைய நிலையில், ஒரு தலைகீழ் மாற்றம் எப்படி உடனடியாக சாத்தியமாகும்? இரண்டாவது கேள்வி: சுற்றுச்சூழல் மாசடைவதைக் குறைக்கக்கூடிய BS-6 மாசு விதிகள் அமலுக்கு வந்த 3 ஆண்டுகளிலேயே, மீண்டும் மற்றுமொரு அப்டேட்டுக்கு வாகனத் தயாரிப்பாளர்களை நிர்ப்பந்திப்பது ஏன்? மூன்றாவது கேள்வி: டூ-வீலர்கள் மற்றும் 3-வீலர்களை எலெக்ட்ரிக் மயமாக்கும்போது, கார்கள் எங்கே போனது?

 

3 வீலர் ஆட்டோ

 

என்னைப் பொறுத்தவரை, இது எல்லாவற்றுக்குமான தீர்வாக CAFE விதிகள் (Corporate Average Fuel Efficiency) இருக்கும் என நம்புகிறேன். இதை முதற்கட்டமாக, 2023 அல்லது 2025 ஆகிய ஆண்டுகளில் அனைத்து விதமான வாகனங்களுக்கும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரலாம். அப்போதைய நிலையில் இந்தியாவின் மாசடைந்த நகரங்களில் வரிசைக்கேற்ப இத்திட்டத்தை அமல்படுத்தலாம். இதில் கிடைக்கும் தகவல் மற்றும் அனுபவத்தைப் பொறுத்து, பின்னாளில் ஒரு அரசாணையை மத்திய அரசாங்கம் அறிவிக்கலாம்'' என்றார். நிதி ஆயோக்கின் தலைவரான அமிதாப் கண்ட் தலைமையிலான மத்திய அரசின் குழுதான், எலெக்ட்ரிக் டூ-வீலர்/3-வீலர்களைக் கட்டாயமாக்குவது பற்றிய அறிக்கையை பரிந்துரைத்திருக்கிறது. எலெக்ட்ரிக் 3-வீலர்களில் Per KiloWatt-க்கு மத்திய அரசு தரக்கூடிய மானியத்தை இரட்டிபாக்கக் கூறியதும் இவர்கள்தாம்!

 

குவாட்ரிசைக்கிள்

 

இது அமலுக்கு வந்தால், பெட்ரோல்/டீசலில் இயங்கும் 3-வீலர்களின் விலைக்குச் சமமாக எலெக்ட்ரிக் 3-வீரர்களின் விலை வந்துவிடும்; எலெக்ட்ரிக் 2-வீலர்/3-வீலர்களைத் தொடர்ந்து, பள்ளி மற்றும் நகரப் பேருந்து, டெலிவரி வாகனங்கள் (LCV) ஆகியவையையும் எலெக்ட்ரிக் மயமாக்குவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் மூன்றாவது பெரிய டூ-வீலர் தயாரிப்பாளரான பஜாஜ் ஆட்டோ, இந்த ஆண்டில் பல்ஸர் 180F - பிளாட்டினா 100 KS CBS - டொமினார் பேஸ்லிஃப்ட் - க்யூட் குவாட்ரிசைக்கிள் - அவென்ஜர் ஸ்ட்ரீட் 160 - பிளாட்டினா 110 H-Gear உள்ளிட்ட பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் ஹஸ்க்வர்னா பிராண்டில் 2 பைக்குகளையும் (Svartpilen 401 & Vitpilen 401), Urbanite பிராண்டிங்கில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும், கேடிஎம் டியூக் 390 அட்வென்ச்சர பைக்கையும் களமிறக்கத் திட்டமிட்டுள்ளது. ஆனால் ''விலை குறைவான கேடிஎம் பைக்'' என அறியப்படும் டியூக் 125, அந்தப் பெருமையை இழக்கும் விதமாகத் தொடர்ந்து விலை ஏற்றத்தைப் பெற்றுவருவது, பைக் ஆர்வலர்கள் மத்தியில் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது!

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்