4 மாதங்களில் பலியான 218 சிறுத்தைப் புலிகள்... குபீரென 40 சதவிகிதம் அதிகரித்த காரணம்! | Sudden increase in number of leopards death

வெளியிடப்பட்ட நேரம்: 21:37 (12/06/2019)

கடைசி தொடர்பு:21:37 (12/06/2019)

4 மாதங்களில் பலியான 218 சிறுத்தைப் புலிகள்... குபீரென 40 சதவிகிதம் அதிகரித்த காரணம்!

சிறுத்தைப் புலி பாதுகாப்பில் மனித - சிறுத்தை மோதல் தடுப்பது முக்கியம். இதனால் திட்டம் நிறைவேற்றும்போது சிறுத்தைகள் தாக்குதல்களைத் தவிர்க்க கவனம் செலுத்த வேண்டும்.

4 மாதங்களில் பலியான 218 சிறுத்தைப் புலிகள்... குபீரென 40 சதவிகிதம் அதிகரித்த காரணம்!

2019-ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் இந்தியாவில் 218 சிறுத்தைப் புலிகள் இறந்துள்ளன. கடந்த ஆண்டு 500 சிறுத்தைகள் இறந்திருக்கின்றன. அதனுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டின் சிறுத்தைகள் இறப்பு 40 சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. 2009-ம் ஆண்டிலிருந்து இதைக் கணக்கெடுத்து வரும் லாப நோக்கற்ற அமைப்பான வனவிலங்கு பாதுகாப்புச் சங்கத்தின் (Wildlife Protection Society of India - WPSI) தரவுகள் தெரிவிக்கின்றன. அந்தக் கணக்கெடுப்பின்படி, இந்த வருடம்தான் அதிகமாக சிறுத்தைப் புலிகள் இறப்பைச் சந்தித்திருக்கின்றன.

சிறுத்தைப் புலி

2018-ம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்புச் சங்கம் (WPSI) தரவரிசைப்படி, இந்தியாவில் குறைந்தபட்சம் ஒரு சிறுத்தை, ஒவ்வொரு நாளும் கிணறுகளில் சிக்கியோ, அடித்தோ, வாகனங்களில் அடிபட்டோ இறந்திருக்கிறது. இவ்வளவு விலங்குகளின் இறப்பு நிச்சயமாகக் கவலைப்பட வேண்டிய ஒன்றாகும். சிறுத்தைகளின் இறப்புக்கு முறையான அரசாங்க தகவல்கள் ஏதும் இல்லை. நம்பகமான அரசாங்க தரவு இல்லை. இந்தியாவில், பெரிய பூனை என்று கூறப்படும் சிறுத்தைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் புலிகளைவிட, சிறுத்தைப் புலிகள்தான் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாக விலங்கியல் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். 

இறந்த சிறுத்தைகளில் 16 சதவிகிதம், ரயில் மற்றும் சாலைகளில் அடிப்பட்டும், வேட்டையாடப்பட்டும் இறந்தவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு 41, 2015-ம் ஆண்டு 51, 2016-ம் ஆண்டு 51, 2017-ம் ஆண்டு 63, 2018-ம் ஆண்டு 80 என்ற எண்ணிக்கையில் ரயில் மற்றும் சாலைகளில் சிறுத்தைப் புலிகள் இறந்துள்ளன. இதுதவிர, சிறுத்தைகள் இறப்புக்கும் இந்தியர்களின் மின் கட்டமைப்புக்கும் உள்ள தொடர்பாகும்.

'பாதிக்கப்படக்கூடியது' என, சர்வதேச இயற்கை பாதுகாப்புக்கான ஒன்றியம் நிர்வகித்து வரும் ‘ரெட் லிஸ்ட்’ பட்டியலில், பாந்தெரா பர்டஸ் (சிறுத்தை அறிவியல் பெயர்) இடம் பெற்றிருக்கிறது. மேலும், இந்திய வன விலங்கு பாதுகாப்பு சட்டம் - 1972-ன் கீழ் வகைப்படுத்தப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பூனைகள் என அழைக்கப்படும் சிறுத்தைகள் வனத்தின் நல்வாழ்வைக் கண்முன் காட்டும் ஒரு கருவியாகும். மேலும், அவை நாட்டின் மறைமுக பொருளாதாரத்துக்கும் உதவியாக இருக்கின்றன. விலங்கியல் நிபுணர்கள் "சிறுத்தைகள் இருப்பது வன ஆரோக்கியத்தின் குறியீடு” என்றும் சொல்வது உண்டு. இப்போது வனங்கள் அழிந்து, சிறுத்தைகள் உணவுத் தேவைக்காக காட்டைவிட்டு வெளியே வருகின்றன. இதனால் மனித - சிறுத்தை மோதல்களும் ஆங்காங்கே நிகழ்கிறது. வனம் ஆரோக்கியமாக இருந்தால் அவை வனத்தைவிட்டு வெளியே வராது.

புலி

பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் நிறைவேற்றப்படும் திட்டங்கள்! 

உள்கட்டமைப்பு திட்டங்கள் வளரும் நாட்டுக்கு மிக முக்கியமான ஒன்று. ஆனால் சிறுத்தைகள், வனங்களைப் பாதுகாக்க, அதன் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் முறையான திட்டங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், முறையற்ற நவீனத்துவம் கிராமப்புற பகுதிகளை அடையும்போது வன விலங்குகளில் பாதுகாப்பில் சிக்கலை ஏற்படுத்துகிறது.

வனவிலங்குகளுக்கான தேசிய நல வாரியம், இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் 519 திட்டங்களுக்கு அனுமதியளித்திருக்கிறது. அத்தகைய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதால், இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைகிறது. அங்கே செயல்படுத்தப்படும் திட்டங்கள், நாட்டின் நீர் வளங்கள் மறைந்து, புவி வெப்பமடைதலைத் துரிதப்படுத்துகிறது. பாதுகாக்கப்பட்டவை என்று அறிவிக்கப்பட்ட பகுதிகள் சுற்றுச்சூழலில் மிக முக்கியப் பங்காற்றுபவை. பல்லுயிர்களின் களஞ்சியமாகவும் நீர்ப்பாசனங்களுக்கு உதவியாகவும் இருக்கின்றன. அங்கு கரியமிலவாயு பிரிக்கப்படுவதுடன், பருவநிலை மாற்றமும் குறைகிறது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் சிறுத்தைகள் மற்றும் பிற வனவிலங்குகளின் உயிரை எடுத்துக்கொள்கின்றன. 

2014-ல் இந்திய குடும்பங்களில் 70 சதவிகிதம் நபர்களிடம் மட்டுமே மின்சார இணைப்பு இருந்தது. இப்போது, 2019-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 100 சதவிகிதம் எட்டப்பட்டிருப்பதாக, அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலி

காவு வாங்கும் மின்சாரம்!

மின்சாரம் பரவலாக நாடு முழுவதும் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைவது அதிகரித்துவிட்ட நிலையில், மின்சாரத்தால் இறக்கும் சிறுத்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. 2017-ம் ஆண்டில் 0.9 சதவிகிதம், 2018-ல் 1.2 சதவிகிதமாக இருந்த மின்சாரம் தாக்கி இறந்த சிறுத்தைகளின் விகிதம், 2019 முதல் நான்கு மாதங்களில் 2.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என டபிள்யு.பி.எஸ்.சி தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விளை நிலங்களை வன விலங்குகள் நாசம் செய்யாமல் இருக்கப் பலரும் மின் வேலி அமைப்பதால், அதில் சிக்கி விலங்குகள் அதிகமாக உயிரிழக்கின்றன. இந்த விஷயங்கள் பெரும்பாலும் வெளியில் தெரிவதில்லை. சிறுத்தை பாதுகாக்கப்பட வேண்டிய விலங்காக இருப்பதால் மக்கள் வெளியில் சொல்லத் தயங்குகின்றனர். இது போக புலியைவிடச் சிறுத்தையின் உடல் சிறியது என்பதால் எளிதாக மக்கள் அப்புறப்படுத்திவிடுகின்றனர். 

மனித - சிறுத்தை மோதலைத் தவிர்ப்பது எப்படி?

மின் வழித்தடங்கள், ரயில்வே பாதைகள் மற்றும் சாலைகளால் வனப்பகுதிகள் துண்டாடப்பட்டு, உணவு தேடி சிறுத்தைகள் மனித இடத்துக்குள் வருகை தருகின்றன. மனித மோதல்களால் இறக்கும் சிறுத்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. 2014-ல் 27, 2015-ம் ஆண்டில் 33, 2016-ல் 31, 2017-ல் 28 மற்றும் 2018-ம் ஆண்டில் 35 என்ற விகிதத்தில் இருந்த மனித சிறுத்தைகளின் மோதல்களின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலேயே 18 என்ற எண்ணிக்கையில் இருப்பது கவலையளிப்பதாக இருக்கிறது. 

புலி

சிறுத்தைகளைப் பாதுகாப்பதில் மனித - சிறுத்தை எதிர்கொள்ளலைத் தடுப்பது முக்கியமானது. இதனால் உள்கட்டமைப்புத் திட்டம் நிறைவேற்றும்போது, சிறுத்தைகள் தாக்குதல்களைத் தவிர்ப்பது, வன வாழ்வுக்கான தடுப்பு நடவடிக்கைகளை வழங்குவது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் கால்நடைகளை சிறுத்தை தாக்கினால், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இந்திய சட்டத்தில் இழப்பீடு தர அனுமதி இருக்கிறது. ஆனால், இழப்பீடு நியாயமாகவும் வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். வன உயிரினங்கள் வாழும் பகுதியில் மின்சாரக் கம்பியை பூமிக்கடியில் புதைத்தபடி கொண்டு செல்ல வேண்டும் என்றார். நாடு முழுவதும் சிறுத்தைகளைக் காக்க முழு அளவிலான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், இதுபோன்ற மிகப்பெரிய கொலைகளுக்கு எந்த விதமான தீர்வுகளும் இல்லை என்பதே உண்மை. 

 


டிரெண்டிங் @ விகடன்