"தாமதித்தே குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்" - சியாமளா பாபு | How to develop good qualities in your child? Experts talk!

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (11/06/2019)

கடைசி தொடர்பு:15:00 (11/06/2019)

"தாமதித்தே குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்" - சியாமளா பாபு

"குழந்தைகளைப் பொறுத்தவரை தோல்வி என்பது வெறும் ஒரு வார்த்தைதான். அந்த வார்த்தையை அசிங்கம், அருவருக்கத்தக்க விஷயம் என அவர்களின் மனதில் தோற்றுவிப்பது பெற்றோர்களாக இருக்கிறார்கள். அதனால் பெற்றோர்கள் முதலில் தோல்வி பற்றிய சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும்."

குழந்தைகளிடம் நாம் சொல்லத் தயங்கும் ஒரு வார்த்தை... அவர்கள் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை வாழ்வில் எதிர்கொண்டால் என்னாவது என்று நாம் பயப்படும் ஒரே வார்த்தை `தோல்வி.’ எங்கும் வெற்றி எதிலும் வெற்றிதான் நமக்குப் பிடித்த வாசகம். என் குழந்தை அதிக மார்க் வாங்கணும் என்று நினைக்கும் பெற்றோர் ஒருபுறம்... மற்றொருபுறம் அவன் அதிக மார்க் வாங்கலைனாகூட பரவாயில்லை, தோல்வியடைஞ்சுடக் கூடாது என்று உள்ளுக்குள் பதற்றத்தை எப்போதும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள் பெற்றோர்கள்.

முன்பெல்லாம் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்கிற பிரஷரை சுமந்தார்கள் பிள்ளைகள். இப்போதெல்லாம் எனக்கு இது வேண்டும். அதை அடைந்தே தீருவேன் என்கிற சுய பரிசோதனையை பிரஷராக்கிக்கொள்கிறார்கள் பிள்ளைகள். விளைவு, தேர்ந்தெடுக்கும் குறிக்கோளுக்கு மாற்று யோசனை என்பதே இல்லாமல் கடினமாகப் பயணிக்கிறார்கள். கிடைக்காத பட்சத்தில் விபரீதமான முடிவுகளை நோக்கிப் பயணிக்கிறார்கள். இல்லை, கிடையாது, நடக்காது என்கிற வார்த்தைகளை எதிர்கொள்ளப் பயப்படுகிறார்கள் இந்தக் கால குழந்தைகள். தோல்வி நிச்சயம் பழக வேண்டும்'' என்று ஆணித்தரமாகப் பேசுகிறார் தன்னம்பிக்கை பேச்சாளர் சியாமளா ரமேஷ் பாபு.

தோல்வி

சியாமளா"குழந்தைகளைப் பொறுத்தவரை தோல்வி என்பது வெறும் ஒரு வார்த்தைதான். அந்த வார்த்தையை அசிங்கம், அருவருக்கத்தக்க விஷயம் என அவர்களின் மனதில் தோற்றுவிப்பது பெற்றோர்களாக இருக்கிறார்கள். அதனால் பெற்றோர்கள் முதலில் தோல்வி பற்றிய சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும். எத்தனை முறை தோற்றாலும் அதன் முடிவு வெற்றி என்பதைக் குழந்தைகளின் 2 வயதிலிருந்தே பழக்குவது ஆரோக்கியமான விஷயம். அவர்களுக்கான சின்னச் சின்ன விஷயங்களையும் அவர்களையே செய்ய பழக்குங்கள். தங்களுக்கான செயலை குழந்தைகள் செய்து கொள்ளும்போது கீழே விழுந்தாலோ, தவறாகச் செய்தாலோகூடப் பதற்றமோ ஏளனமோ இல்லாமல் 'உன்னால் முடியும்' என அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.  

நம் பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும்போதே காத்திருக்கப் பழக்குதல் வேண்டும். கேட்டு முடிப்பதற்குள் அவர்கள் கை மேல் அந்தப் பொருளை வைத்து அவர்களை எப்போதும் குஷிப்படுத்தவேண்டாம். தாமதித்தே அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். காத்திருக்கப் பழகும் குழந்தைகளே எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் மன வலிமை கொண்டவர்களாக உருவாகிறார்கள்
குழந்தைகள், தான் வெற்றி பெற்றதைப் பெருமையாகச் சொல்லும்போது நம் கண்களை அகல விரித்துக் காதுகளை தீட்டிக்கொண்டு கேட்பதுபோலவே, அவர்கள் தோற்று இறுக்கமாக உணரும்போது நம் மனதை விசாலமாக்கி, மனம்விட்டுப் பேச வேண்டும். குறிப்பாக, குழந்தையின் முயற்சியில் என்ன மாற்றங்கள் தேவை என்பதைப் பொறுமையாக எடுத்துக் சொன்னாலே போதும். முயற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதுதான் அவசியம். முடிவுகளுக்கு முக்கியத்துவம் தேவையில்லை. குழந்தைகளின் சின்னச் சின்ன முயற்சிகளை ஊக்கப்படுத்திப் பாராட்டினால் அவர்கள் முடிவு பற்றிய அழுத்தமின்றி முயற்சியில் முழுமூச்சாக 100 சதவிகிதம் கவனம் செலுத்துவார்கள்.தோல்வி அடைந்தாலும் தங்கள் முயற்சிக்காகச் சந்தோஷப்படுவார்கள்.

குழந்தைகள்

பல முறை தோல்விகளைச் சந்தித்து, விடா முயற்சியால் வென்றவர்களின் கதைகளை அடிக்கடி குழந்தைகளோடு பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தித்த தோல்விகளையும், அதில் மீண்டு வந்ததையும்கூட கதைகளாகச் சொல்லலாம்.

குழந்தைகளுடனான நம் உறவை அவர்களின் வெற்றியையோ தோல்வியையோ வைத்து நிர்ணயிக்காமல் அவர்களின் வயசு, அவர்களின் இயல்புகளுக்கு ஏற்ப குழந்தைத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும். தோல்வி அடைந்தால் பேச மாட்டேன், வெற்றி அடைந்தால் இந்தப் பொருள் வாங்கித் தருகிறேன் எனக் குழந்தைகளைப் பந்தயத்துக்குப் பழக்கப்படுத்தாதீர்கள். அவர்களின் சிறு வயதில் இது ஆரோக்கியமான விஷமாக இருந்தாலும், வளர வளர அவர்களுக்கு மன அழுத்தமாகவே மாறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வெற்றி அடையும்போதும் தோல்வி அடையும்போதும் அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து ஆதரவான வார்த்தைகளைப் பேசி அவர்களை ஊக்கப்படுத்துவது அவசியம். தோல்வி என்பது வெற்றிக்கான இன்னொரு முயற்சிதான் என்பதைக் குழந்தைகளின் மனதில் பதியவையுங்கள்.

முயற்சி செய்யாமல் இருப்பதே தோல்வி என்றும் போதிய மதிப்பெண் வாங்காததோ, போட்டியில் ஜெயிக்காததோ தோல்வி அல்ல என்பதை முதலில் நாம் நன்கு உணர்ந்துகொண்டு, பிறகு நம் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.

குழந்தைகள்

உங்கள் குழந்தை தோல்வியைச் சந்தித்திருக்கும் வேளையில். "நீ இப்படித்தான், தெரியும் உன்னால் ஜெயிக்க முடியாது என அவர்களை வார்த்தைகளால் மேலும் பலவீனம் ஆக்காமல் இதைவிட அடுத்து இன்னும் கவனமாக முயற்சி செய் என அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

இவற்றையெல்லாம் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள் உங்கள் குழந்தையும் வெற்றியாளர்தான்.


டிரெண்டிங் @ விகடன்