``பர்மாவுல இருந்து விரட்டிட்டாங்க...!’’ - மதுரை பர்மா இடியாப்பக் கடை சகோதரிகளின் கதை | Story about Madurai's famous Burma Idiyappam stall run by two sisters

வெளியிடப்பட்ட நேரம்: 16:51 (14/06/2019)

கடைசி தொடர்பு:19:48 (14/06/2019)

``பர்மாவுல இருந்து விரட்டிட்டாங்க...!’’ - மதுரை பர்மா இடியாப்பக் கடை சகோதரிகளின் கதை

"முன்ன கஷ்டப்பட்டோம். அந்த கஷ்டத்தைப் போக்கினது இடியாப்பம்தான். எங்க கைப்பக்குவம்தான் எங்களை வாழ வைக்குது!"

``பர்மாவுல இருந்து விரட்டிட்டாங்க...!’’ - மதுரை பர்மா இடியாப்பக் கடை சகோதரிகளின் கதை

கிறுகிறுக்க வைக்கும் வாகனங்களின் சப்தம். தூரமாகப் பார்த்தால் பிரமாண்ட கிறிஸ்துவ தேவாலயம். அக்கம் பக்கம் தனியார் மருத்துவமனையும் பல வகையான வியாபார கடைகளும் இருக்கின்ற ஒரு பரபரப்பான சாலை அது. தூரத்தில் ஒரு கடை... அருகே போனால் அவியலின் வாசனையும், சூடாக எடுத்து வைக்கும் இடியாப்பத்தின் மணமும் நம்மைச் சொக்க வைக்கிறது. இடம் மதுரை கீழவெளி வீதி, கடை: பர்மா கடை.

இடியாப்பக் கடை

மதுரையில் பல்வேறு இடங்களில் பர்மா இடியாப்ப கடையின் கிளைகள் இருக்கிறது. ஆனால், நாம் பார்க்கப்போகும் பர்மா கடையின் ஆணி வேர் பர்மாவிலிருந்து ஆரம்பித்தது. பர்மாவிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஒரு குடும்பம், மதுரை சி.எஸ்.ஐ மிஷன் மருத்துவமனை அருகில் ஆரம்பித்த இடியாப்ப கடை இன்று வரை பரம்பரை பரம்பரையாக நடத்தப்பட்டு வருகிறது. கடையில் இருந்த தேவிகா அக்காவிடம் பேசினோம்.

இடியாப்பக் கடை தேவிகா

“பர்மாவில் பயங்கர தாக்குதல்கள் ஏற்பட்டபோது, அங்கிருந்து பல குடும்பங்களை விரட்டியடிச்சாங்க. செலவழிக்க முடியாத அளவுக்கு இருந்த பணத்தையெல்லாம் விட்டுட்டு கிடைச்ச உடைகளைச் சுருட்டிட்டு ஓடி வந்தோம். முகாம் பாதிநாள், வீடு தேடி அலைஞ்சது பாதி நாள்னு இருந்தப்பதான் அப்பா இதய நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். நாங்கள் மொத்தம் 10 பேர். 4 ஆண் பிள்ளைகளும் 6 பெண்பிள்ளைகளும் இருந்தோம். அம்மாவைப் பெத்தவங்கதான் எங்களை இரக்கப்பட்டு வளர்த்தாங்க. பாட்டி பிச்சையம்மாள் பர்மாவில் இருக்கும்போதே இடியாப்பம் அவிக்கிறதுல கில்லாடி. எங்க அம்மா பேச்சியம்மாளும் பாட்டிகூட சேர்ந்து வேலை பார்த்தாங்க. பேரப் பிள்ளைகளைக் கரையேற்றப் பாட்டி ரொம்ப கஷ்டப்பட்டாங்க.

இடியாப்பம்

பாட்டி சுட்ட இடியாப்பம்தான் எங்களை வளர்த்துச்சு. பாட்டிக்கு வயசானதுக்கு அப்புறம் அம்மா அதை எடுத்து நடத்தினாங்க. தெரு ஓர கடையா இருந்தாலும் எங்க கடையில கூட்டம் பிச்சுக்கும். காரணம் பாட்டியோட ரெசிப்பி முறை, அம்மாவோட கைப்பக்குவம். அண்ணன், தங்கச்சினு நாங்க எல்லாரும் சேர்ந்து வேலை பார்த்தோம். அம்மாவுக்கு அப்புறம் நானும் அக்காவும் தனித்தனியா கடை போட்டோம். 1982-ல நான் கடையை இங்கன ஆரம்பிச்சேன். இப்ப வரைக்கும் சுவையில மாற்றத்தைக் கொண்டே வரலை. என் மகனும் பர்மா கடைங்கிற பேர்ல கடை போட்டான். அவன் நான் வெஜ் இடியாப்பம் தர்றான். ஆனா, என் கடையில எப்பவும் வெஜ்தான்.

இட்லியவிட லேசா இருக்கும் நம்ம இடியாப்பம். சீனி, தேங்காய்ப்பால், நாட்டு சர்க்கரை, தேங்காய்த் துருவல் தூவி வெஜ் சைட் டிஷ்ஷோட சாப்பிட்டா, நீங்க நிறுத்த மாட்டீங்க. இடியாப்பத்துக்குக் கொடுக்கிற வெஜ் கிரேவில பல காய்கறிகளை அரைச்சு கொடுக்கிறதுனால மக்கள் விரும்பி சாப்பிடுவாங்க. காலை 6 மணிக்கு ஆரம்பித்து 10 மணி வரை கடை இருக்கும், மறுபடியும் சாயந்திரம் 4 டு 10 மணி வரை கடை இருக்கும். நார்மல் மக்கள்ல ஆரம்பிச்சு சினிமா நடிகருங்க வரைக்கும் இங்க வந்து பார்சல் வாங்கிட்டு போவாங்க'' என்பவரின் முகத்தில் அத்தனை பெருமிதம்.

மதுரை பர்மா

தேவிகாவின் கடை எதிரே அவருடைய சகோதரி பத்மாவதியின் இடியாப்ப கடையும் உள்ளது. “அண்ணன் தம்பிகனு 10 பேர்ல நான் எட்டாவதா பொறந்தவ. அம்மாவுக்கு அப்புறமா அக்கா தேவிகா கடை தொறந்தா. அப்புறம்தான் மத்த உறவுக்காரங்க எல்லாம் கடையை தொறந்தாங்க. பாட்டியும் அம்மாவும் வைச்ச கடைத்தெருவுல தான் நாங்க கடை வைச்சிருக்கோம். அதனால பாரம்பர்ய சுவைக்கு பஞ்சமிருக்காது. நாங்கதான் கஷ்டப்பட்டோம். அதனால எங்க அத்தனை பேர் பிள்ளைகளும் நல்லா படிச்சிருக்காங்க. 20 இன்ஜினீயர்கள், 1 டாக்டர்னு நல்ல நிலைமையில இருக்காங்க.

சகோதரி பத்மாவதி

எங்க முன்னோர்கள் பிழைக்கிறதுக்காகப் பர்மாவுக்குப் போனாலும் எங்க சொந்த ஊரு சிவகங்கை மாவட்டம் மல்லாகோட்டை பக்கத்துல இருக்கிற கட்டாணிபட்டிதான் அங்க நடக்குற எருது கட்டு திருவிழாவுக்குச் சொந்தங்கள் அத்தனை பேரும் ஒண்ணுகூடுவோம். அதே மாதிரி ஆனி மாத திருவிழாவுக்கு 25 ஆடுகளை உரித்து படையல் போட்டு சந்தோஷமா சாப்பிடுவோம். 

இடியாப்பக் கடை

முன்ன கஷ்டப்பட்டோம். அந்த கஷ்டத்தைப் போக்கினது இடியாப்பம்தான். எங்க கைப்பக்குவம்தான் எங்களை வாழ வைக்குது!'' என்று நிறைவாகச் சொல்லி முடித்தார் பத்மாவதி.


டிரெண்டிங் @ விகடன்