625 சிசி முதல் 1500 சிசி வரை... வருகின்றன மஹிந்திராவின் BS-6 பெட்ரோல் இன்ஜின்கள்! | Mahindra Unveils its BS-6 Range of Petrol Engines: A Closer Look

வெளியிடப்பட்ட நேரம்: 08:57 (12/06/2019)

கடைசி தொடர்பு:09:17 (12/06/2019)

625 சிசி முதல் 1500 சிசி வரை... வருகின்றன மஹிந்திராவின் BS-6 பெட்ரோல் இன்ஜின்கள்!

ஏற்கெனவே லேட்டஸ்ட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பதால், BS-4ல் இருந்து BS-6 மாசு விதிகளுக்கு பெட்ரோல் இன்ஜின்களை அப்டேட் செய்வது சுலபம் என்கிறது மஹிந்திரா.

வருகின்ற ஏப்ரல் 2020 முதலாக, நாடெங்கும் BS-6 மாசு விதிகள் அமலுக்கு வருகிறது. இதனால் வாகன உற்பத்தியாளர்கள் அனைவரும் அதற்காகத் தீவிரமாகப் பணியாற்றிக்கொண்டிருப்பதுடன், எலெக்ட்ரிக் வாகனங்களின் மீதும் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில்தான் தயாரிக்கப்போகும் BS-6 பெட்ரோல் இன்ஜின்கள் பற்றிய தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறது மஹிந்திரா. இதில் 625 சிசி தொடங்கி 1,500 சிசி வரை என மொத்தம் 5 இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன.

Pawan Goenka

டீசல் இன்ஜின்களுக்குப் பெயர்பெற்ற இந்த நிறுவனம், கடந்த 4 ஆண்டுகளாகத்தான் பெட்ரோல் இன்ஜின்களைத் தயாரித்து வருகிறது. இதனால், ஏற்கெனவே லேட்டஸ்ட் தொழில்நுட்பங்கள் அவற்றில் பயன்படுத்தப்பட்டிருப்பதால், BS 4-லிருந்து BS-6 மாசு விதிகளுக்கு இன்ஜின்களை அப்டேட் செய்வது சுலபமாக இருந்ததாக மஹிந்திராவின் நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா கூறியுள்ளார். எனவே BS-6 மாடலின் விலை 20,000 ரூபாய் மட்டுமே அதிகமாக இருக்கலாம்! 

BS-6

625சிசி NA: மஹிந்திராவின் சிறிய சிங்கிள் சிலிண்டர் - பெட்ரோல் இன்ஜினான இது, தற்போது ஜீத்தோ கமர்ஷியல் வாகனத்தில் பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய BS-4 மாசு விதிகளுக்குட்பட்டு, 11bhp/3.8kgm மற்றும் 16bhp/3.8kgm என இருவகையான டியூனிங்கில் இவை கிடைக்கின்றன. BS-6 மாசு விதிகளுக்கேற்ப இதை மேம்படுத்தும்போது, முறையே 20.7bhp/4.4kgm மற்றும் 23.2bhp/4.8kgm ஆகிய பவர்/டார்க் அளவுகளில் வெளிவரும். முந்தைய வெர்ஷனைவிட செயல்திறனில் பெரிய முன்னேற்றம் தெரிவது ப்ளஸ்.

1,197சிசி MPFi: இது XUV3OO-ல் இருக்கும் 3 சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின். Indirect Injection தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த இன்ஜின், BS-6 மாசு விதிகளுக்கேற்ப மேம்படுத்தப்படும்போது 110bhp பவர் மற்றும் 19kgm டார்க்கையே வெளிப்படுத்தும்; தற்போதைய BS-4 வெர்ஷனுடன் ஒப்பிடும்போது பவரில் வித்தியாசமில்லாவிட்டாலும், டார்க்கில் 1kgm குறைந்திருக்கிறது. மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கும் மஹிந்திராவின் இந்தப் புதிய காம்பேக்ட் எஸ்யூவியில் இதுவரை விற்பனையாகியுள்ள கார்களில் 25% பெட்ரோல் மாடல்களே என்பது குறிப்பிடத்தக்கது; இதனால் இப்போதைக்கு, இந்த நிறுவனத்தின் ட்ரெண்டிங்கான பெட்ரோல் இன்ஜின் இதுதான்!

பெட்ரோல்

1,197சிசி T-GDi: முன்னே சொன்ன இன்ஜினின் Direct Injection மாடல்தான் இது. மஹிந்திரா மற்றும் ஃபோர்டு இணைந்து தயாரிக்கப்போகும் மிட்சைஸ் எஸ்யூவியில் (W601) இருக்கப்போகும் இன்ஜினும் இதுதான்; 130bhp பவர் மற்றும் 23kgm டார்க்கை இது வெளிப்படுத்துகிறது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் 250 Bar GDI ஃப்யூல் ரெயில் சிஸ்டமே, இதன் அதிக பர்ஃபாமன்ஸ் மற்றும் மைலேஜுக்கான முக்கிய காரணியாக இருக்கும். 

1,198சிசி NA: மஹிந்திராவின் KUV1OO NXT காரில் இருக்கும் 3 சிலிண்டர் - பெட்ரோல் இன்ஜினான இது, தற்போதைய BS-4 வெர்ஷனில் 83bhp பவர் மற்றும் 11.5kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. BS-6 மாசு விதிகளுக்கு இந்த MPFi இன்ஜினை மேம்படுத்தும் முடிவில் இந்நிறுவனம் இருக்கிறது. 

மஹிந்திரா

1.5 லிட்டர் T-GDi: ஸாங்யாங் உடன் சேர்ந்து மஹிந்திரா இந்த இன்ஜினைத் தயாரிக்க உள்ளது. 163bhp பவர் மற்றும் 28kgm டார்க்கை வெளிப்படுத்தும் இது, மஹிந்திராவின் வருங்கால மாடல்கள் மற்றும் ஸாங்யாங்கின் புதிய Korando எஸ்யூவியிலும் இடம்பெறும். டூயல் மாஸ் Flywheel, சிலிண்டர் ஹெட்டில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் எக்ஸாஸ்ட் Manifold, குறைந்த உராய்வைக் கொண்ட பிஸ்டன் Rings போன்ற பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், அதிக மைலேஜ் மற்றும் குறைவான NVH கியாரன்ட்டி எனலாம்.

கொசுறு செய்தி: சர்வதேச அளவில் 11 விருதுகளை வென்றிருக்கும் 1.0 லிட்டர் எக்கோ பூஸ்ட் இன்ஜின், ஏப்ரல் 2020 முதலாக இந்தியாவில் கிடைக்காது எனத் தகவல் வந்திருக்கிறது (டிராகன் சீரிஸ் இன்ஜின்கள், BS-6 விதிகளுக்கு மேம்படுத்தப்படும்). இது அதிரடியான பர்ஃபாமன்ஸுக்குப் பெயர் பெற்றிருக்கும் அதே சமயத்தில், குறைவான மைலேஜுக்கும் பெயர் வாங்கியிருக்கிறது. இதனால் எக்கோ பூஸ்ட் இன்ஜின் பொருத்தப்பட்ட எக்கோஸ்போர்ட்டின் விற்பனை வெறும் 5% தான்.

எக்கோபூஸ்ட்

இப்படி டிமாண்ட் குறைவாக இருப்பதால், BS-6 மாசு விதிகளுக்கேற்ப இதை அப்டேட் செய்வதற்குத் தயக்கம் காட்டுகிறது ஃபோர்டு. இந்த நிலையில்தான், தனது கூட்டாளியான மஹிந்திராவின் முதல் T-GDi பெட்ரோல் இன்ஜின், ஃபோர்டுக்கு மிகவும் பிடித்துவிட்டது; இது எக்கோ பூஸ்ட் இன்ஜினைவிடப் பவர்ஃபுல்லாக இருப்பது போனஸ்தான். வழக்கமான மேனுவல் கியர்பாக்ஸ் தவிர ட்வின் க்ளட்ச் ஆட்டோமேட்டிக்கும் இதனுடன் இணைக்கப்படும். செப்டம்பர் 2019 முதலாக BS-6 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட கார்களை மஹிந்திரா விற்பனைக்குக் கொண்டுவரும் முடிவில் இருக்கிறது. அப்போது பயன்பாட்டில் இருக்கும் BS-4 எரிபொருளிலும் இவை சிக்கலின்றி இயங்கும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்