கால்நடை மருத்துவம் படிக்க நீட் அவசியமா? - விளக்கும் துணைவேந்தர்! #LetsLearn | Doubts and Questions about Veterinary and Animal Science

வெளியிடப்பட்ட நேரம்: 12:14 (13/06/2019)

கடைசி தொடர்பு:13:12 (13/06/2019)

கால்நடை மருத்துவம் படிக்க நீட் அவசியமா? - விளக்கும் துணைவேந்தர்! #LetsLearn

கால்நடை மருத்துவர்களின் தேவை என்பது, இன்றைய நிலவரப்படி 5,000 மாடுகளுக்கு ஒரு கால்நடை மருத்துவர் வேண்டும் என்பது ஒரு பொதுக்கணக்கு.

கால்நடை மருத்துவம் படிக்க நீட் அவசியமா? - விளக்கும் துணைவேந்தர்! #LetsLearn

இந்தியாவின் முதுகெலும்பாக விளங்குகிறது விவசாயம். அந்த விவசாயத்துக்கு மிக முக்கியமானவை கால்நடைகள். விவசாயத்தில் மட்டுமல்ல, மனித வாழ்வியலிலும் கால்நடைகளின் பங்கு மிகப்பெரியது. காட்டில் வேட்டையாடும் விலங்குகள் முதல் ஒவ்வொரு வீட்டிலும் ரேஷன் கார்டுகளில் சேர்க்கப்படாத உறுப்பினர்களாக வாழ்கின்றன. அளவிட முடியாத முக்கியத்துவம் பெற்ற இந்தக் கால்நடைகளைப் பாதுகாக்கவே, கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் படிப்புகள் உள்ளன. 

டாக்டர் சி பாலச்சந்திரன்

மருத்துவ சேவை என்று வரும்போது M.B.B.S-தான் ஞாபகம் வரும். ஆனால், கால்நடை மருத்துவம் பற்றித் தெரிந்துகொள்வதில் பலரும்  ஆர்வம் காட்டுவதில்லை. கால்நடை மருத்துவம் என்றால் என்ன, கால்நடை மருத்துவர் ஆவது எப்படி, இந்தத் துறையில் இருக்கும் படிப்புகள் என்னென்ன, வேலைவாய்ப்புகள் என்னென்ன... அரசுத் துறையில் இதற்கான முக்கியத்துவம் எப்படி உள்ளது உள்ளிட்ட பல தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சி.பாலசந்திரன்.

``கால்நடை வளர்ப்பு குறைந்திருக்கும் இன்றைய சூழலில் கால்நடை மருத்துவர்களுக்கான தேவை உள்ளதா?"

``வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு மூலம் நல்ல வருமானத்தை ஈட்டலாம். இதன்மூலம் ஆண்டுதோறும் நமக்கு வருமானம் கிடைக்கும். அதனாலேயே இது வேளாண் அமைப்பின் முக்கிய அங்கமாக இருக்கிறது. கால்நடை மருத்துவம் பயில, இன்று அநேகர்  விரும்புகிறார்கள். கால்நடை மருத்துவர்களின் தேவை என்பது, இன்றைய நிலவரப்படி 5,000 மாடுகளுக்கு ஒரு கால்நடை மருத்துவர் வேண்டும் என்பது ஒரு பொதுக்கணக்கு. கால்நடை மருத்துவரின் தேவை எனும்போது 2020-ல் தமிழ்நாட்டுக்கு 4,000 பேர் தேவை. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தத் தேவை மேலும் 3,000 பேர் வரை அதிகரிக்கும்." 

கால்நடை மருத்துவம் அறிவியல் பல்கலைக்கழகம்

``கால்நடை மருத்துவம் படிக்க நீட் தேர்வு எழுத வேண்டுமா?"

``தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவத்துக்கு மொத்தம் 360 இடங்கள் இருக்கின்றன. இதில் 85 சதவிகித இடங்கள் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே கொடுக்கப்படுகின்றன. இவர்களுக்கு நீட் தேர்வு கிடையாது. ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மீதம் உள்ள 15 சதவிகிதம், பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்காக ஆல் இந்தியா கோட்டா என நீட் மூலம் நிரப்பப்படுகிறது. முதுநிலைப் பட்டப் படிப்பிலும் 25 சதவிகித இடங்கள் மத்திய அரசுக்குக் கொடுக்கப்படுகின்றன. மீதம் உள்ள 75 சதவிகிதம் மாநில அரசின்கீழ் உள்ளது."

``கால்நடை சார்ந்து படிப்பவர்களுக்கு எந்தெந்தத் துறையில் வேலைவாய்ப்புகள் உண்டு?"

``அரசுத் துறையை எடுத்துக்கொண்டால், கால்நடைப் பராமரிப்புத் துறையில் கால்நடை உதவி மருத்துவர் வேலையில் சேரலாம். இந்திய அளவிலும் கால்நடை மருத்துவருக்கான பல்வேறு பணியிடங்கள் உள்ளன. நிறைய ஆய்வகங்களிலும் அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் உள்ளன. தனியார் துறையைப் பொறுத்தவரை கோழிப்பண்ணை, குதிரைப் பண்ணை, தடுப்பு ஊசி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற இடங்களில் வேலைவாய்ப்புகள் உண்டு. சிலர் இந்திய ஆட்சிப் பணியில் இருக்கிறார்கள். கால்நடை மருத்துவம் மட்டுமல்ல தொழில்நுட்பம் படிப்பவர்களுக்கும் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உண்டு. பால்வளத் துறை, உணவு பதனிடும் துறை, கோழி இனம் சம்பந்தப்பட்ட துறை என அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளன."

``காவல் துறை, ராணுவத்தில் பிரத்யேக வேலைவாய்ப்புகள் உள்ளனவா?"

``இந்திய ஆட்சிப் பணி தேர்வு எழுதி மத்திய அரசுப் பணிகளில் சேரலாம். ராணுவத்தில் RVC போன்ற தனித்தேர்வுகள் இருக்கின்றன. அவற்றை எழுதி ராணுவத்தில் சேரலாம்."

Campus View of Indian Institute of Crop Processing Technology Thanjavur

``கால்நடை சார்ந்த படிப்புகளை, தொலைதூர கல்வி மூலம் படிக்க முடியுமா?"

``அடிப்படை கால்நடை மருத்துவப் படிப்பை (B.VSc) நேரடியாக மட்டுமே படிக்க முடியும். மேற்படிப்புகளை மட்டுமே தொலைதூரக் கல்வி மூலம் படிக்க முடியும். அதற்கு 15 பாடத்திட்டங்கள் வைத்திருக்கிறோம்."

``கால்நடை மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் படிக்க எவ்வளவு செலவாகும்?"

``தமிழ்நாட்டில் தனியார் கல்லூரி என்று எதுவும் கிடையாது. அரசுக் கல்லூரி மட்டுமே உள்ளது. B.Vsc பொறுத்தவரை 5 ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்தக் கட்டணமும் 95,955 ரூபாய். இதில் அரசு ஆணைப்படி SC/SCA/ST மாணவர்களுக்கு கல்விக் கட்டணமாகச் செலுத்தப்படும் 44,000 ரூபாய் கிடையாது. B.Tech படிப்புகளைப் பொறுத்தவரை 4 ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் 40,000 ரூபாய் மட்டுமே. இதிலும்  SC/ST/SCA மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்காக 16,000 ரூபாய் தள்ளுபடி உண்டு."


டிரெண்டிங் @ விகடன்