நிஜ யானைகளுக்குப் பதிலாக ஹாலோகிராம்கள்!- 'மாத்தியோசித்த' பழம்பெரும் சர்க்கஸ் | Legendary German circus replaces real animals with holograms

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (13/06/2019)

கடைசி தொடர்பு:17:20 (13/06/2019)

நிஜ யானைகளுக்குப் பதிலாக ஹாலோகிராம்கள்!- 'மாத்தியோசித்த' பழம்பெரும் சர்க்கஸ்

கறுப்பு வெள்ளை ஊமைப்படமாகத் தொடங்கிய சினிமாவை இன்று, ஒரு கிளிக்கில் கையில் இருக்கும் திரையில் பார்க்க முடியும். தொழில்நுட்பத்தால் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் என்பது எல்லா துறையிலும் கடந்த சில ஆண்டுகளில் நடந்திருக்கிறது. உலகமெங்கும் இயற்கை மற்றும் நம்முடன் வாழும் உயிர்களின் நலன் பற்றிய உரையாடல்கள் தொடங்கிவிட்டன. இருப்பினும், உலகின் பல இடங்களில் கேளிக்கைக்காக சர்க்கஸ்களில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இதற்காக எந்த விதமான ஒப்புதலுமின்றி கடுமையான பயிற்சிகள் விலங்குகளுக்குக் கொடுக்கப்படுகின்றன. இது தொடரக் கூடாது என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது. அப்படியான விமர்சனங்களைத்தான் ஜெர்மனியின் சர்க்கஸ் ரான்கல்லியும் (Circus Roncalli) பெற்றுவந்தது. இதற்கு, ஏதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்தது இந்தப் பழம்பெரும் சர்க்கஸ். விலங்குகளைப் பயன்படுத்துவதை 2017-ல் நிறுத்தியது. இருப்பினும் இன்று இந்த சர்க்கஸுக்கு சென்றால் யானைகள், குதிரைகள் என அனைத்தையும் பார்க்கலாம். ஆனால், இவை எதுவும் நிஜ விலங்குகள் கிடையாது. அனைத்துமே டிஜிட்டல் ஹாலோகிராம்கள். 

ஹாலோகிராம் சர்க்கஸ் யானை

இதற்காக, ப்ளூபாக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்திருக்கிறது சர்க்கஸ் ரான்கல்லி. 11 Optoma ஹாலோகிராம் புராஜெக்ட்டர்கள் மூலம் முப்பரிமாணத்தில் விலங்குகளைக் காட்டுகிறது இந்த சர்க்கஸ். இதனால், நிஜ விலங்குகள் இல்லையென்றாலும் அவை இருப்பது போன்ற உணர்வை இவர்களால் தரமுடிகிறது. சொல்லப்போனால், இதுதான் கூடுதல் பிரமிப்பைத் தருவதாகத் தெரிவிக்கின்றனர் பார்வையாளர்கள். பல பொழுதுபோக்கு வசதிகள் வந்துவிட்ட நிலையில், இதுபோன்ற முயற்சிகளால்தான் துவண்டுபோயிருக்கும் சர்க்கஸ்கள் மீண்டும் மக்களிடையே சென்றுசேரமுடியும்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க