``குழந்தைத் தொழிலாளர்களை கண்டால் வீடியோ எடுங்கள்!'' - குழந்தைகள் நல ஆர்வலர் ஆன்ட்ரூ சேசுராஜ் | Child activist shares some techniques to reduce child labour

வெளியிடப்பட்ட நேரம்: 11:51 (13/06/2019)

கடைசி தொடர்பு:15:52 (13/06/2019)

``குழந்தைத் தொழிலாளர்களை கண்டால் வீடியோ எடுங்கள்!'' - குழந்தைகள் நல ஆர்வலர் ஆன்ட்ரூ சேசுராஜ்

`உங்கள் கடையில் குழந்தைகள் வேலைபார்ப்பதால்தான் நான் எதுவும் வாங்காமல் போகிறேன் என்பதை பதிவு செய்து விட்டு வாருங்கள்.''

ருடந்தோறும் ஜூன் 12 அன்று உலக குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்புத் தினத்தை அனுசரிக்கிறோம். ஆனால், நம் கண்களுக்கு முன்னால் குழந்தைகள் தொழிலாளிகளாக வேலை பார்த்துக்கொண்டிருந்தால்... என்ன செய்வதென்று தெரியாமல் கடந்து விடுகிறோம் இல்லையா...  2001 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இந்திய அரசு எடுத்த கணக்கெடுப்பின்படி, குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கிராமப்புறங்களில் 11.3 மில்லியனிலிருந்து 8 மில்லியனாகக் குறைந்திருக்கிறது. நகர்ப்புறங்களிலோ 1.3 மில்லியனிலிருந்து 2 மில்லியனாக உயர்ந்திருக்கிறது என்கிறது. 2011-க்குப் பிறகான நிலைமையை 2021-ல் எடுக்கப்படப் போகும் கணக்கெடுப்புதான் தெரிவிக்க வேண்டும். இந்த நிலையில், ஒரு குழந்தைத் தொழிலாளியை கண்ணெதிரே கண்டால் என்ன செய்ய வேண்டுமென்று சொல்கிறார் குழந்தைகள் நல ஆர்வலர் ஆன்ட்ரூ சேசுராஜ். 

குழந்தைத் தொழிலாளர்கள்

``இன்றைக்கு நம்மில் நிறைய பேருக்கு குழந்தைத் தொழிலாளர்கள் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு இருக்கிறது. டி.ஜி.பி. அலுவலகத்தில்கூட குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டுமென்பதற்காக நேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள். இதற்கு முன்னால் லேபர் டிபார்ட்மென்ட்டிலும் என்.ஜி.ஓ.க்களிலும்தான் இப்படியெல்லாம் செய்வார்கள். பல்வேறு துறைகளிலும் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்புத் தினம் என்பது பேசு பொருளாக மாறியிருக்கிறது. ஆனால், நிலைமை மாறியிருக்கிறதா என்றால், மிகப் பெரிய கேள்விக்குறிதான். 

குழந்தைகள் நல ஆர்வலர் ஆன்ட்ரூ சேசுராஜ்.இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் விவசாயத்திலும் குடும்பத் தொழில்களிலும்தான் குழந்தைத் தொழிலாளர்களை அதிகம் ஈடுபடுத்துகிறார்கள். 1992-ல்  இந்திய அரசாங்கம் ஐ.நா.வுடன் குழந்தைகள் உரிமை மீதான உடன்படிக்கையில் கையொப்பமிட்டது. இந்த உடன்படிக்கையின்படி குழந்தைகளைத் தொழிலாளர்களாக்குவது என்பதை, குழந்தைகள் உரிமைகள் மீதான வன்முறையாகப் பார்த்தது. அதனால், இந்தியா, 'எங்கள் நாட்டில் விவசாயத்தில் நிறைய குழந்தைகள் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களை உடனே நிறுத்த முடியாது. படிப்படியாக அவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, பள்ளிக்கூடம் அனுப்புவோம் என்கிற கண்டிஷனுடன் கையொப்பமிட்டது. இந்த உடன்படிக்கை நிகழ்ந்து 27 வருடங்களாகியும் அந்த கண்டிஷனைத் திரும்பப் பெறவே இல்லை. அதாவது, எங்கள் நாட்டில் குழந்தைகள் வேலைபார்க்கிறார்கள் என்று ஏற்றுக் கொண்டவர்கள், அவர்கள் அத்தனை பேரையும் அதிலிருந்து மீட்டு பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி விட்டோம் என்று சொல்லவே இல்லை. இன்றைக்கும் இந்தியா முழுக்க 10 கோடி குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கு வெளியே இருக்கிறார்கள். பள்ளிக்கூடம் செல்லாத எல்லாக் குழந்தைகளுமே அடுத்து ஏதாவது ஒரு வேலைக்குத்தான் செல்வார்கள் என்பது எங்களுடைய பார்வை'' என்றவர், அடுத்து பகிர்ந்துகொண்ட பாயின்ட் மிக மிக முக்கியமானது. 

``வருடந்தோறும் பத்தாவது ரிசல்ட் வரும்போதெல்லாம் மாணவர்களைவிட மாணவிகள்தான் அதிகம் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்வோம். தேர்ச்சி பெறுவது மட்டுமல்ல, தேர்வு எழுதுகிற எண்ணிக்கையிலும் மாணவிகள்தான் அதிகம் இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் பெண் குழந்தைகளைவிட  ஆண் குழந்தைகளின் விகிதம்தான் அதிகம். ஆனால், தேர்வு எழுதுகிற எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறார்கள். அப்படியென்றால், அந்த ஆண் குழந்தைகள் பத்தாம் வகுப்பு வரைகூட பள்ளிக்கூடத்துக்கு வரவில்லை, குழந்தைத் தொழிலாளர்களாக வழி மாறிவிட்டார்கள் என்றுதானே அர்த்தமாகிறது. இதை நாம் யாருமே கண்டுகொள்வதும் இல்லை, பேசுவதும் இல்லை'' என்று ஆதங்கப்பட்டவரிடம், ஒரு குழந்தைத் தொழிலாளியைப் பார்த்தால் உடனடியாக பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன என்று கேட்டோம். 

குழந்தைகள்

``ஒரு தேநீர்க் கடையில் குழந்தைத் தொழிலாளியைப் பார்த்தீர்களென்றால், இரண்டு அல்லது மூன்று நாள்கள் அவ்வப்போது அவன் வேலை செய்வதை வீடியோ எடுத்து விடுங்கள். உங்களிடம் ஆதாரம் இல்லையென்றால் இது தொடர்பாக நீங்கள் போலீஸிலோ அல்லது லேபர் டிப்பார்ட்மென்ட்டிலோ புகார் கொடுத்தீர்களென்றால், `அந்தக் குழந்தையின் அப்பா எங்கள் டீக்கடைக்கு வந்திருந்தார். அவரைப் பார்க்கத்தான் அந்தச் சிறுவன் அங்கு வந்தான்' என்று மழுப்பி விடுவார்கள். அல்லது 1098-க்கு போன் செய்து தகவல் சொல்லி விடுங்கள். அவர்கள் லேபர் டிப்பார்ட்மென்ட்டில் இருக்கிற லேபர் இன்ஸ்பெக்டருடன் வந்து சம்பந்தப்பட்ட குழந்தைத் தொழிலாளியை மீட்டு விடுவார்கள். இந்த அளவுக்கு உங்களால் செய்ய முடியவில்லை என்றால், குழந்தைத் தொழிலாளர்கள் வேலைபார்க்கிற கடைகளில் எந்தப் பொருளையும் வாங்காதீர்கள். அதே நேரம், `உங்கள் கடையில் குழந்தைகள் வேலைபார்ப்பதால்தான் நான் எதுவும் வாங்காமல் போகிறேன்' என்பதையும் பதிவு செய்து விட்டு வாருங்கள். `இப்படிச் செய்வதால் அந்தக் குழந்தையின் பொருளாதார வழியை அடைத்துவிட்டது போல் ஆகாதா' என்று நினைப்பவர்கள், இவர்களைப் பற்றிய தகவலை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் தெரிவித்துவிடுங்கள். அந்தக் குழந்தையின் பொருளாதாரம் மற்றும் கல்விக்கான இரண்டு உதவிகளையுமே அவர்கள் செய்வார்கள்'' என்று முடித்தார் ஆன்ட்ரூ சேசுராஜ். 


டிரெண்டிங் @ விகடன்