மாம்பழ இட்லி, Mango walk... சென்னைக்கு அருகில் `மாம்பழங்கள் சூழ் உலகம்'! | An article on mango camping near Chennai

வெளியிடப்பட்ட நேரம்: 19:21 (13/06/2019)

கடைசி தொடர்பு:10:13 (14/06/2019)

மாம்பழ இட்லி, Mango walk... சென்னைக்கு அருகில் `மாம்பழங்கள் சூழ் உலகம்'!

மையமாக அமைந்திருக்கிறது 156 அடி நீள பிரமாண்ட சாப்பாட்டு மேஜை. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உட்கார்ந்து சாப்பிடக்கூடிய இந்த மேஜை வர்தா புயலால் வீழ்ந்த பண்ணை மரங்களிலிருந்து செய்யப்பட்டது.

மாம்பழ இட்லி, Mango walk... சென்னைக்கு அருகில் `மாம்பழங்கள் சூழ் உலகம்'!

ய்வில்லாமல் அதிர்ந்து அடங்கும் சென்னைப் புறநகரின் சாலை, நகரத்து பரபரப்புகளைக் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்த்து அமைதியாகிறது. கூடுவாஞ்சேரியிலிருந்து இடதுபக்கம் திரும்பி ஒத்திவாக்கம் நோக்கிப் பயணப்பட்டால், எஞ்சிய சந்தடிகளும் அடங்கிவிடுகின்றன. மொட்டைமலைகள் மழைக்காலத்தின் பச்சைத்தடங்களை அசைபோட்டபடி படுத்துக்கிடக்கின்றன. சேர்ந்தாற்போல இரண்டு வண்டிகள் போய்விடமுடியாத அசல் கிராமத்துச் சாலைகளும் அதில் அசராமல் அன்னநடை போடும் கால்நடைகளும்தான் இனி! அப்படியே வளைந்து நெளிந்து முன்னேறினால் வருகிறது `Hanu Reddy Raghava Farms' என்னும் தோட்டம். அதனுள் நுழைந்தால் `ஹாபிட்' படத்தின் குட்டி வீடு உள்ளே செல்லச்செல்ல பிரமாண்டமாக விரியுமே, அப்படிப் புறச்சூழலுக்கு சம்பந்தமே இல்லாமல் பசுமையாக விரிகிறது அந்தத் தோட்டம். 

சுற்றி எந்தப் பக்கம் பார்த்தாலும் மாம்பழங்கள் கொத்துக் கொத்தாகத் தொங்குகின்றன. மாம்பழம் பிடிக்காதவர்கள் (அப்படியோர் இனம் இப்போதும் இதற்கு முன்னும் இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் இல்லை!) வேண்டாவெறுப்பாக மூக்கைத் திருப்பிக்கொண்டாலும் அவற்றின் மணம் நாசியைத் தாண்டி சுவாசப்பைக்குள் இறங்கி போதையேற்றும். நாம் இந்த நொடி இந்தப் பண்ணையில் இருப்பதற்குக் காரணமும் இதே மாம்பழங்கள்தான்.

`மாம்பழத் திருவிழா' - இந்தப் பண்ணையில் நடத்தப்படும் இந்தக் கொண்டாட்டத்துக்கு நூற்றுக்கணக்கில் வந்திருக்கிறார்கள் பார்வையாளர்கள். வாசலில் எங்கெங்கு என்னென்ன என்பதை விளக்கும் பெரிய வரைபடம்தான் வரவேற்கிறது. அது சொல்லும் வழியிலேயே நாமும் சென்றுவிடலாம். உள்ளே நுழைந்ததும் கண்ணில்படுவது பல்லாங்குழி, கிட்டிப்புல்லு, பம்பரம் போன்ற மண்ணின் மைந்தர்கள்தான். கும்பல் கும்பலாக அவற்றை முயற்சி செய்து நாஸ்டால்ஜியாவிற்குள் மூழ்கி முத்தெடுக்கிறார்கள் 80ஸ், 90ஸ் தலைமுறைக் குழந்தைகள். நன்றாக ஆடினால் தங்கள் குட்டிக் குழந்தைகள் முன் சூப்பர் ஹீரோ/ஹீரோயினாகும் வாய்ப்பாயிற்றே!

மாம்பழங்கள்

இந்த கலாட்டாவைத் தாண்டிச் சென்றால் அலங்காரமாக அணிவகுத்து நிற்கின்றன மாட்டுவண்டிகள். அவற்றில் ஏற்றி பண்ணை முழுக்க ஒரு ரவுண்டு போவதற்கு ஏக கிராக்கி. அடித்துப்பிடித்து ஏறி ஒரு ரவுண்டு போய் வருபவர்களின் கண்களைப் பார்த்தால் தெரிகிறது நகரமயமாக்கலில் மாட்டுவண்டி சவாரி உட்பட எவ்வளவு எளிமையான விஷயங்களைத் தொலைத்திருக்கிறோம் என யோசித்தபடி நடந்தால் இப்போது மரங்களுக்கு நடுவே வந்திருப்போம். அப்படியே மனம் போனபக்கம் ஒருநடை போய் உங்களுக்கு வேண்டிய அளவு மாம்பழம் பறித்துக்கொள்ளலாம். வெளியேவிட விலை இங்கே மிகவும் கம்மிதான். 

ஞாயிற்றுக்கிழமை காலை இப்படியாகத் இயங்கத் தொடங்கும் இம்மாம்பழ சூழ் உலகம் நண்பகல் வரை பயங்கர சுறுசுறுப்பாக இருக்கிறது. `சண்டே காலைல எழுந்து இதெல்லாம் எப்படி? சரிப்படாதே' என யோசிப்பவர்களுக்கு இன்னொரு ரகளை ஆப்ஷனும் இருக்கிறது. கேம்பிங் நிறுவனமான `Exoticamp' சனிக்கிழமை மாலை முதல் அந்தப் பண்ணையில் தங்கும் வாய்ப்பைக் கொடுக்கிறது. இருளில் ரம்மியமாக வீற்றிருக்கும் மரங்களுக்கு நடுவே ஜம்மென டென்ட் போட்டு படுத்து உருண்டு, தூக்கம் வரவில்லையென்றால் எழுந்து ஒரு நடை போய், குட்டியாக ஒரு விளக்கு வைத்துக்கொண்டு புத்தகம் படித்து... மரங்களுக்கு இடையே தொங்கும் கயிற்று ஊஞ்சலில் அமர்ந்து தூரத்து நட்சத்திரங்களை வெறித்துப் பார்த்து... என குட்டி பட்ஜெட்டில் வீக்கெண்ட் ட்ரிப் முடித்துவிடலாம்.   

மாம்பழ தீம் திருவிழாவில் உணவு மட்டும் எப்படி விட்டுப்போகும்? மையமாக அமைந்திருக்கிறது 156 அடி நீள பிரமாண்ட சாப்பாட்டு மேஜை. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உட்கார்ந்து சாப்பிடக்கூடிய இந்த மேஜை வர்தா புயலால் வீழ்ந்த பண்ணை மரங்களிலிருந்து செய்யப்பட்டது. அதன் ஒருபக்கம் பரபரவென சூடாகத் தயாராகிறது சாப்பாடு. அலைந்து திரிந்த களைப்பில் வந்து உட்கார்ந்தால் மெனுவே சப்புக் கொட்ட வைக்கிறது.

மாம்பழங்கள்

மாம்பழத்துண்டுகள் தூவிய ஆம்லேட்டிலிருந்து ஆரம்பிக்கலாம். சாஸுக்குப் பதில் மாம்பழக் கூழ். ஆம்லேட்டை அதில் குழைத்து அடித்தால் மெல்லவே வேலை வைக்காமல் வழுக்கிக்கொண்டு இறங்குகிறது. அதன்பின் மாம்பழ மக்ரூனும் மாம்பழக் கேசரியும்! அதையும் ஒரு ரவுண்டு கட்டிவிட்டுவந்தால் மாம்பழத் துண்டுகள் புதைந்து மினுமினுக்கும் இட்லி, மாம்பழ மசால் தோசை, இலை அடை, மாம்பழ உப்புமா எனச் சிறுகுடல், பெருங்குடல் எல்லாவற்றுக்கும் செம வேட்டை காத்திருக்கிறது. அனைத்தையும் ஒருகை பார்த்துவிட்டு ஒதுங்கினால் கைப்பிடித்து இழுக்கிறது மாம்பழ ஐஸ்க்ரீம். நிஜ மாம்பழத்தை அப்படியே உறைகுளிரில் வைத்தெடுத்து வெட்டித் தருகிறார்கள். குளிரக் குளிர தோலோடு சாப்பிட்டால் மொத்த உடம்பும் நமக்கு நன்றி சொல்லும். இன்னும் இரண்டு வாரங்களுக்கு 'மாம்பழத் திருவிழா' நடக்க இருப்பதால் ஒரு நடைபோய் சாப்பாட்டை வெளுத்துவாங்கிவிட்டு வரலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்